முகப்பு
வெள்ளிமணி

ஆடிச் செவ்வாயில் அழகு தரிசனம்

தகடூர் என்று தமிழ் இலக்கியங்களில் காட்டப்பட்டுள்ள தருமபுரி, அதியமானால் ஆட்சி செய்யப்பட்டு புகழ் பெற்ற ஊர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:46 AM
பகிர்:

தகடூர் என்று தமிழ் இலக்கியங்களில் காட்டப்பட்டுள்ள தருமபுரி, அதியமானால் ஆட்சி செய்யப்பட்டு புகழ் பெற்ற ஊர். இங்குள்ள கோட்டையில் கல்யாண காமாட்சி அம்பிகை கோயில் திகழ்கிறது. இங்கே இறைவன் மல்லிகார்ச்சுனராக எழுந்தருளியுள்ளார். மூலவர் சுயம்பு மூர்த்தி. தல மரமாக வேளா மரம் இருந்துள்ளது. இங்கே இந்திரனின் யானை ஐராவதம், துர்வாசர், அர்ஜுனன் ஆகியோர் வழிபட்டு அருள் பெற்றதாக தல புராணம் கூறுகிறது. இந்தத் தலத்தை சுந்தரர் வைப்புத் தலமாக வைத்துப் பாடியுள்ளார்.

இங்கே ஆடி மாத மூன்றாவது செவ்வாய்க் கிழமையில் மட்டும் மாலை 4.30-9.00 மணி வரை அம்மனின் திருப்பாதம் முதல் திருமுடி வரை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் அம்மனின் திருமுக தரிசனம் மட்டுமே கிடைக்கும்.

நகரின் மத்தியில் அமைந்துள்ளது கோயில். இது, பல்லவ கட்டடக் கலையை வெளிப்படுத்துகிறது.

கி.பி. 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், மற்ற சிவாலயங்களைப் போல் அல்லாமல் ஈஸ்வரனுக்கு அருகிலேயே அம்பாள் பிரதிஷ்டை. ராமாயண பாத்திரங்களை விளக்கும் வகையில் கோயிலைச் சுற்றி 18 யானைகளின் சிற்பங்கள் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.

கால பைரவர் இங்கே குபேர பாகத்தில் சக்ர வடிவத்தில் காட்சி தருகிறார். இக்கோயிலில் நடராஜ மூர்த்தி, அஷ்டதிக் பாலர்களின் நடுவில் பாதம் மாறிய தாண்டவ நிலையில், 8 கரங்களுடன் உள்ளார்.

இங்குள்ள தொங்கும் தூண் சுமார் இரண்டரை டன் எடையில் கோயில் கருவறை முன் அமைக்கப்பட்டுள்ளது. புராணங்களை விளக்கும் வகையில் காலசம்ஹார மூர்த்தி சிற்பங்களும், ஐயப்பன் கோலத்தில் முருகனும் காட்சி தருவது தனிச்சிறப்பு.

பரிகாரம் மற்றும் பிரார்த்தனையாக வளர்பிறை அஷ்டமிகளில், கண் திருஷ்டியால் விளையும் குறைகள் விலகவும், தம்பதியரிடையே குடும்ப ஒற்றுமை ஓங்கவும், தொழில்- வியாபார வளர்ச்சிக்காகவும் ஸ்ரீசூலினி ராஜதுர்கா ஹோமம் செய்யப்படுகிறது.

ஆடி வெள்ளிக் கிழமை பூஜைகள் சிறப்பானவை. அப்போது, அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும் பூஜைகளும் உண்டு. இந்த வருட ஆடி மாதத்தில், இன்று (ஆடி 17) அம்மனுக்கு நாராயணி அலங்காரம் நடைபெறுகிறது. ஆடி -24 ஆடிப் பூரத்தில் கல்யாண காமாட்சி அலங்காரமும் ஆடி- 31 அன்று ஸ்ரீ கமலாத்மிகா அலங்காரமும் அம்மனுக்கு நடைபெறுகிறது. ஆடி அமாவாசையில், இங்கே 18 படிகளில் செய்யப்படும் பூஜையில் பெண்கள் மட்டும் கலந்து கொண்டு வழிபடுவார்கள். வளையல், மஞ்சள், புத்தாடைகள் வைத்து வழிபாடு செய்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, 18 படிகளில் பட்டு ஆடைகளைப் போர்த்தி ஒவ்வொரு படிக்கும் தேங்காய், பழம், பூ வகைகள் வைத்து வழிபாடு செய்வர். வேறு எங்கும் இல்லாத வகையில் ஆடி மாதத்தில் மட்டும் சூலினி ராஜ துர்காம்பிகை சுய ரூபக் காட்சி நடைபெறுகிறது. மாலை 4.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை இந்த அலங்காரத்தில் அம்மன் காட்சியளிப்பதைக் காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

இங்கே தொங்கும் தூணின் அடிப் பகுதியில் 2 செ.மீ. இடைவெளி உள்ளது. தூணில் உள்ள சிற்பங்கள் சிறப்பானவை.

தகவலுக்கு: 99943 62652, 04342-268640

முழு கட்டுரையைப் படிக்க →