முகப்பு
வெள்ளிமணி

தசரத குமாரன் தங்கிய தலம்!

ராவண வதம் முடிந்த பிறகு இலங்கையிலிருந்து அயோத்திக்கு திரும்புங்கால் ராமபிரான் தனது பரிவாரங்களுடன் தமிழகத்தில் சில இடங்களில் தங்கிச் சென்றதாக வரலாறு.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:53 AM
பகிர்:

ராவண வதம் முடிந்த பிறகு இலங்கையிலிருந்து அயோத்திக்கு திரும்புங்கால் ராமபிரான் தனது பரிவாரங்களுடன் தமிழகத்தில் சில இடங்களில் தங்கிச் சென்றதாக வரலாறு. அதில் ஒன்றுதான் அனப்பத்தூர் கிராமம். தற்போது அனுப்பத்தூர் என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் உள்ளது இந்த கிராமம்.
 கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் சேயாற்றின் நதிக்கரையில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம் செய்தார். அப்போது அவருக்கும் சமணர்களுக்கும் இடையே புனல் வாதம் ஏற்பட்டது. அப்போது ஆண் பனையை பெண் பனையாக மாற்றும் பாடலை ஓலையில் எழுதி அனுப்பினார் ஞானசம்பந்தர். அந்த ஏடு சேயாற்றை எதிர்த்துச் சென்று ஒதுங்கிய இடம் "செய்யாற்றை வென்றான்' என்றும், சமணர்கள் அனுப்பிய ஏடு போய்ச் சேர்ந்த இடம் "அனுப்பத்தூர்' என்றும் தல புராணம் கூறுகிறது.
 பல நூற்றாண்டுகளுக்கு முன் ராமபிரான் தங்கிய இத்தலத்தில் ஸ்ரீகோதண்ட ராம சுவாமிக்கு திருக்கோயில் எழுப்பப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. ராமபிரான் அர்ச்சா ரூபமாக சீதாப் பிராட்டியுடன் லட்சுமண சுவாமி சகிதமாக இந்தத் தலத்தில் சேவை சாதிக்கிறார். அற்புதமான கற்சிலைத் திருமேனி. உற்ஸவ மூர்த்தியும் மூலவருக்கு போட்டியாக மிக அழகுடன் காணப்படும் கோலம். பெரிய திருவடிக்கும், சிறிய திருவடிக்கும் சந்நிதி உண்டு. காலப்போக்கில் ஆலயம் பழுதடைந்த போதும் சாந்நித்யம் சிறிதும் குறையாமல் தன்னை நாடியவர்களுக்கு அருள் புரிகிறார் இந்த ராம பிரான்.
 இத்திருக்கோயிலில் தொடர்ந்து ஏழு சனிக் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. தற்போது இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருப்பணிகள் மீதமுள்ள நிலையில் வரும் ஜனவரி 18ஆம் தேதி மகாசம்ப்ரோட்சன வைபவம் நடைபெறுகிறது.
 நாமும் அனுப்பத்தூரில் அருளும் ராமபிரானை வழிபட்டு நிறை வாழ்வு பெறுவோம்.
 மேலும் தகவலுக்கு 98425 09012/ 99720 99609.
 அமைவிடம்: காஞ்சிபுரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். செய்யாறு - வந்தவாசி சாலையில் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகில் அமைந்துள்ளது அனுப்பத்தூர்.
 - எஸ். வெங்கட்ராமன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.