முகப்பு
வெள்ளிமணி

வெறுப்பு...

விருப்பமும் வெறுப்பும் மனிதர்களுக்கு மனிதர் வித்தியாசப்படுவதைப் பார்த்திருப்பீர்கள்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

விருப்பமும் வெறுப்பும் மனிதர்களுக்கு மனிதர் வித்தியாசப்படுவதைப் பார்த்திருப்பீர்கள்.

வாழ்க்கையில் நமக்குப் பிடிக்காத நபரையோ, செயலையோ, பொருளையோ பார்க்கின்ற போது நமக்கு ஏற்படுகின்ற கசப்பான, எரிச்சலூட்டும் உணர்வினை வெறுப்பு என்கிறோம்.

இந்த வெறுப்பு உணர்வினால் நமக்கு ஏதாவது நன்மைகள் உள்ளனவா?

திருவிவிலியம் சொல்கின்றது: ""நல்லார் பொய்யுரையை வெறுப்பர்'' (நீதிமொழிகள் 13:5).

இதன் மூலம் பொய்மையின் மீது நல்லவர்கள் கொண்ட வெறுப்பு உலகில் உண்மையை நிலைநிறுத்த உதவுகின்றது என்பது புரிகின்றது. இப்படிப் பல நன்மைகளை வரலாற்று மனிதர்களின் வெறுப்பு உணர்வுகள் நமக்குத் தந்திருக்கின்றன.

நமது தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் வன்முறை மீதான வெறுப்பு உலகுக்கு ஒரு புதிய பாதையையே வகுத்துத் தந்தது. அதுதான் அகிம்சை.  ஏற்றத் தாழ்வுகள் மீது டாக்டர் அம்பேத்கருக்கு இருந்த வெறுப்புதான் சுதந்திர இந்தியாவில் புதிய சமுதாயம் உருவாக தேவையான உன்னத சட்டங்களை இயற்றித் தந்தது.

தீண்டாமையின் மீது பெரியார் கொண்ட வெறுப்புதான் பலவகையான மூடப்பழக்க வழக்கங்களை மனிதர்களின் மனதிலிருந்து அகற்ற உதவி செய்தது.பிறருடைய துன்பத்தின் மீதும் நோயின் மீதும் அன்னை தெரசா கொண்ட வெறுப்புதான் அவரை உலகில் துன்பப்படுவோர்களுக்கெல்லாம் ஓர் அன்னையாக, நடமாடும் தெய்வமாக மாற்றித் தந்தது.

இருளின் மீது தாமஸ் ஆல்வா எடிசன் கொண்ட வெறுப்புதான் இன்று உலகம் முழுவதும் இருளிலும்கூட ஒளிர்ந்து கொண்டிருக்க அடிப்படைக் காரணமாக அமைந்தது.ஆகவே, வெறுப்பு என்பது நேர்மறை விளைவுகளையும் உண்டாக்கும். எதிர்மறை விளைவுகளையும் உண்டாக்கும். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதன் எடுக்கும் நிலைப்பாட்டைப் பொறுத்து இது அமைகின்றது. இதைப் புரிந்து கொண்டால் நமக்கு நன்மை.

வரலாற்றில் இன்றளவும் வெறுப்பு உணர்வால் எதிர்மறை விளைவுகளைச் சந்தித்த நபர்களின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம், வெறுப்பு உணர்வு கொள்ளும்போது நமக்கு நாமே அழிவை வரவழைத்துக் கொள்கிறோம் என்பதுதான்.

நாம் வாழும் வரை யாரும் நம்மை வெறுக்கக்கூடாது; நாம் மறைந்த பின்னும் நம்மை யாரும் மறக்கக்கூடாது என்று வாழ்ந்தவர்கள்தான் நேர்மறை விளைவுகளைத் தங்கள் வெறுப்பு உணர்வால் உண்டாக்கி விட்டுப் போயிருக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டால் நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது, ஏன் வரும் சந்ததியினருக்கும் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.