வழக்கில் வெற்றி தரும் பைரவர்!
ஆதி சங்கர பகவத்பாதாள் தன்னுடைய "கால பைரவாஷ்டக ஸ்தோத்திரத்தில்' கால பைரவரை அஷ்ட சித்திகளும் அருளுபவர் என்று துதித்துப் பாடுகிறார்.
ஆதி சங்கர பகவத்பாதாள் தன்னுடைய "கால பைரவாஷ்டக ஸ்தோத்திரத்தில்' கால பைரவரை அஷ்ட சித்திகளும் அருளுபவர் என்று துதித்துப் பாடுகிறார்.
சிவஸ்வரூபமான காலபைரவருக்கு சிவன் ஆலயங்களில் தனி சந்நிதி உண்டு. பல்வேறு இடங்களில் தனி ஆலயங்களும் அமைந்துள்ளன. அவ்வகையில் தென் கயிலாயம் எனப் போற்றப்படும் திருவையாறுக்கு அருகில், காவிரியின் வடகரையின்பால் அமைந்திருக்கும் காலபைரவரின் திருக்கோயில் காசிக்கு நிகரானது என்று கூறப்படுகிறது.
காசியம்பதியில் மணிகர்ணிகா கட்டத்தில் அமைந்திருக்கும் காலபைரவரின் கோயிலில், கங்காநதியை நோக்கி தென்புறமாக பைரவர் அருள்பாலிக்கின்றார். தென்புறம் மயானம் உள்ளது. அதுபோன்றே வைரவன் கோயில் கிராமத்தில் அமைந்துள்ள பைரவரின் சந்நிதியும் காவிரி நதியை நோக்கி தென்புறம் பார்த்தவாறு அமைந்துள்ளது. எதிரில் மயானம் உள்ளது. சிவபெருமான், முருகனிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்க சுவாமிமலை சென்றபோது பைரவரை வைரவன்கோயில் கிராமத்தில் அமரச் செய்த திருத்தலமாகும்.
இந்தக் காலபைரவர் மிகவும் வரப்பிரசாதி. அனைத்து வகையான தோஷங்களுக்கும் பரிகாரம் செய்யலாம். இவருக்கு மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் மாலை 7 மணிக்கு மேல் ஹோமம், அபிஷேகம், ஆராதனைகள் சிறப்புற செய்யப்பட்டு வருகின்றன. அப்போது 108 தாமரையில் தேன் கலந்து சுவர்ணாகர்ஷண மந்திரமும், நவ பைரவ காயத்ரி மந்திரமும் ஓதி ஹோமம் செய்யப்படுகிறது. தினசரி ஒரு கால பூஜையும், ஞாயிற்றுக் கிழமையன்று ராகு கால பூஜையும் நடைபெறுகின்றது. பக்தர்கள் கால பைரவரின் அஷ்டமிதின ஹோமத்தில் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் நிறைவேறி அருளைப் பெறுகிறார்கள். முக்கியமாக வழக்கு விவகாரங்களில் வெற்றி பெற வேண்டிக்கொள்கிறார்கள். பல குடும்பங்களுக்கும் குல தெய்வமாக விளங்குகிறார் இந்த பைரவர். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் தற்போது திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அமைவிடம்: திருவையாறு - கும்பகோணம் வழித்தடத்தில் வைரவன் கோயில் கிராமத்தில் உள்ளது பைரவர் ஆலயம். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாகச் செல்லும் நகரப் பேருந்துகளில் சென்றால் கோயிலுக்கு அருகில் இறங்கலாம்.
தகவலுக்கு: 94427 30013.