அடியார் போற்றும் ஸகுண உபாசனை
உலகில் பிறந்துவிட்ட உயிரெலாம் உய்யும் பொருட்டு கருணை மழை பொழியும் இறைவன், தன்னை ஸகுண மூர்த்தியாகவே உபாசிக்கும் பக்தர்களுக்கு முதலில் அத்தகைய குணங்களையே அனுப்பி வைப்பாராம்.
உலகில் பிறந்துவிட்ட உயிரெலாம் உய்யும் பொருட்டு கருணை மழை பொழியும் இறைவன், தன்னை ஸகுண மூர்த்தியாகவே உபாசிக்கும் பக்தர்களுக்கு முதலில் அத்தகைய குணங்களையே அனுப்பி வைப்பாராம். மெய்யன்பர்கள் யாரோ அவர்களிடம் தன் மீதான பற்றும் பக்தியும் மேம்பட வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு நல்ல குணங்களை இறைவனே அனுப்பி வைக்கிறான் என்பர் பெரியோர். ஸகுண மூர்த்தியை சிந்தித்த மாத்திரத்தில், உண்மை (சத்தியம்), கருணை (தயை), பணிவு (விநயம்) உள்ளிட்ட குணங்கள் மெய்யன்பர்களிடம் தாமாகவே வந்து சேர்ந்துவிடும். அத்தகைய குணங்கள் நிறைந்த உள்ளத்தில் இறைவனும் தாமாகவே வந்து குடிகொள்கிறான்.
இத்தகைய நிலையை விளக்க ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஓர் உவமையைச் சொல்வார்...
பெரிய பண்ணை முதலாளி ஒருவர். அவரிடம் பல வருடங்களாக வேலை செய்து வருகிறான் ஒருவன். அவன் வீட்டில் திருமண வைபவம் நிகழ்கிறது. அதற்கு வேண்டிய பணம், பொருள் உள்ளிட்ட அனைத்தையும் கொடுத்து உதவுகிறார் முதலாளி. அந்த வேலைக்காரனுக்கு ஓர் ஆசை. தன் குடிசைக்கு திருமணத்தன்று தன் முதலாளி வந்து ஆசி வழங்க வேண்டும் என்று... இந்த ஆசையை அவன் வெளியிட்ட உடனே, அவன் மீதான அபிமானத்தில் அவரும் வருகிறேன் என்று கூறிவிட்டார்.
வேலைக்காரன் பரபரத்தான். முதலாளியின் வீட்டில் அவர் பயன்படுத்திய சோபா-நாற்காலியை தன் குடிசைக்குள் கொண்டு வந்து போட்டான். அவர் குடிசைக்கு வந்தவுடன் அவர் சோபாவிலேயே அவரை அமரச் செய்தான். அவர் வீட்டில் இருந்து இரவல் கேட்டு எடுத்து வந்த சந்தனக் கிண்ணத்தைக் காட்டி, அவர் கொல்லையில் இருந்து பறித்து வந்த தேங்காய் ஒன்றை அவருக்கே அளித்து, பரம திருப்தி அடைந்தான்.
இதைப் போல், பகவானுக்கு உகந்த குணங்களை முதலில் அவன் அருளால் பெற்று அவன் நம்மை அடைந்தவுடன் அந்த குணங்களாலேயே அவனை உபாசனை செய்யும் வழி எதுவோ அதுவே ஸகுண உபாசனை.