செல்வ வளமும் சௌபாக்கியங்களும் தரும் வரலட்சுமி விரதம்!
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் பூஜைகளும் கூழ் ஊற்றுதலும் எனத் திருவிழா களை கட்டும்.
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் பூஜைகளும் கூழ் ஊற்றுதலும் எனத் திருவிழா களை கட்டும். பெண்களுக்கு மிக உகந்த இந்த பூஜைகள், வழிபாட்டின் நீட்சியாக ஆவணியிலும் தொடர்கிறது வரலட்சுமி விரதம். செல்வ வளமும் சுபிட்சமும் வீட்டில் நிறையச் செய்யும் மகாலட்சுமி வழிபாடு இது. வரம் தரும் அன்னையாக ஸ்ரீ மகாலட்சுமியை வழிபட்டு பலன் பெற வரலட்சுமி நோன்பு எனும் இந்த விரதம் பெண்களுக்காகவே ஏற்பட்டது.
வரலட்சுமி விரதத்தின் மேன்மையைச் சொல்லும் புராணக் கதைகள் பல உண்டு. அதில் ஒன்று இது. செüராஷ்டிர அரசில் ராணியாக இருந்த சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால் ஒருமுறை மகாலட்சுமியை அவமதித்தாள். கர்வம் கொண்டு அன்னை லட்சுமியை அவமதித்ததால், செல்வம் அனைத்தும் இழந்தாள். ராணி சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ கடாட்சத்தால் ஒரு முறை வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, விரதத்தைக் கடைப்பிடித்தாள். இதனால் மகிழ்ந்த அன்னை லட்சுமி, அவளுக்கு செüபாக்கியங்களை வழங்கினாள். தன் மகளின் சிறப்பான நிலை கண்டு, தானும் விரதத்தைக் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீட்டாள் சுசந்திரா.
ஒரு முறை, அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளானாள் தேவர் உலகின் கணதேவதை சித்ரநேமி. இவள் ஒருமுறை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டாள். அதைப் போல் தானும் விரதமிருக்க எண்ணினாள். அவர்களிடம் இருந்து கேட்டு முறைப்படி விரதமிருந்து சாப விமோசனம் பெற்றாள். இப்படி வரலட்சுமி விரதத்தின் மகிமையை விளக்கும் கதைகள் பல உண்டு.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், வரலட்சுமி நமஸ்துப்யம் என்ற கிருதியில் இந்த விரதம் குறித்த மேன்மையைப் பாடியுள்ளார்.
இவ்வாறு வளம் பல அருளும் இந்த பூஜையை, ஆவணி மாத பெüர்ணமிக்கு முன்னர் வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். இன்று அந்த நன்னாள்.
மணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யலாம். பூஜையின்போது, சிறுமியரும் உடனிருந்து நோன்புச் சரடைக் கட்டிக் கொள்ளலாம்.
பாரம்பரியப்படி விரிவாகச் செய்யமுடியாவிட்டால் பரவாயில்லை, தெரிந்த பாடல்கள் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சித்து, தகுந்த நிவேதனம் செய்து, நோன்புச் சரடை கையில் கட்டி, நிவேதன பிரசாதத்தை அனைவருக்கும் கொடுத்து, சுமங்கலிப் பெண்டிரை வணங்கி தானங்கள் செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
பாரம்பரியப்படி விரதம் இருந்து பூஜிக்க விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், பதினாறு வகை உபசாரங்களான ஷோடச உபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்திரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று செய்ய வேண்டும்.
முன்னதாக, வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைக்க வேண்டும். இடத்தை மெழுகிக் கோலமிட்டு, மண்டபம் அமைத்து அலங்கரித்து, ஒரு நுனி வாழை இலையில் நெல் பரப்பி, ஒரு தட்டில் அரிசியை வைத்து, அதன் மேல் கலசக் கும்பம் நிறுவ வேண்டும்.
அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பி, மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து கும்பத்தை அலங்கரித்து, வஸ்திரத்தை அணிவித்து, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை மேலே வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். சிலர் ஸ்ரீலட்சுமியின் முக பிம்பம் மட்டும் வைப்பதுண்டு. இல்லை என்றால், பூஜை அறை சுவரில் அம்மன் திருவுருவத்தை வரைந்து வழிபடலாம். கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் இடப்படுவதுண்டு. பூஜை முடிவில் மஞ்சள் கயிறை (சரடு) பூஜித்து கையில் கட்டிக் கொள்வர்.
மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்ட லட்சுமிகளாக வழிபடுவர். எட்டு வகை செல்வம் தருபவள் ஸ்ரீலட்சுமி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகளாக சாஸ்திரம் சொல்வதால், ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) வைத்து பூஜை செய்வர். இதற்கு தோரக்ரந்தி பூஜை என்று பெயர்.
பூஜை தொடங்கும் நாள், ராகு காலத்துக்கு முன் அல்லது மாலை வேளையில், தாம்பாளத்தில் அரிசி பரப்பி, கலசம் வைத்து, வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமியை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடன் அழைத்து வரவேண்டும். வீட்டின் உள்ளே அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிம்பத்தில் அமர்ந்து அருள் புரியுமாறு அன்னையை வேண்டி ஆவாஹணம் செய்ய வேண்டும். மங்களகரமான தோத்திரம் கூறி, மகாலட்சுமிக்கு உரிய பாடல்களைப் பாடலாம்.
இந்த விரதம் இடையூறின்றி நடைபெற வேண்டும் என விநாயகரைப் பிரார்த்தித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும். நோன்புக் கயிறை கும்பத்தில் சாற்றி, பூக்களால் அர்ச்சித்து, லட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி பூஜிக்கலாம். பிறகு நிவேதனம் செய்ய வேண்டும். பழவகைகளையும் நிவேதனம் செய்யலாம். சுமங்கலிப் பெண்டிருக்கு பிரசாதம் கொடுத்து ஆசி பெற்று, பூஜையை நிறைவு செய்யலாம்.
வரலட்சுமி விரதம் மேற்கொள்வோருக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும், செüபாக்கியங்களும் நிறையும்.மங்கல வாழ்வு தரும் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.