படியளந்த பரமன்:ஆதனூர் ஸ்ரீஆண்டளக்கும் ஐயன் கோயில்
பாற்கடலில் சயனித்திருந்தார் ஸ்ரீமந் நாராயணன். பெருமானைத் தரிசிக்க ஆவல் கொண்டு அங்கே வந்தார் பிருகு மகரிஷி. தரிசனம் முடிந்து பெருமானிடம் விடைபெற்றபோது, கருணையே உருவான ஸ்ரீமகாலட்சுமி, அவருக்கு மாலை ஒன்றைப் பரிசளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட பிருகு மகரிஷி, அந்த மாலையை இந்திரனுக்கு பிரசாதமாகக் கொடுத்தார். பெற்றுக் கொண்ட இந்திரனோ, அதனைத் தன் யானை ஐராவதத்தின் மீது வைக்க, என்ன கோபமோ... யானை அதனைத் தன் துதிக்கையில் எடுத்து வீசி எறிந்து காலில் இட்டு மிதித்தது.
கண்ணிமைக்கும் நொடிப் பொழுதில் நடந்துவிட்ட இந்தத் தவறு, பிருகு மகரிஷியைக் கோபத்தின் உச்சிக்கே இட்டுச் சென்றது. இந்திரன் இவ்வளவு அலட்சியமாக இருப்பானா என்ன...! அவனை பூவுலகில் மனிதப் பிறவி எடுக்கும்படி சபித்துவிட்டார்.
இந்திரன் சாப விமோசனம் வேண்டினான். அன்னை மகாலட்சுமியிடம் பணியுமாறு கூறினார் பிருகு. வைகுந்தத்தை நோக்கி ஓடினான் இந்திரன். அன்னை அவனை சமாதானப் படுத்தினார். ""நான் பூவுலகில் பிருகு மகரிஷிக்கு மகளாகப் பிறப்பேன். அங்கே பெருமாளுடனான திருமணக் கோலம் காண வரும்போது உன் சாபம் நிவர்த்தியாகும்'' என்றார்.
அவ்வாறே இத்தலத்தில் பிருகு மகரிஷிக்கு மகளாகப் பிறந்தார் ஸ்ரீலட்சுமி. பெருமாளின் கைத்தலம் பற்றி இந்திரனுக்குக் காட்சி கொடுத்தார். சயனக் கோலத்தில் பெருமாளின் தரிசனம் பெற்ற இந்திரனும் சாப விமோசனம் பெற்றான்.
பெருமாள் இவ்வாறு இத்தலத்தே பள்ளி கொண்ட கோலத்தில் அரங்கநாதனாக ஆண்டளக்கும் ஐயனாகக் கோவில் கொண்டார். தாயார் பார்கவியாக எழுந்தருளினார்.
ஸ்ரீரங்கத்தைப் போல், இத்தலத்துக்கு சற்று தொலைவில் இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும் ஓடுகிறது. பரமபதத்தில் விரஜா நதியும், இணையாக இரண்டு தூண்களும் உள்ளன. நமது ஆத்மா அங்கு சென்றதும் பன்மடங்கு பெருத்துவிடுகிறது. அப்போது அந்தத் தூண்களைத் தழுவிக் கொண்டோமானால் எமலோகம் இல்லாது போகும். நாம் நித்ய சூரிகள் கூட்டத்தில் சேர்வோம் என்பது நம்பிக்கை.
அதுபோல், திருவரங்கத்தை அடுத்து இங்கும் கருவறைக்கு முன் அர்த்தமண்டபத்தில் இரண்டு தூண்கள் உள்ளன. இவை மணத் தூண் எனப்படுகிறது. இவற்றை இம் மனித உடலோடு தழுவிக் கொள்வோம் என்றால் நாமும் நமனுலகு செல்லாதிருப்போம். இரட்டைப் படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்தத் தூண்களைப் பிடித்துக்கொண்டு பெருமாளின் திருமுகத்தையும் திருப்பாதத்தையும் தரிசித்தால், திருமணமாகாதவர்களுக்கு அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
கால வெள்ளத்தால் இக்கோயில் சிதைவுற்றது. ஒரு முறை... காஷ்மீர ராஜாவின் மகளுக்கு பேய் பிடித்ததாம். எவ்வளவோ முயன்றும் குணம் பெறாமல் தவித்தார். ஒருநாள் அரசனின் கனவில் பெருமான் தோன்றி, இந்த இடத்தைக் காட்டிக் கொடுத்து, தன் கோயிலைச் செப்பனிட ஆணையிட்டாராம். அதன்படி, ராஜாவும் இங்கே வந்து தங்கி, கோயிலை செப்பனிட்டார். அவர் மகளைப் பீடித்திருந்த பேய் விலகியது. அதுமுதல் இந்தத் தலம் பில்லி, சூனியம் விலக வேண்டிக் கொள்ளும் பரிகாரத் தலம் ஆனது என்பர்.
இத்தலத்துக்கென தனிப் பாசுரமோ, தனிப் பதிகங்களோ இல்லை. பெரிய திருமடலில் "ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன்' என்று ஒரே வரியில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
108 வைணவத் திருப்பதிகளில் ஒன்று. 3 நிலை ராஜகோபுரம் கொண்டுள்ளது கோயில். மகாவிஷ்ணுவை வேண்டி காமதேனு (ஆ) தவம் செய்த ஊர் என்பதால் ஆதனூர் (ஆ, தன், ஊர்) என்று பெயர் பெற்றது. எனவே காமதேனுவுக்கும், காமதேனுவின் மகள் நந்தினிக்கும் சந்நிதியில் சிற்பங்கள் உள்ளன.
கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன், நாபிக்கமலத்தில் பிரம்மா மேலெழ, பள்ளிகொண்ட கோலத்தில் தரிசனம் தருகிறார். மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி மற்றும் ஏடும் தாங்கியுள்ளார். பெருமாளின் இந்தக் கோலத்தை, உலகுக்குப் படியளந்த பெருமாள் ஓய்வாகப் பள்ளி கொண்ட கோலம் என்பர். இதற்குப் பின்னணியில் திருமங்கையாழ்வாரின் சரிதம் வருகிறது.
திருமங்கையாழ்வார் திருவரங்கத்தில் அரங்கநாதனுக்குத் திருமதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். கையில் இருந்த பொருள் எல்லாம் தீர்ந்துவிட்டது. கைங்கர்யத்துக்கு பணம் இல்லை. வேறு வழி தெரியாது, பெருமாளிடமே வேண்டினார். கொள்ளிடக் கரைக்கு வா பணம் தருகிறேன் என்றார் பெருமாள். ஆழ்வாரும் வந்து நின்றார். தலைப்பாகை அணிந்து கையில் ஓர் எழுத்தாணி, மரக்கால் சகிதராக ஒரு வணிகரைப் போன்று பெருமாள் வந்தார். இவரைக் கண்ட திருமங்கை ஆழ்வார், "நீர் யார்?' என்றார். வணிகரோ, "உம் பொருட்டே என்னை ஸ்ரீரங்கத்தில் உள்ள அழகிய மணவாளன் அனுப்பி வைத்தான்' என்றார். ""ஓ... அப்படியானால் காலி மரக்காலுடன் வந்திருக்கிறீரே...'' என்று கேட்டார் ஆழ்வார்.
அதற்கு அந்த வணிகர், இந்த மரக்காலைக் கையில் எடுத்து, வேண்டிய பொருளை மனதில் நினைத்து, "எம்பெருமானே சரண்' என்று மூன்று முறை சொன்னால் அப்பொருள் கிடைக்கும் என்றார்.
""மிக்க மகிழ்ச்சி. இங்கு உள்ளவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும். இந்த மணலை அளந்து போடும்'' என்றார் ஆழ்வார். சரி என்று சொன்னாலும், ஒரு நிபந்தனையை விதித்தார் வணிகர். ""அவர்களின் கூலிக்காக இந்த மணலை நான் அளந்து போடுகிறேன். உண்மையாக உழைத்தோருக்கு பொன்னாகவும் சோம்பலுடன் ஏமாற்றியவர்களுக்கு மணலாகவுமே காட்சி தரும்'' என்றார். அவ்வாறே அளந்துபோட, பெரும்பாலானவர்களுக்கும் அது மணலாகவே தெரிந்தது. இந்த வணிகன் ஒரு மந்திரவாதி என்று கூறி பலரும் அவரை அடிக்க ஓடி வந்தனர். வணிகர் பயந்து திரும்பி ஓடினார். ஆழ்வாரும் அவரைப் பின் தொடர்ந்து ஓடினார்.
இவ்வாறு ஓடிவந்த பெருமான், திருமங்கை ஆழ்வாருக்கு காட்சி கொடுத்து, மரக்கால், ஓலை, எழுத்தாணியுடன் ஆதனூர் ஆலயத்தே புகுந்து, வந்தது தாமே என்று காட்டி அருளினார். பெருமாள் அவ்வாறு ஓடிவரும்போது இவ்வூருக்கு (ஆதனூருக்கு) அருகில் உள்ள ஓர் ஊரில் ஓலை எடுத்து கணக்கு எழுதியதால் அவ்வூருக்கு "ஓலைப்பாடி' என்றும், கம்பீரமாக நடந்து வந்த ஊர்க்கு "விஜயமங்கை' எனவும், ஓடிவரும்போது திரும்பிப் பார்த்த ஊர் "திரும்பூர்' எனவும், திருமங்கையாழ்வார் விரட்டிக் கொண்டு வருகின்றானா இல்லையா என்று மயங்கி நின்ற ஊர் (மாஞ்சு போனது) "மாஞ்சேரி' எனவும், மரக்காலுக்குள் கை வைத்த ஊர் "வைகாவூர்' என்றும், புகுந்தது "பூங்குடி' என்றும், அமர்ந்தது "ஆதனூர்' என்றும் ஊருக்குப் பெயர்கள் இன்றும் இங்கே வழங்கப்படுகின்றன.
இத்தலத்தின் கோபுரத்தில் வாசுதேவன் சிலை உள்ளது. இவரின் திருவடி தெரிந்துவிட்டால் கலியுகம் முடிந்து பிரளயம் உண்டாகுமாம். இந்தச் சிலை வளர்ந்து வருவதாகச் சொல்கிறார்கள். இப்போது முழங்கால் வரை தெரிகிறது.
இலங்கையிலிருந்து அயோத்தி செல்லும்போது ஆஞ்சநேயர் இவ்வூரில் தங்கி இளைப்பாறியதாகவும், ராமபிரான் தனது திருவடியை வைத்துவிட்டுச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஆஞ்சநேயருக்கு வீர
சுதர்சன ஆஞ்சநேயர் என்று திருநாமம். ராமன் திருவடி இங்கே உள்ளது. இந்த ஆஞ்சநேயர் சிறந்த வரப்பிரசாதி.
திருவிழா: 10 நாட்கள் வைகாசி பிரம்மோற்ஸவம்.
பிரார்த்தனை: கல்வியில் சிறக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக பெருமாளை வழிபடுகின்றனர்.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவு.
திறக்கும் நேரம்: காலை 7-12, மாலை 4-8 வரை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.