முகப்பு
வெள்ளிமணி

இறவா வரம் தரும் இறைவன்

உபரிசிரவஸ் என்ற மன்னன், மதம் பிடித்த ஒரு யானையை வேட்டையாடச் சென்றான்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:30 PM
பகிர்:

உபரிசிரவஸ் என்ற மன்னன், மதம் பிடித்த ஒரு யானையை வேட்டையாடச் சென்றான். அப்போது, தவம் செய்து கொண்டிருந்த ஒரு யோகியை தவறுதலாகக் கொன்று விட்டான். அதனால் மனமுடைந்த அவன், தன் அரச பதவியைத் துறந்து, பாப விமோசனம் வேண்டி, திருப்பேர் நகரில் கடுந்தவம் செய்தான். அவன் முன் சிவபெருமான் தோன்றி, அங்கே பெருமாளுக்கு கோயிலைக் கட்டி வழிபடுமாறு கூறினார். அவனும் பெருமாளுக்கு கோயிலைக் கட்டி, பக்தர்களுக்கு அப்பத்தையும், பாயசத்தையும் தானம் செய்து வந்தான். ஒரு நாள், பெருமாள், ஏழை அந்தணர் உருவில் மன்னன் முன் வந்து, தான் நெடுந்தொலைவில் இருந்து வருவதாகவும், பசியில் உள்ள தனக்கு உணவளிக்குமாறும் வேண்டினார். நூறு பேருக்கான உணவை உண்ட பின்பும் பெருமாள் தன் பசி தீரவில்லை என்றார். மேலும் சமைக்க நேரம் ஆகுமென்பதால், அந்தணரைத் தன் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டினான் மன்னன். பின்னர் உணவுள்ள அப்பக்குடத்தை பெருமானுக்கு அளித்தான்.

அதேநேரம், தன் பக்தன் மார்க்கண்டேயரிடம், "இறவா வரம் கிடைக்க, விஷ்ணுவின் அருளைப் பெறுவதே வழி' என்றார் சிவபெருமான். அவரின் சொல்படி, மன்னனின் இல்லம் சென்ற மார்க்கண்டேய ரிஷி, சயனக் கோலத்தில், ஒரு கையில் அப்பக் குடத்துடன் இருந்த ஏழை அந்தணரை நூறு முறை பணிந்து எழுந்தார். உடனே பெருமாள் அவருக்குத் தன் சுயவுருவைக் காட்டி, வலக்கை உயர்த்தி ஆசிர்வதித்து, இறவா வரமளித்தார். உபரிசிரவஸ்ஸýம் சாப விமோசனம் பெற்றார்.

மார்க்கண்டேயருக்கு ஆசி வழங்கிய அக்கோலத்திலேயே மூலவர் இங்கே காட்சியளிக்கிறார். பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் பிரசாதம் செய்வது மரபானது. மார்க்கண்டேய ரிஷி இங்கே இறவா வரம் வேண்டிப் பெற்றதால், அவர் தினம் ஸ்நானம் செய்த தீர்த்தக் குளம் மிருத்யுவிநாசினி எனப்படுகிறது.

இவ்வாறு உபரிசிரவஸ் சாபம் நீங்கிய தலமாக கோவிலடி தலம் திகழ்கிறது. மேலும் அப்பக்குடத்தைப் பெருமாள் பெற்றதால், அவருக்கு அப்பக்குடத்தான் என்ற திருநாமம் ஏற்பட்டது.

இங்கே பெருமாள் புஜங்க சயனத்தில் காட்சி தருகிறார். பெருமாளின் வலது கை அப்பக்குடத்தை அணைத்தபடி உள்ளது. பெருமாள் மேற்கு நோக்கிக் காட்சி அளிக்கிறார். தாயார் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் இந்திர விமானம் எனப்படுகிறது.

இங்கேயுள்ள உற்ஸவருக்கு "அப்பால ரங்கநாதர்' என்பது திருநாமம். தாயார் இந்திரா தேவி, கமலவல்லி. பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாஸனம் செய்யப்பெற்ற திவ்ய தேசம். மொத்தம் 33 பாசுரங்கள் இத்தலப் பெருமான் மீது பாடப்பட்டுள்ளது.

இந்திரனின் கர்வம் போக்கிய பெருமாள் இவர். மார்க்கண்டேயரின் எம பயம் போக்கியவர். உபரிசிரவஸ் மன்னனின் சாபமும் பாபமும் போக்கி அருள் புரிந்தவர். புராணக் கதைகள் பல கொண்ட, மிகப் புராதனமான இந்தத் தலம் ஸ்ரீரங்கத்துக்கும் முன்னதாக ஏற்பட்டது என்பது நம்பிக்கை. எனவேதான் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஆதியாக அடியெடுத்து வைத்த தலம் என்ற பொருளில், கோவிலடி எனப்பட்டது என்பர்.

இது, பெருமாளின் பஞ்ச ரங்கத் தலம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்கங்களில் ஒன்று. ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம்(மைசூர்), அப்பாலரங்கம் - திருப்பேர்நகர் (கோவிலடி), மத்திய ரங்கம் - ஸ்ரீரங்கம், சதுர்த்தரங்கம் - கும்பகோணம், பஞ்சரங்கம் - இந்தளூர் (மயிலாடுதுறை) ஆகியவற்றில் இரண்டாவதாக வருவது இந்தத் தலம்.

மோட்சம் தரும் பெருமான்: பன்னிரு ஆழ்வார்களில் மோட்ச உலகாகிய ஸ்ரீவைகுண்டம் சென்று மீண்டதைப் பாடியவர் நம்மாழ்வார். அவர் இறுதியாக மங்களாசாசனம் செய்தது இந்தப் பெருமாளைத்தான். எனவே, நம்மாழ்வார் இப்பெருமாளைப் பாடிவிட்டே மோட்சத்துக்குச் செல்வதாக ஐதீகம். இதனை முன்னிட்டே, இந்தத் தலம் வந்து வழிபடுவோருக்கு ஸ்ரீவைகுண்ட வாசம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமங்கையாழ்வாரை வைத்து இந்தப் பெருமானுக்கு ஒரு சரித்திரத்தைச் சொல்வர். திருமங்கை ஆழ்வார் பல்வேறு தலங்களுக்குச் சென்றுவிட்டு, அந்த அந்தத் தலங்களின் பெருமாளைப் பாடி வரும்போது, அப்பக்குடத்தானையும் மங்களாசாசனம் செய்கிறார். பின்னர் திருவெள்ளறை திருத்தலம் செல்கிறார். ஆனால், இவரது பாடலைக் கேட்டு மோகித்த அப்பக்குடத்தான், திருவெள்ளறைக்கும் பின் தொடர்ந்து சென்றாராம். இதனால், திருமங்கையாழ்வார், திருவெள்ளறையில் வைத்து மீண்டும் அப்பக்குடத்தானுக்கு மங்களாசாசனம் செய்தார் என்பர்.

திருவிழாக்கள்: பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேர், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, கிருஷ்ணன் உறியடி உற்ஸவம்.

பிரார்த்தனை: குழந்தை பாக்கியம் பெற, எம பயம் நீங்க, பாபம், சாபம் மற்றும் தீராத பிரச்னைகளைக் கொண்டவர்கள் இங்கே வந்து பெருமாளை அர்ச்சித்து வழிபட்டால், நல்ல பலன் நிச்சயம் என்கிறார்கள்.

தலச் சிறப்பு: 108 திவ்ய தேசங்களில் அப்பக்குடத்தான் பெருமாளுக்குதான் தினமும் இரவில் அப்பம் செய்து நிவேதிக்கப்படுகிறது.

சந்நிதி தரிசன நேரம்: காலை 8.30- 12 மணி வரை, மாலை 4.30- 8 மணி வரை.

இருப்பிடம்: திருப்பேர் நகர் என்றும், கோவிலடி, அப்பக்குடத்தான் என்றும் அழைக்கப்படுகிறது. திருச்சி மாவட்டம் அன்பிலில் இருந்து கொள்ளிடத்தின் அக்கரையில் 5 கி.மீ. தொலைவு. திருவையாறு திருக்காட்டுப்பள்ளி வழியாக கல்லணை செல்லும் பேருந்தில் செல்லலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →