தியானம் என்பது இடையறாது இறைவனின் நினைவில் மூழ்கியிருப்பது. திளைத்திருப்பது; திருவாய் மொழிவது. இஸ்லாத்தில் ஐந்து கடமைகளான ஈமான், தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை. அடுத்து அதிகமான வணக்க வழிபாட்டில் சிறப்புடையது திக்ரு. திக்ரு என்பது இறைவனின் திருப்பெயர்களை, பெயர்களின் சிறப்புகளை சிந்தையில் பதித்து வந்தனை செய்வது.
திருக்குர்ஆனின் 21-1வது வசனம், "அல்லாஹ்வின் திக்ரு மேலானது'' என்று கூறுகிறது. ""தனித்தும் திக்ரு செய்யலாம். பலர் ஒன்று சேர்ந்து கூட்டாகவும் திக்ரு செய்யலாம்'' என்று அபூரஜின் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
"நாளெல்லாம் நாக்கு அல்லாஹ்வின் திக்ரில் திளைத்திருக்கட்டும்'' என்று ஹழ்ரத் அப்துல்லா இப்னு பஸ்கு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (நூல்: திர்மிதீ).
திக்ரு செய்யுமாறு திருக்குர்ஆனில் திரும்பத் திரும்பக் கூறப்படுகிறது. "நல்லொழுக்கம் நல்லறிவு உடையோர் நிலையிலும் (நிற்றல்) இருப்பிலும் (அமர்வு) படுக்கையிலும் அல்லாஹ்வைத் திக்ரு செய்கிறார்கள்'' என்று 3-191வது வசனத்தில் கூறும் இறைவன் 4-103வது வசனத்தில் அவ்வாறே அல்லாஹ்வைத் திக்ரு செய்யுமாறு எல்லோருக்கும் அறிவுரை கூறுகின்றான். அல்லாஹ்வின் அழகிய பெயர்களால் அவனை அழைத்திடுமாறு 7-180வது வசனம் கூற, 18-24 வது வசனம் இறைவனின் திருப்பெயரைத் திக்ரு செய்யக் கட்டளையிடுகிறது.
மூஸô நபியையும் ஹாரூன் நபியையும் நோக்கி, ""இருவரும் என்னைத் திக்ரு செய்வதில் சோர்ந்து விடாதீர்கள்'' என்று 20-42 வது வசனத்தில் எச்சரிக்கிறான் இறைவன். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறவர்களுக்கு அழகிய முன் மாதிரி அல்லாஹ்வின் தூதரிடம் உள்ளது. அந்தத் தூதரைப் பின்பற்றுவோர் அல்லாஹ்வை அதிகமாக திக்ரு செய்வார்கள்'' என்று கூறுகிறது 33-21 வது வசனம்.
அதிகமான திக்ரு என்பது அயர்வின்றி அல்லாஹ்வை முயன்று துதிப்பது; அதில் முன்னிலை பெறுவது.
"அல்லாஹ்வை அதிகமாக திக்ரு செய்யுங்கள்'' என்று 33-41 வது வசனமும், காலையிலும் மாலையிலும் திக்ரு செய்யும்படி 30-17 மற்றும் 33-42வது வசனங்களும் கூறுகின்றன. உலக ஆசைகளில் மூழ்கி திக்ரிலிருந்து திசை திரும்பிவிடக் கூடாது என்பதை ""விசுவாசிகளே! உங்களுடைய செல்வமும் சந்ததிகளும் அல்லாஹ்வின் திக்ரிலிருந்து உங்களைத் திருப்பிவிட வேண்டாம்'' என்று 63-9வது வசனம் எச்சரிக்கிறது.
திக்ரினால் பெறும் பயன்கள் பல. "அல்லாஹ்வை அதிகமாக திக்ரு செய்யும் ஆண்- பெண் இரு பாலருக்கும் அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியுள்ளான்'' (33.35). ""எவரின் நாவு திக்ரில் திளைத்துள்ளதோ அவர் சிரித்துக்கொண்டே சொர்க்கம் புகுவார்'' அறிவிப்பவர் - ஹழ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள். நூல் - அஹ்மத்.
தியானத்தில் சிறந்த திக்ரில் தினமும் எல்லா நிலைகளிலும் எல்லா வேளைகளிலும் திளைத்து துதித்து தூயோன் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.