முகப்பு
வெள்ளிமணி

ஜெபம் என்பது என்ன?

கடவுளோடு உரையாடுவது ஜெபம். ஒரு நல்ல நண்பர் நமக்கு இருந்தால் நம் எல்லா விஷயங்களையும் மனம் விட்டுப் பகிர்ந்து கொள்வது நட்புக்கான இலக்கணம்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:30 PM
பகிர்:

கடவுளோடு உரையாடுவது ஜெபம். ஒரு நல்ல நண்பர் நமக்கு இருந்தால் நம் எல்லா விஷயங்களையும் மனம் விட்டுப் பகிர்ந்து கொள்வது நட்புக்கான இலக்கணம். கடவுளிடம் நாம் நம் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதே ஜெபம். நாம் கடவுளிடம் நமது இதயத்தைத் திறந்து பேசுவதும், நம்மோடு பேசும் கடவுளின் வார்த்தைக்குத் திறந்த மனத்துடன் செவிமடுப்பதுமே ஜெபம்.

"எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.' - பிலிப் 4:6-7

எதற்காக ஜெபம் செய்ய வேண்டும்?

கடவுளின் அருகில் நாம் நெருங்கிவர ஜெபம் நமக்குத் துணைசெய்கிறது. கடவுளிடம் நாம் பெற்ற நன்மைகளுக்கு நன்றி சொல்லும் போதும், அவர் புகழ் பாடும் போதும், நமது பாவங்களுக்காக மனம் வருந்தும் போதும், நமது பலகீனத்தில் அவரது உதவியை நாடும் போதும், அவர் சித்தத்தை நிறைவேற்றும் போதும், கடவுள் நம்மோடு பேசுகிறார். கடவுள் நமது சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றி நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதைச் செய்யத் தூண்டுகிறார். நாம் ஜெபம் செய்வதன் மூலம் கடவுளின் சித்தத்தை நிறைவேற்ற அதிக வாய்ப்பை நமக்குக் கொடுக்கின்றார். இதன் மூலம் நாம் கடவுளில் இணைந்து வாழும் பேற்றைப் பெறுகிறோம்.

"கேளுங்கள் பெற்றுக் கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்.'- யோவான் 16:24

நாம் கடவுளிடமோ அல்லது யேசுவிடமோ அல்லது தூய ஆவியிடமோ ஜெபம் செய்யலாம்.இந்த மூவரிடமும் எழுப்பப்படும் ஜெபங்கள் விவிலியத்தில் அனேக இடங்களில் காணப்படுகின்றன. கடவுள் ஒருவர்தான். இயேசுவிடம் ஜெபம் செய்யும் போது இறைத் தந்தையிடமும் நாம் ஜெபம் செய்கிறோம். நாம் ஜெபம் செய்யும் வார்த்தைகளையும் கடந்து கடவுள் நம் உள்ளத்தையும் எண்ணங்களையும் அறியக்கூடியவர்.

இயேசு கடவுளும் மனிதனுமானவர். இந்த உலகில் இயேசு முழு மனிதனாக அவதரித்தார். அவர் கடவுளாயிருந்தாலும் இந்த உலகின் மனிதரைப் போல் மனிதராக வாழ்ந்தார். அவர் இறை தந்தையைச் சார்ந்து வாழ்ந்தார். எல்லாவற்றிலும் இறை தந்தையின் சித்தத்தையே நிறைவேற்றுகின்றார்.

இறை தந்தையை முழுமையாக அன்பு செய்து அவரில் வாழ்வதே வாழ்வாகக் கொண்டிருந்தார். ஆகவே அவரோடு உரையாடுவதில் அதிக நேரத்தை கழிக்கின்றதை நாம் நற்செய்திகளில் காண்கின்றோம்.

நாம் ஜெபம் செய்யும் போது தாழ்ச்சியான உள்ளத்தையும் கடவுள் முன் நம்முடைய இயலாமையையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறு செய்வது கொடுத்துக்கொண்டே இருக்கின்ற கடவுளின் கொடைகளை நாம் பெறுவதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ளும் கருவியாக ஜெபம் அமைகின்றது. ஆகவே நாம் தொடர்ந்து ஜெபம் செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.