வாழ்வின் அரிய தருணங்கள்
மனித உயிர்களாகிய நாம் காலம், இடம் என்ற நியதிகளுக்கு உட்பட்டவர்களாகவும் கட்டுப்பட்டவர்களாகவும் இருக்கிறோம்.
மனித உயிர்களாகிய நாம் காலம், இடம் என்ற நியதிகளுக்கு உட்பட்டவர்களாகவும் கட்டுப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக மாதங்கள் வருடங்களாக உருண்டோடிக் கொண்டிருப்பதில் நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவை தானாக வந்து போகும். ஆனால் வழக்கமான, வாடிக்கையான இந்தக் கால ஓட்டத்தை அலங்கரிப்பதும், ரசிக்க வைப்பதும் சில, பல அரிய தருணங்கள்.
ஓர் ஆண்டை எடுத்துக்கொண்டால் புத்தாண்டு தினம், திருநாள் பெருநாள், பிறந்தநாள், திருமணநாள் என்று நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாட்கள் இருப்பது நமது வாடிக்கையான வாழ்விற்கு சுவையைத் தருகின்றன.
இதோடுகூட நாம் உழைத்து விருதுகள் பெற்ற நேரங்கள், சாதித்த சாதனைகளின் பதிவுகள், பிரபலமானவர்களுடன் கொண்ட தொடர்புகள், சந்திப்புகள் என்று அரிய தருணங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகலாம். இவைகள் நீங்கா நினைவுகளாக, ஆட்டோகிராஃப்களாக இருந்துகொண்டு இந்த நிமிடம் இப்படியே தொடராதா என்று நம்மை ஏங்க வைக்கலாம், உற்சாகப்படுத்தலாம். ஆனால் இவைகள் மட்டும்தான் நமது வாழ்வின் அரிய தருணங்களா?
நமது வாழ்வில் வந்துபோகின்ற எந்த நொடிப்பொழுதுதான் அரிதானது இல்லை இந்த நாள், இந்த நொடி, இந்த நிமிடம் இதற்குமுன் எப்போதும் வந்ததில்லை, இனிமேலும் வரப்போவதில்லை. இவை அரிதானவை அல்லவா? அசாதாரணங்களையே பார்த்துப் பார்த்து பழகிப்போன நமக்கு சாதாரணங்கள் எடுபடுவதில்லை. இப்படி பல சாதாரணங்கள் கண்டுகொள்ளப்படாமலேயே போய்விடுகின்றன.
எப்போது நமது வாழ்வின் அரிய தருணங்களை நாமே தீர்மானித்து ஏற்படுத்துகிறோமோ அப்போதுதான் நமது அரிய தருணங்களில் நாம் பெருமை கொள்ளமுடியும்.
நேரத்தைப் பொறுத்தமட்டில் மூன்று வகையானவர்கள் உள்ளனர். சிலர் நேரத்தினால் தள்ளிக்கொண்டு செல்லப்படுகின்றவர்கள் - இவர்கள் அரிய தருணங்களுக்காகக் காத்துக்கிடந்து தங்கள் வாழ்வை வீணாக்குவர். வேறு சிலர் நேரத்தை தள்ளிக்கொண்டிருப்பவர்கள் - இவர்கள் காலம் தப்பி பயிரிடுபவர்களாவர். மற்றும் சிலர் நேரத்தின்மீது பயணம் செய்பவர்கள். இவர்கள் நேரத்துக்குக் கடிவாளமிட்டு சாதனைகள் படைப்பவர்கள்.
நம் வாழ்வில் அரிய தருணம் எப்போது வரும்? அது வருவது என்பது கிடையாது. அது நாம் கொணருவது. அதுவும் இப்போது இங்கு இன்று நிகழ்காலத்தில் கொண்டு வரவேண்டியது.
இயேசுபிரான் தன் சீடர்களுக்குப் பிரார்த்தனை செய்யக் கற்றுக்கொடுத்தபோது, அவர்கள் அன்றாட உணவைக் கேட்டுப் பரம தந்தையிடம் மன்றாடவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்.
இயேசுபிரான், மத சம்பந்தமான விதிகள், கட்டளைகள் ஆகியவற்றை அறிந்திருந்தாலும் பிறருடைய வாழ்வில் அரிய தருணங்களைக் கொண்டு வரும் முயற்சிக்கு அவை தடைவிதிக்காமல் பார்த்துக்கொண்டார். பிறருடைய நலனில் அக்கறைகொண்டு வாழும்போது நமது வாழ்வையே அரிய தருணமாக மாற்றி விடலாம்.