முகப்பு
வெள்ளிமணி

நன்றி செலுத்தும் திருநாள்!

வருடந்தோறும் தை மாதம், முதல் தேதி சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலத்திற்கு "மகர சங்கராந்தி' என்று பெயர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:00 AM
பகிர்:

வருடந்தோறும் தை மாதம், முதல் தேதி சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலத்திற்கு "மகர சங்கராந்தி' என்று பெயர். அதுவே "பொங்கல் திருநாள்' என்றும் சொல்லப்
 படுகிறது.
 தமிழர்களுக்குத் தலையான பண்டிகை பொங்கல் திருநாள். அன்றைய தினம் புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு பூஜை செய்து வழிபடுவது மரபு. பொங்கல் திருநாளன்று ஏன் சூரிய வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது?
 இவ்வுலகில் மிருகங்கள் உட்பட எல்லா உயிரினங்களின் வாழ்வுக்கும் தாவரங்கள் இன்றியமையாதவை. இந்தத் தாவரங்கள் வளர போதுமான நீர்வளம், வெப்பம் என அனைத்தையும் சூரியக் கடவுளின் மூலமாகவே நாம் பெறுகின்றோம். சூரியக் கதிர்கள் வெப்பத்தையும், ஒளியையும், மழையையும் தருவன. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில்தான் நாம் சர்வேஸ்வரனின் பிரதிநிதியாக விளங்கும் சூரிய பகவானை பொங்கல் திருநாளன்று பூஜிக்கின்றோம்.
 பௌதீகத்தில் சூரியன் மகா கொதிநிலையிலுள்ள வாயுக்கள் நிரம்பிய ஒரு கோளமாகவும் அது நமக்கு உணவும், உயிரும் தருவதற்கு தினமும் உதயமாவதாகவும் கருதப்படுகிறது. பௌதீகத்தின் ஆராய்ச்சிப் பொருளான இதே சூரியன் வேத சாஸ்திரங்களில் முக்கிய இடத்தைப் பெறுகின்றான். ஆயிரம் கிரணங்களுடன் ஒளியைத் தரும் சூரிய பகவானை அனைத்து தேவர்களின் வடிவமாய்ப் போற்றுவர். அனைவருக்கும் பொதுவான காயத்ரி மந்திரம் சூரியனுடைய ஆற்றலை நோக்கிக் கூறப்பட்டதாகும். ஈசனின் அட்ட மூர்த்தங்களில் (நிலம், நீர், தீ, காற்று, விண், சூரியன், சந்திரன், ஆன்மா) ஒருவராகத் திகழும் சூரியனை வணங்குவதென்பது சிவபெருமானையே வணங்குதல் ஆகும். இந்த உலகினில் நடக்கும் அனைத்துச் செயல்களையும் மேலே இருந்து சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருப்பவன் சூரியன்.
 உயிருள்ள, உயிரற்ற பொருள்கள் எல்லாவற்றிற்கும் ஆத்மா சூரியன் என்று ரிக்வேதம் சூரிய பகவானின் பெருமையைக் கூறுகிறது. சூரியனுடைய பெருமையையும், வழிபாட்டின் பயன்களையும் எடுத்துரைக்கும் ஸ்தோத்திர நூல்களில் "ஆதித்ய ஹ்ருதயம்" மிகச் சிறந்ததாகக் கருதப்
 படுகிறது.
 ராம - ராவண யுத்தத்தில் ராமபிரானுக்கு அகஸ்தியர் ஆதித்ய ஹ்ருதயத்தை உபதேசித்தார். உலக மக்களுக்கு இந்த உபதேசத்தை வெளிப்படுத்துவதற்காக ராமனை ஒரு நிமித்தமாக வைத்துக்கொண்டு அவருக்கு முதலில் உபதேசம் செய்து, ராமனைப் போல் மற்றவர்களும் எல்லாவித நன்மைகளும் அடைய ஆதித்ய ஹ்ருதய உபதேசத்தைப் பின்பற்ற வேண்டும் என்பது முனிவரின் விருப்பம். "இராமனைப்போல் நட' என்ற பழமொழிக்கு ஏற்ப நாமும் நம் செயல்களில் வெற்றி பெற சூரிய பகவானை வழிபட
 வேண்டும்.
 சூரிய பகவானைப் பற்றி பாடாத புராணங்களே இல்லை. கோயில் திருவிழாக்களில் கூட "சூரியப் பிரபை' என்ற அலங்காரத்தில் இறைவன் வீதி உலா வரும் வழக்கம் உண்டு.
 இவ்வாறு உயிர்களுக்கும், இயற்கைக்கும் இன்றியமையாத ஒளியினைக் கொடுத்து நல்வாழ்வு அளிக்கும் சூரியனுக்கு பல பெயர்கள் உண்டு. அவற்றுள் "தினமணி' என்ற பெயரும் ஒன்று. ராமச்சந்திர பிரபு சூரிய வம்சத்தில் தோன்றியவர். இதனையே தியாக பிரம்மம் தனது கீர்த்தனையில் ""தினமணி வம்ஸ திலக! லாவண்ய! தீன ஸரண்ய'' என்று அழகாகக் குறிப்பிடுகிறார். சூரிய பகவானிடமே நேராக உபதேசம் பெற்ற ஸ்ரீயாக்ஞவல்கிய மகரிஷி, தான் அருளிச் செய்த சூரிய கவச ஸ்தோத்திரத்தில் கண்களை "தினமணியானவன் ரட்சிக்கட்டும்'' என்று பிரார்த்திக்கிறார்.
 நம் வாழ்வில் ஓர் அங்கமாக இருந்து ஆரோக்ய வாழ்வினை அளிக்கிறார் ஆதவன். நமது கண்களாலேயே காணப்பெறும் கடவுள். அவர் பொங்கல் திருநாளில் மட்டுமல்லாமல் தினசரி வழிபட வேண்டியவரே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.