பலன்தரும் பரிகாரத் தலம்: உள்ளம்கவர் கள்வன் ஸ்ரீகள்ளழகர் திருக்கோயில்
பரமசிவன், தர்ம தேவனிடம் ""உலக இயல்புப்படி தர்மம், அதர்மம் எல்லாம் கலந்து இருக்கும். இருப்பினும், தர்மத்தைக் காக்க வேண்டியது உன் பொறுப்பு. தண்டனை கிட்டும் என்ற பயத்தால் அதர்ம வழியில் மக்கள் செல்வதைத் த
பரமசிவன், தர்ம தேவனிடம் ""உலக இயல்புப்படி தர்மம், அதர்மம் எல்லாம் கலந்து இருக்கும். இருப்பினும், தர்மத்தைக் காக்க வேண்டியது உன் பொறுப்பு. தண்டனை கிட்டும் என்ற பயத்தால் அதர்ம வழியில் மக்கள் செல்வதைத் தவிர்க்க, தகுந்த உருவத்தை அளிக்கிறேன்'' என்றார்.
அதன்படி தர்ம தேவனுக்கு பயங்கரமான உருவம் கிட்டியது. ஆனால், தன் கோரமான உருவத்தால் வருத்தம் அடைந்த எமதர்மன், ""தன் உருவம்தான் மோசமாகிவிட்டது, தான் விழிக்கும்போது காணும் உருவமாவது அழகாக இருக்க வேண்டும்'' என்று எண்ணி அழகு தெய்வம் மகாவிஷ்ணுவை நினைத்தபடி மலை மீது தவம் செய்தான். அவனது வேண்டுகோளுக்கு இரங்கி, பெருமான், சுந்தரராஜனாக அழகுத் தெய்வமாக காட்சி அளித்தார்.
அழகனாக பெருமான் காட்சி அளித்த மலை அழகர் மலை என்றும், திருமாலிரும்சோலை என்றும் பெயர் பெற்றது. எமதர்மனின் விருப்பப்படி, பெருமாள் இங்கேயே சுந்தரராஜனாக கோயில் கொண்டார்.
மேலும், பெருமாளுக்கு தினமும் தான் பூஜை செய்ய வேண்டும் என்று அவன் கேட்டபடி, அர்த்தஜாம பூஜையை எமதர்மனே செய்யும்படி அருள் புரிந்தார் சுந்தரராஜப் பெருமான்.
உலக மக்கள் அனைவரும் உய்யும்படி, தர்மராஜனின் விருப்பப்படி, விஸ்வகர்மாவினால் வட்ட வடிவ சோமசந்த விமானத்துடன் கூடிய கோயில் இங்கே கட்டப்பட்டது.
மதுரையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது அழகர்கோயில். அழகர் மலை அடிவாரத்தில் பெருமாள் அற்புதக் கோலத்தில் காட்சி தருகிறார். பஞ்சாயுதங்களைத் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள் என ஐந்து ஆயுதங்களையும்) தாங்கிய நிலையில், நின்ற கோலத்தில் úஸவை சாதிக்கிறார். மூலவர் பெயர் பரமஸ்வாமி. ஸ்ரீதேவி, பூதேவி சகிதராகக் காட்சி தருகிறார். இங்கே பெருமாள் பெயருக்கேற்ப சுந்தரக் கோலம் காட்டுகிறார்.
தர்மராஜனுக்குக் காட்சி தருவதற்காக பெருமாள் ஸ்ரீவைகுண்டத்தை விட்டு கீழிறங்கி வந்ததால், பெருமானைக் காணாது தவித்தார் ஸ்ரீதேவி. பின்னர் விவரம் அறிந்து, அழகர் மலைக்கு வந்த மகாலட்சுமி, தானும் பெருமானுடன் எழுந்தருள்வதாகக் கூறி, பெருமாளின் கைப்பிடித்து, கல்யாண சுந்தரவல்லியாகக் கோயில் கொண்டாள்.
சுந்தரத் தம்பதியராக இந்தத் திவ்யத் தம்பதியர் எழுந்தருளி, இப்பகுதி மக்களுக்கெல்லாம் அருள் புரிந்தனர். எல்லோர் மனங்களையும் கொள்ளை கொண்டனர். உள்ளம்கவர் கள்வனாகத் திகழ்ந்த இந்தப் பெருமானை கள்ளழகர் என்றே அழைத்தனர். இதனால் பெருமான் கள்ளழகரும் ஆனார். இதனாலேயே இந்தப் பெருமானை நம்மாழ்வாரும் "வஞ்சக் கள்வன் மா மாயன்' என்று பாடினார்.
அழகர் மலைக் கள்வனைக் காதலித்தவள் ஆண்டாள். தன்னுடைய நாச்சியார் திருமொழியில், திருமாலிருஞ்சோலை மலை அழகருக்காகவே, சிந்துரச் செம்பொடிபோல் எனத் தொடங்கும் பாசுரங்களில் பாடிக் களித்து, "சுந்தரத் தோளுடையான்' என்று சிறப்பித்துக் கூறினாள். இந்தத் தலத்தின் சிறப்பு- ஆண்டாள் இங்கே அமர்ந்த கோலத்தில் காட்சி தருவதுதான்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற இந்தத் தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கே சந்நிதியில் அணையா விளக்கு ஒன்று எரிந்து கொண்டே இருக்கும்.
அனைத்து வளங்களும் நிறையும்: விவசாயம் செழிக்க, வியாபாரம் விருத்தி அடைய, தொடங்கும் தொழில் சிறப்புற என அனைத்துக்கும் பெருமானை வணங்குகிறார்கள். மழை வரம் வேண்டி பெருமான் சந்நிதியில் குவிவோர் பலர். மேலும் குடும்பத்தின் நலனுக்காக, கல்யாண வரம் வேண்டி, குழந்தை வரம் கேட்டு என பக்தர்கள் அழகர் மலை சுந்தரப் பெருமாளை வணங்குகிறார்கள். அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் ஓர் இடத்தில் கோட்டை கட்டி அதிலுள்ள தானியங்களை அழகருக்கு காணிக்கை செலுத்துகிறார்கள் விவசாயிகள்.
இந்த வகையில், காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் தோசை வார்த்து, பிரசாதமாகத் தரப்படுகிறது.
காவல் தெய்வம் கருப்பண்ணசுவாமி: இங்கே நாம் கோயில் வளாகத்துள் நுழைந்தவுடன் கருப்பண்ண சுவாமி சந்நிதியை தரிசிக்கலாம். வெறும் பதினெட்டு படிகளும் மூடப்பட்ட கதவுகளும்தான் இருக்கும். இவர், இங்கே காவல் தெய்வமாக விளங்குகிறார். பதினெட்டாம் படியான் என்று பக்தர்கள் போற்றும் இவரை வணங்கினால், நினைத்த காரியம்
கைகூடும்.
சைவ - வைணவ இணைப்புத் திருவிழா: மண்டூக மகரிஷிக்குக் காட்சி கொடுக்க, அழகர் கோயிலில் இருந்து பெருமாள் தேனூர் மண்டபத்தில் சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் உலா வருவார். இது சித்திரைத் திருவிழாவின் ஓர் அங்கமாக நடந்து வந்தது. மறுபுறம், மீனாட்சி திருக்கல்யாணம் மாசிப் பெருவிழாவில் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், திருமலை நாயக்கர் இரண்டு விழாவையும் ஒன்றாக்கி, சைவ - வைணவ ஒற்றுமைத் திருவிழா ஆக்கினார். அதுமுதல் சித்திரைத் திருவிழா மதுரையை ஆட்கொண்டது.
அழகர்கோயிலில் சித்திரைத் திருவிழா, ஆடிப் பெருந்திருவிழா, ஐப்பசி தலை அருவி உற்ஸவம்... இவற்றுடன் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பு என திருவிழாக்கள் களைகட்டுகின்றன.
திறந்திருக்கும் நேரம்: காலை 6-11 வரை, மாலை 4-8 வரை.
போன்: 0452-2470228
மூவுலகையும் அளக்க வாமனர் தம் திருவடியை உயர்த்தினார். அப்போது பிரம்மா திருமாலின் திருவடியை புனித நீரால் கழுவி பாத பூஜை செய்தார். அந்தப் புனித நீர் மெதுவாக அசைந்தசைந்து அழகர் மலையில் விழுந்து தெளித்தது. கங்கையிற் புனிதமான இந்த நீர் புண்ணிய தீர்த்தமாக மாறியது. இதில் அமர்ந்து மகரிஷி சுதபஸ் தியானம் செய்தார். அப்போது துர்வாசர் அங்கே வந்தார். பெருமாளின் தியானத்தில் இருந்த சுதபஸ், துர்வாசரை கவனிக்கவில்லை. இதனால் கோபமுற்ற துர்வாசர், அவரை தவளையாக (மண்டூகமாக) மாற சாபமிட்டார்.
இதனால் வருந்திய சுதபஸ், தான் பெருமாளின் தியானத்தில் இருந்ததைக் கூறி சாபவிமோசனம் வேண்டினார். அதனால் மனமிரங்கிய துர்வாசர், "வைகை ஆற்றில் தவம் செய். அழகர்கோவிலில் இருந்து பெருமாள் வருவார். அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்' என்றார்.
அதன்படி, அழகர் கோவிலிலிருந்து கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் மாலையை சூட்டிக் கொண்டு குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார் அழகர். அவரது பாத தூளி சாப விமோசனம் அளிக்கும் என்பதால் பக்தர்கள் அந்தப் புனித நீரை ஏற்றுக்கொள்கிறார்கள். பின்னர் சித்ரா பெüர்ணமிக்கு மறுநாள் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார்.