வெள்ளிமணி

கலீபாவும் கஜானாவும்

கலீபா உமர்(ரலி) அவர்கள் ஆரம்பத்தில் ஊதிய மின்றி கலீபா உத்யோகம் பார்த்தார்கள். கலீபா பணிச்சுமை, வருவாய் தேடும் வாய்ப்பைக் குறைத்த பொழுது குடும்ப செலவிற்கு ஒருநாளைக்கு இரண்டு  திர்ஹங்கள் பெற்றார்கள்.

மு. அ. அபுல் அமீன்

கலீபா உமர்(ரலி) அவர்கள் ஆரம்பத்தில் ஊதிய மின்றி கலீபா உத்யோகம் பார்த்தார்கள். கலீபா பணிச்சுமை, வருவாய் தேடும் வாய்ப்பைக் குறைத்த பொழுது குடும்ப செலவிற்கு ஒருநாளைக்கு இரண்டு  திர்ஹங்கள் பெற்றார்கள்.

சலிக்காத மாவில் ஜைத்தூண் எண்ணெயில் சுட்ட சாதாரண ரொட்டியே அவர்களின் குடும்ப உணவு. கலீபாவை காண வருவோர் அவ்வுணவை சாப்பிட சிரமப்படுவர். ஒருமுறை கலீபா உமர்(ரலி) அவர்கள்  உணவு உண்ணும் பொழுது அஜர்பைஜானின் ஆளுனர் ஹழ்ரத் உத்பா இப்னு பர்கத் (ரலி) அவர்கள் கலீபாவை காண வந்தார். கலீபா, ஆளுநருடன் உணவைப் பகிர்ந்துகொண்டார். ஒரு கவளம் வாயிலிட்ட  ஆளுநர் அல்லல்பட்டு அதோடு உண்பதை நிறுத்தினார். கலீபா காரணம் கேட்டவுடன் ""சலிக்காத மாவை ஜைத்தூண் எண்ணெயில் சுட்டு எப்படி சாப்பிட முடிகிறது? மாவைச் சலித்து மணமுள்ள  எண்ணெயில் சமைத்து சாப்பிடக் கூடாதா?'' என்று வினவினார்.

""சலித்த மாவையும் தரமான எண்ணெயையும் எல்லா மக்களும் உண்ணும்பொழுது நானும் உண்ணலாம். அந்நிலை வரும் வரை ஏழைகள் எதை உண்கிறார்களோ அதையே நானும் உண்பேன்.  மறுமையின் அச்சம் இல்லாது இருந்தால் என் வீட்டில் உயர்ந்த உணவுகளை சமைப்பேன்''

கலீபாவின் பதிலைக் கேட்டு ஆளுநரின் கண்கள் கலங்கின. உமர்(ரலி) அவர்கள் கலீபா ஆன பிறகு சலித்த மாவில் ரொட்டி தயாரித்து உண்டதே இல்லை என்று உரைக்கிறார் ஹழ்ரத் யஸôர் இப்னு  நுமைர்(ரலி) அவர்கள்.

அஜர்பைஜான் திரும்பிய ஆளுநர் கலீபாவிற்கு அன்பளிப்பு அனுப்பினார். பொதுநிதி பைத்துல்மாலுக்குப் பொருள் வந்திருப்பதாக பிரித்த கலீபா அதில் அஜர்பைஜானில் தயாரிக்கப்படும் நெய்யுடன் கலந்த  பேரீத்தங்கனி பாத்திரங்களில் இருப்பதைக் கண்டார். ஒன்றை எடுத்து வாயிலிட்ட கலீபா அதன் சுவை மிகுதியை உணர்ந்து, ""அஜர்பைஜானின் அத்தனை மக்களும் அதை சாப்பிடுகிறார்களா?'' என்று  கேட்டார். இல்லை என்ற பதில் வந்ததும் பொருள் கொண்டு வந்தவர்களைத் திரும்ப எடுத்துச் செல்ல பணித்தார். கலீபாவின் கடுமையான எச்சரிக்கை கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

""நெய்யில் பொரித்த பேரீத்தங்கனி உங்களுடைய சொந்த உழைப்பால் உங்களுக்குக் கிடைத்ததா? உங்களின் பெற்றோர் விட்டுச் சென்று உங்களுக்குக் கிடைத்த உடமைகளிலிருந்து நீங்கள் பெற்றதா?  அப்படியாயின் அதை நீங்கள் உண்ணலாம். இல்லையேல் எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் எளிய உணவையே நீங்கள் உண்ண வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது''.

மகன் ஹழ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உயர்ந்த குதிரை ஒன்றை விற்பனை செய்வதைப் பார்த்த கலீபா உமர்(ரலி) அவர்கள் அக்குதிரையை வாங்கியது, வளர்த்தது பற்றி விசாரித்தார்கள்.  அப்துல்லாஹ்(ரலி) அவர்களின் சொந்தப் பணத்தில் வாங்கப்பட்ட அந்தக் குதிரை அரசு நிலத்தில் மேய்ந்தது என்றறிந்து, அரசு உணவைத் தின்ற அக்குதிரை அரசுக்குச் சொந்தம் என்று கூறி குதிரையை  அரசிடம் ஒப்படைக்கச் செய்தார்.

கஜானாவில் உள்ள பொது நிதி பொது மக்களுடையதே. ஆளும் அதிபதிகளின் ஆடம்பர வாழ்க்கைக்குஉரியதல்ல என்பதை செயல்படுத்திய செம்மல் உமர்(ரலி) அவர்களின் ஆட்சி மிகவும் மதிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT