முகப்பு
வெள்ளிமணி

தரணி போற்றும்  தரங்கிணி!

மதுரா நாயகனான கிருஷ்ணனின் ஜனனம் முதல் ருக்மிணி கல்யாணம் வரை நிகழ்ந்த லீலா விநோதங்களை ""கிருஷ்ண லீலா தரங்கிணி'' என்ற பெயரில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:26 AM
பகிர்:

மதுரா நாயகனான கிருஷ்ணனின் ஜனனம் முதல் ருக்மிணி கல்யாணம் வரை நிகழ்ந்த லீலா விநோதங்களை ""கிருஷ்ண லீலா தரங்கிணி'' என்ற பெயரில் வடமொழியில் இசை நாடகமாக அளித்தவர் ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற அருளாளர். அந்தக் காவியம் நமக்குக் கிடைத்த வரலாறு சுவையானது.
 ஆந்திரத்தில் பிறந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து பக்தி நெறியைப் பரப்பிய மகான்களில் நாராயண தீர்த்தரும் ஒருவர். சிறு வயதிலிருந்தே வடமொழி, சங்கீதம், நாட்டியம் முதலியவற்றில் பாண்டித்யம் பெற்று விளங்கிய அவர் முக்கியமாக வடமொழி பாகவதத்தையும், ஜயதேவரின் கீத கோவிந்த காவியத்தையும் ஆராய்ந்தவர். விதி வசத்தால் அவர் இளம் வயதிலேயே இல்லற வாழ்க்கையை விட்டு துறவு வாழ்க்கை மேற்கொள்ள நேரிட்டது. கோவிந்த சாஸ்திரி என்ற இயற்பெயர் கொண்ட அவர் வாரணாசி சென்ற தருணத்தில் சிவராமாநந்த தீர்த்தர் என்பவரிடம் முறைப்படி சந்நியாச தீட்சை பெற்று "நாராயண தீர்த்தர்' என்று அழைக்கப்பட்டார்.
 குருவின் ஆணைப்படி நாமபஜனம் செய்யும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள தமிழ்நாட்டிற்கு தீர்த்த யாத்திரையாகப் புறப்பட்டார். அப்போது கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். நிவாரணம் வேண்டி இறைவனை தியானித்து திருப்பதியில் தங்கியிருந்தபோது திருவையாற்றுக்கு அருகில் உள்ள úக்ஷத்திரத்திற்குச் செல்லுமாறு அசரீரி வாக்கு கிடைத்தது. அந்தத்தலத்தைத் தேடிச் செல்கையில், நடுக்காவேரி என்னுமிடத்தில் ஒரு விநாயகர் ஆலயத்தில் இரவு தங்கினார்.
 அன்றிரவு தீர்த்தரின் கனவில் திருமலைநாதன் தோன்றி, மறுநாள் காலை கண்விழித்தவுடன் முதலில் தென்படும் பிராணியைப் பின் தொடருமாறு அறிவுறுத்தினார். அவ்வாறே மறுதினம் மாலையில் தீர்த்தர் கண்களில் இரண்டு ஸ்வேத வராகங்கள் (வெள்ளைப் பன்றிகள்) தென்பட, அவற்றைத் தொடர்ந்து செல்ல, அவை பூபதிராஜபுரம் (தற்போது வரகூர் என்று அழைக்கப்படுகிறது) என்ற இடத்தில் உள்ள பெருமாள் ஆலயத்தில் நுழைந்து மறைந்தன. என்ன ஆச்சரியம்! ஆலயத்திற்குள் சென்ற தீர்த்தரின் வயிற்று வலியும் உடனே மாயமாய் மறைந்துவிட்டது. தனது நன்றிக்கடன் தீர்க்கும் விதமாக வரகூரிலேயே தங்கி, வேங்கடேசப் பெருமானின் அருளால் கிருஷ்ணலீலா தரங்கிணி என்ற கிரந்தத்தை அருளிச் செய்தார். அவ்வூரில் கோகுலாஷ்டமி உற்ஸவத்தை நடத்தி மகிழ்ந்தார்.
 இவருடைய பக்திக்கு வசமாகி, பாலகோபாலனே இவர் பாட்டிற்கு நர்த்தனமாடி, இவர் மகிமையை யாவரும் உணரச் செய்தான் என்பார்கள். கிருஷ்ண லீலா தரங்கிணியைத் தவிர இன்னும் பல பக்தி நூல்களை இயற்றியுள்ளார். இம்மகான், பஜனை சம்பிராதயங்களுக்கும் வழி வகுத்துக் கொடுத்துள்ளார். அவருடைய நூல்களை பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்திலும், தஞ்சை சரஸ்வதி மகாலிலும் காணலாம். வரகூரில் தங்கியிருந்த காலத்தில் தனக்குள்ள தெய்வீக சக்தியை, ஊரிலுள்ள மக்களின் துன்பங்களைத் துடைப்பதற்குப் பயன்படுத்தினார்.
 தரங்கிணி இடம் பெறாத கர்நாடக இசைக் கச்சேரிகள் முழுமை அடைவதில்லை என்று சொல்லும் அளவுக்கு அவரது கீர்த்தனைகள் புகழ் பெற்றவை. ஆந்திராவில் கிருஷ்ணா நதிக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் பிறந்து தமிழ்நாட்டில் காவிரிக்கரையைத் தேடி வந்தார் அவர். தான் இயற்றிய தரங்கிணியில் ""ராமகிருஷ்ண கோவிந்தேதி'' என்று தொடங்கும் கீதத்தில் நாமசங்கீர்த்தன பிரவாஹத்தில் ஸ்ரீராமநாமா கங்காநதியாகும், அதனுடன் சேர்ந்த கிருஷ்ண நாமா யமுனை நதியாகும், அவைகளுடன் சேர்ந்த கோவிந்தநாமா சரஸ்வதி நதியாகும். இந்த நாமசங்கீர்த்தன வெள்ளத்தில் மனத்தாலும், நாவாலும், உடலாலும் ஸ்நானம் செய்யலாம் என்று புண்ணிய தீர்த்தங்களையும், நாம சங்கீர்த்தன த்ரிவேணி மகிமையையும், இணைத்து நயம்படக் கூறிய அழகை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது.
 ஸ்ரீநாராயண தீர்த்த சுவாமிகளின் 267வது ஆராதனை விழா திருப்பூந்துருத்தியில் (தஞ்சை - திருவையாறு சாலையில் கண்டியூரிலிருந்து சுமார் 1.5 கி.மீ. தொலைவில் உள்ள பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலம்) உள்ள அவருடைய பிருந்தாவன வளாகத்தில் வருகிற பிப்ரவரி 16ல் தொடங்கி பிப்ரவரி 18 வரை நடைபெறுகிறது.
 விழாவில் நாம சங்கீர்த்தனமும், வித்வான்கள் பங்கேற்கும் கிருஷ்ண லீலா தரங்கிணிகளைக் கொண்ட கச்சேரிகளும் நடைபெறும். பிப்ரவரி 18ஆம் தேதி மாசி சுக்ல அஷ்டமி அன்று அவரது ஆராதனை அனுஷ்டிக்கப்படுகிறது.
 தரங்கம் என்றால் அலை, தரங்கிணி என்றால் நதி என்று பொருள். எனவே இந்த கிருஷ்ணா நதியில் மூழ்கி ஸ்நானம் செய்து பலன் பெற நாமும் திருப்பூந்துருத்திக்குச்
 செல்லலாமே!
 மேலும் தகவலுக்கு: 99440 82946/04362-234448

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.