முகப்பு
வெள்ளிமணி

உலகினும் பெரிது நம்மாழ்வார் அருள்

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள் உண்டோ சடகோபர்க்கு ஒப்பு - என்று வைணவ ஆசார்யர் மணவாள மாமுனிகள் தம் உபதேச ரத்தினமாலையில் காட்டுகிறார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:52 AM
பகிர்:

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள் உண்டோ சடகோபர்க்கு ஒப்பு - என்று வைணவ ஆசார்யர் மணவாள மாமுனிகள் தம் உபதேச ரத்தினமாலையில் காட்டுகிறார். அவ்வாறே ஒப்பு அற்ற உயர்வு படைத்தவர் சடகோபராகிய நம்மாழ்வார். ஒப்பு அற்ற உயர்வான நாள், வைகாசி விசாகம்.

நம்மாழ்வார் தம் சீடரான மதுரகவியாழ்வாருக்கு நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் தமிழ்ப் பொருளை நான்கு பிரபந்தங்களாக்கி அருள்கின்றார். அப்போது அவர், மதுரகவிகளை நோக்கி, ""திருக்கோளூர்ச் செல்வரே பர, வியூக, விபவ, அந்தர்யாமி எனும் நான்கு ஸ்வரூபத்தை உடைய எம்பெருமானுக்கு வேதம், பாஞ்சராத்திரம், இதிகாசம், ஸ்மிருதி முதலியவை தோத்திரங்கள் ஆகின்றன. மரத்தாலும், கற்சிலையாலும் உருவான அர்ச்சாவதார எம்பெருமானுக்கு வேத அர்த்தங்கள் அடங்கிய தமிழ் மொழியானது துதியாகிறது. கிருத யுகத்தில் தியானத்தாலும், திரேதா யுகத்தில் யோகத்தினாலும், துவாபர யுகத்தில் பூஜையாலும் மனிதன் எந்தப் பலனை அடந்தானோ, அதே பலனை கலியுகத்திலும் எம்பெருமானை தோத்திரம் செய்வதால் அடைகின்றான். முன்னர் பகவான் வியாசராகத் தோன்றி, பாரதத்தை எவ்வாறு அருளிச் செய்தாரோ, அதுபோல் இப்போது உலகை உய்விக்கும் பொருட்டு, வேதார்த்தங்கள் அடங்கிய தமிழ் மறைகளை எம் மூலமாகச் செய்தருளினன். நான்கு வேதங்களின் அர்த்தங்கள் அடங்கிய நான்கு பிரபந்தங்களையும் இப்போது என்னிடம் இருந்து கேட்பீராக'' என்று கூறி மழை போலே பிரபந்தங்களை அருளிச் செய்தார். எனவேதான் நம்மாழ்வார் "தமிழ் மறைகள் ஈன்ற முதல் தாய்' என்று போற்றப்படுகிறார்.

ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் சாரங்களே திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என நான்கு பிரபந்தங்களாக மலர்ந்தன. வேதங்களைக் காட்டிலும் முன்னம் பாடப்பெறும் சிறப்பு வாய்ந்ததாக தமிழ் மொழி பெருமை எய்தியது ஆழ்வாரிடம் இருந்து திருவாய்மொழியாக வெளிப்பட்டதால்தான் என்பார்கள் பெரியவர்கள். நம்மாழ்வாரின் இந்த நான்கு பிரபந்தங்களில் திருவிருத்தத்தின் முதல் பாசுரம் "பொய் நின்ற ஞானம்' எனத் தொடங்குகிறது. நான்காம் பிரபந்தம் திருவாய்மொழியின் கடைசிப் பாசுரம் "பிறந்தார் உயர்ந்தே' என நிறைவு பெறுகிறது. பொய்யான இகவாழ்வை மெய்யான உயர் வாழ்வாக மாற்ற வல்லது நம்மாழ்வாரின் பாசுரங்கள் என்பதை உணர்த்துவதே இது என்பது பெரியோர் வாக்கு.

ஆழ்வாரின் அருள் இவ்வுலகத்தைக் காட்டிலும் பெரிது எனக் கூற வந்த கவி ஒருவர், இவ்வாறு தோன்றும் வகையில் பாடினார்.

"இந்த உலகம் பெரிது. உலகமோ நான்முகன் படைப்பு. நான்முகனோ திருமால் உந்தியில் பிறந்தவன். திருமாலோ கடல் நடுவே துயில்பவன். கடலோ குறுமுனி அகத்தியன் கையில் அடக்கம். குறுமுனியோ கலசத்தில் பிறந்தவன். கலசமோ புவியில் சிறு மண். புவியோ அரவுக்கு ஒருதலைப் பாரம். அரவோ, உமையம்மை சிறுவிரல் மோதிரம். உமையோ, சிவபிரான் பாகத்தில் ஒடுக்கம். சிவனோ திருமால் திருவடியில் ஒடுக்கம். திருமால் தொண்டர்களின் உள்ளத்தில் ஒடுக்கம். தொண்டருள் பெரியோர் தூய சடகோபர். சடகோபர் அருள் உலகினும் பெரிதே'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.