சோறுடைத்த சோழ நாட்டு கிராமங்களில் இருபதாம் நூற்றாண்டிலும் அறுவடை காலங்களில் விவசாயக் கூலிகளுக்கு நெல்லே கூலியாகக் கொடுக்கப்பட்டது. அறுவடை காலத்தில் அப்பகுதிகளில் கடை நடத்துவோரும் விற்ற பொருளுக்கு நெல்லையே விலையாகப் பெற்றனர்.
இஸ்லாத்திலும் விளைச்சலின் விகிதத்திற்கேற்ப தர்மம் செய்ய குர்ஆனின் 6:141வது வசனம் கூறுகிறது. "கொடிகள் படரப் பந்தலிடப்பட்டவற்றையும், படருவதற்குப் பந்தலிடப் படாதவற்றையும் தோட்டங்களையும் பேரீச்சையையும் பல தரப்பட்ட சுவையுடைய விவசாயத்தையும் தோற்றத்தில் ஒரே மாதிரியாகவும் சுவையில் ஒரே மாதிரி இல்லாத ஒலிவையும், மாதுளையையும் அல்லாஹ்வே படைத்தான். அவை பலன் தந்தால் அவற்றின் பலனை நீங்கள் புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் நாளில் அறுவடையில் ஒரு பாகத்தை (முறைப்படி தர்மமாக) கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்''.
மழை நீரில், வாய்க்கால் நீரில் விளையும் பொருட்களுக்குப் பத்தில் ஒரு பாகம் தர்மம் என்றும், மனிதனின் பல்வேறு முயற்சிகளின் உழைப்பில் விளையும் பொருட்களுக்கு இருபதில் ஒரு பாகம் தர்மம் என்றும் இஸ்லாமிய வித்தகர்கள் சட்டம் இயற்றியதற்கு சான்று பகர்கிறது ஜாபிர் (ரலி) அவர்கள் சாற்றிய முஸ்லிம், அபூதாவூத், நஸயீ நூல்களில் காணப்படும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் விதித்த ஏழை வரி - ஜகாத். ""ஆற்று பாய்ச்சல், மழை நீரில் விளையும் பொருட்களுக்கு பத்தில் ஒரு பாகமும், ஒட்டகம் மாடு முதலியவற்றைக் கொண்டு கவலை, வாளி முதலியவற்றால் நீரிரைத்து பாய்ச்சி விளையும் பொருட்களுக்கு இருபதில் ஒரு பாகமும் ஜகாத் விதித்தார்கள்''.
மதிப்பிடுவதில் திறமை பெற்றவர் பேரீச்சை, திராட்சை கொடிகளின் மகசூலைக் கணித்து அவற்றில் மூன்றில் ஒரு பாகத்தைச் சேதாரத்திற்கென்று கழித்து நிர்ணயித்தபடி ஜகாத் கணக்கிட வேண்டும். காய்கள் கனிந்ததும் ஜகாத்தைப் பெற வேண்டும் என்று மாலிக் இமாமின் முஅத்தாவில் குறிப்பிடப்படுகிறது.
சேமித்து வைக்க இயலாத, அழிந்து வீணாகும் காய் கனிகளுக்கு கட்டாய தர்மம் கிடையாது. உபரி தர்மம் கொடுப்பது உயர்ந்தது. நபிகள் பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில் மதீனாவாசிகள் பேரீச்சம் பழம் அறுவடை செய்ததும் அதில் சில குலைகளைப் பள்ளிவாசல் ஓரத்தில் தொங்க விடுவர். ஏழைகள் கம்புகளால் அடித்து உதிரும் பழங்களை எடுத்து உண்பர்.
""புறம்போக்கு, பொட்டல் நிலத்தைச் செப்பனிட்டு பயிர் செய்பவருக்கே அந்நிலத்தை உரிமையாக்கினார்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்'' என்ற அன்னை ஆயீஷா(ரலி) அவர்களின் அறிவிப்பும், இதன்படியே இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் தீர்ப்பளித்ததை உர்வா இப்னு ஜீபைர் (ரலி) அவர்கள் தெரிவிப்பதும் தெளிவாய் உள்ளன புகாரியில்.
யமன் நாட்டில் உற்பத்தியை விட உணவு தேவை மிகுந்திருந்ததால் அந்நாட்டின் ஆளுநராக இருந்த முஆது (ரலி) அவர்கள் யமன் வாசிகளுக்கு எளிதான சட்டைத் துணி, கம்பளி, போர்வை ஆகியவற்றை ஜகாத்துக்குரிய தொலிக் கோதுமை, சளம் ஆகியவற்றுக்கு பகரமாக கேட்டு மதீனாவிற்கு அனுப்பியதை அறிவிக்கிறது புகாரி.
ஜகாத் என்ற சொல்லுக்கு வளர்ச்சி என்றொரு பொருளுண்டு. நாமும் விளைச்சலுக்கு விதிக்கப்பட்ட ஜகாத்தை ஏழைகளுக்கு வழங்குவோம். திருக்குர்ஆனின் 2-276வது வசனப்படி தர்மங்களை வளர்ச்சியுற செய்யும் வல்லோன் அல்லாஹ் விளைச்சலைப் பெருக்கி வருவாயை விரிவாக்குவான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.