முகப்பு
வெள்ளிமணி

திருத்தலத் திருப்பணி

பொதுவாக ஆலயங்களில் பங்குனி உத்திர நாளை ஒரு நாள் உற்ஸவமாகக் கொண்டாடுவது மரபு.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:48 AM
பகிர்:

திருமணம் நடந்தேறும்!

பொதுவாக ஆலயங்களில் பங்குனி உத்திர நாளை ஒரு நாள் உற்ஸவமாகக் கொண்டாடுவது மரபு. ஆனால் பங்குனி உத்திரத்தை முதன்மையாகக் கொண்டு பிரம்மோற்ஸவம் நடைபெறுவது அபூர்வமானது.
 அத்தகைய உற்ஸவம் ஒன்று வேளச்சேரி-மடிப்பாக்கம் சாலையில் சதாசிவம் நகரில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 13 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த ஆலயம் வேளச்சேரி ரயில் நிலையத்திலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது.
 இந்த நகரில் 1991ஆம் வருடம் தற்போது ஆலயம் உள்ள இடத்தில் வெற்றி விநாயகர் திருவுருவச் சிலை ஓர் ஓலைக்குடிசையில் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் ஆலயம் விரிவடைந்தது. சிவன், அம்பாள், முருகன், ஐயப்பன், மகாலட்சுமி சமேத நாராயணப் பெருமாள், ஆஞ்சநேயர், நவகிரகங்கள், சனீஸ்வர பகவான், சூரியன், பைரவர், நாகர் ஆகியோருக்கான சந்நிதிகள் அமைக்கப்பட்டு முதல் குடமுழுக்கு 1994ஆம் ஆண்டு நடைபெற்றது. முகப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அடுத்த கும்பாபிஷேகம் 2003ஆம் வருடம் நடைபெற்றது. அப்போது 21 அடி உயரத்தில் பர்மா தேக்கு கொண்டு செய்யப்பட்ட கொடிக்கம்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 2011ஆம் ஆண்டு முதல் பிரம்மோற்ஸவம் நடைபெற்று வருகிறது.ஒரு சிவாலயத்திற்கான அனைத்து விசேஷ தினங்களும் இங்கே கொண்டாடப்படுகின்றன. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் சேவையும் நடைபெறுகிறது. அம்பாள் சிவலிங்கத்தை தழுவும் நிலையில் ஒரு சிலாரூபம் உள்ளது. அந்த சந்நிதியில் பெண்கள் "கேதாரகௌரி' விரதம் மேற்கொள்
 கின்றனர்.
 மூலவர் சுந்தரேஸ்வரர் அக்னி லிங்கமாக வழிபடப்படுகிறார். மீனாட்சி அம்மன் மிகுந்த அழகுடையவளாகக் காட்சியளிக்கிறாள். ஆலயத்தின் தூண்களில் உள்ள சிற்பங்கள் கண்களைக் கவரும் விதத்தில் உள்ளன. கோஷ்ட தெய்வங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அஷ்டபுஜதுர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் அருள்புரிகின்றனர்.
 இவ்வாலயத்தில் சுவாமியும், அம்மனும் கல்யாண கோலத்தில் அடுத்தடுத்து சந்நிதி கொண்டுள்ளனர். எனவே இருவரையும் வழிபட்டால் திருமணம் தாமதமாகிக் கொண்டிருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. தற்போது உற்ஸவத்தின் ஒரு பகுதியாக மார்ச் 26 ஆம் தேதி மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
 இவ்வாலயத்தில் 5 நிலைகளுடன் 32 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.