மீட்படைதல்...
திருச்சட்டங்களைக் கடைப்பிடிப்பதால் மட்டுமே மீட்படைய முடியாது. இயேசு கிறிஸ்துவே இக்கருத்தை ஆழமாகச் சொல்லியிருக்கிறார்.
திருச்சட்டங்களைக் கடைப்பிடிப்பதால் மட்டுமே மீட்படைய முடியாது. இயேசு கிறிஸ்துவே இக்கருத்தை ஆழமாகச் சொல்லியிருக்கிறார்.
கோவிலில் காணிக்கை செலுத்தவேண்டுமென்பது மோயீசன் கொடுத்த கட்டளை. அதை யூதர்கள் மிகவும் பற்றுறுதியோடு கடைப்பிடித்து வந்தார்கள். ஆனால் இயேசு இதே கட்டளையை புதிதாக மாற்றித் தருகிறார்.
நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள் என்கிறார் இயேசு. (மத்தேயு 5 :23-24). கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதை விட சகோதரர்களிடம் அன்புடன் இருப்பதே முக்கியம் என்கிறார். அன்பு இரக்கம் பரிவு ஆகியவைகளைக் கடைப்பிடிக்காமல் சட்டத்தை மட்டுமே போதித்த பரிசேயர்களையும் சதுசேயர்களையும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என்கிறார் இயேசு.
இப்படி உற்றார் உறவினருடன் சமாதானத்துடனும் அன்புடனும் இருப்பவர்களைப் பார்த்து,
"என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள். உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள். தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள். அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள். நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள். நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள். சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்"" என்பார். (மத்தேயு 25:34-36) ஆக நற்செயல்கள் கட்டாயம் தேவை என்பதை நமக்கு இயேசு நன்கு விளக்குகிறார்.
ஆக மீட்புப் பெற இயேசுகிறிஸ்துவின் மேல் விசுவாசமும் (பற்றுறுதி) அதன்மூலம் நாம் பெற்றுக்கொண்ட அருளில் நிலைபெற்று நிற்க நற்செயல்களும் தேவை என்பதே விவிலியத்தின் போதனை.
மீட்பு பெறுதல் என்பது நாம் கடவுளோடு கொண்டுள்ள அன்புறவைப் பொருத்தது. இந்த அன்புறவு எப்படி ஏற்படும் என்றால் நாம் கடவுள் மீது கொண்டுள்ள பற்றுறுதியாலும் விசுவாச வாழ்வாலும் நம்மையே நாம் கடவுளுக்கு அர்ப்பணிக்கும் வாழ்க்கை வாழ்வதாலும் எற்படும் உறவாகும்.
நேரிய உள்ளத்துடன் கடவுளைத் தேடுகிறவர்களும் கடவுளின் விருப்பப்படி வாழ்கிறவர்களும், வாழ்ந்தவர்களும் கடவுளின் மீட்பை நிச்சயம் பெறுவார்கள்.