முகப்பு
வெள்ளிமணி

பறவை அரசன் பெற்ற பேறு

சக்கரவர்த்தி திருமகனாம் ஸ்ரீராமபிரானின் வனவாசத்தின்போது அவருக்கு மானிட வர்க்கம் மட்டுமில்லாமல் விலங்கினங்களும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:53 AM
பகிர்:

சக்கரவர்த்தி திருமகனாம் ஸ்ரீராமபிரானின் வனவாசத்தின்போது அவருக்கு மானிட வர்க்கம் மட்டுமில்லாமல் விலங்கினங்களும், பட்சிகளும், அணில் போன்ற சிறிய ஜந்துக்களும், மலை, சமுத்திரங்களும்கூட ராம கைங்கர்யம் செய்து பெறும் பேறு பெற்றதாகப் புராணங்கள் இயம்புகின்றன. அவ்வரிசையில் கழுகு அரசர்களான ஜடாயும் அவரது அண்ணன் சம்பாதியும் செய்த பேருதவி மறக்க முடியாததாக உள்ளது.

இதில் ராமபிரானுக்காக இன்னுயிர் நீத்த ஜடாயுவின் செயலை பக்தி மார்க்கத்தில் "ஆத்ம நிவேதனம்' என்ற வகையைச் சார்ந்தது என்று ஆன்றோர்கள் உரைப்பர். ராவணனுடன் போர்புரிந்து சீதாப்பிராட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் ஜடாயு தன் இறக்கைகளை இழந்து உயிர் துறக்க நேரிட்டது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால், சம்பாதி எவ்வாறு உதவிபுரிந்து, நற்கதியடைந்தான் என்பதைப் பார்ப்போம்:

ராமபிரான் வனவாசத்தில் கிஷ்கிந்தையில் சுக்ரீவனை நண்பனாக ஏற்று அவன் மூலம் சீதையைத் தேட முயன்றார். அப்போது சுக்ரீவனின் ஆணைப்படி தென்திசை நோக்கி அங்கதன், ஜாம்பவான், ஹனுமான் மற்றும் வானரக் கூட்டங்கள் சென்றபோது பல இடங்களில் தேடியும் சீதாப்பிராட்டி கிடைக்கவில்லையே என்று மஹேந்திர மலையடிவாரத்தில் தங்கி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது அம்மலையின் குகையில் வயதானகழுகு ஒன்றினைச் சந்தித்தனர்.

அதுதான் சம்பாதி. வானரர்கள் மூலம் ஜடாயுவின் இறப்பைப்பற்றி அறிந்த சம்பாதி மிகவும் வருத்தப்பட்டு தனது அண்ணனுக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளைச் செய்தான். பிறகு அங்கதனிடம் ராமபிரானைப் பற்றிய தகவல்களையும், சீதாப்பிராட்டியைத் தேடி வானர வீரர்கள் வந்ததையும் தெரிந்து கொண்டான். அங்கதனிடம் தானும் தன்னுடைய சகோதரனும் சூரியனை நோக்கி தங்கள் பலத்தை பரீட்சை செய்யச் சென்றபோது கதிரவனின் வெப்பம் தாங்காமல் ஜடாயுவைக் காப்பாற்றிய நேரத்தில் தன்னுடைய இறக்கைகள் எரிக்கப்பட்டு தான் விந்திய மலையில் விழுந்தது பற்றிக் கூறினான் சம்பாதி.

அங்கதன் அத்தருணத்தில் சீதாதேவியை யார் அபகரித்தார்கள் என்பது தெரியுமா? எனக் கேட்டதற்கு "ராமா' என்று கத்திக்கொண்டு செல்லும் இளம்பெண்ணை ராவணன் எடுத்துச் சென்றதைப் பார்த்ததாகவும், அவள் சீதையாகத்தான் இருக்க வேண்டும் என்று சம்பாதி கூறினான். அவன் மேலும் கூறுகையில் தன்னுடைய கூரிய பார்வையால் 800 மைல் தூரத்தில் இருக்கும் இலங்கையையும், சீதையின் இருப்பிடத்தையும் காண முடிகிறது என்றும், நிச்சயமாக சீதையைக் கண்டு மீண்டும் திரும்பி வருவீர்கள் என்றான்.

வானரர்களுக்கு உதவியதால் நிசாசரர் என்ற துறவி சொன்ன வாக்கின்படி சம்பாதி தன் இறகுகளைப் பெற்று பொலிவுற்றான். இவ்வாறு சம்பாதி ""கண்டேன் சீதையை'' என்ற சொல்லை ஹனுமான் தன் திருவாக்கினால் ராமபிரானுக்குச் சொல்வதற்கு ஏதுவாக தன் தூரப்பார்வையில் சீதாப்பிராட்டியின் இருப்பிடத்தைக் கண்டுகொண்டு ஹனுமனுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தான். இந்த ராம கைங்கர்யத்திற்காக நற்கதியடைந்தான்.

நமது தேசத்தின் தெய்வமான ராமபிரானுக்கு பாரதம் முழுவதும் கோயில்கள் உள்ளதை அறிவோம். வெகுசில இடங்களில் மட்டுமே ஜடாயு சம்பந்தப்பட்ட திருக்கோயில்களாகச் சொல்லப்படுவது உண்டு. ஆனால் சம்பாதியுடன் ராமபிரான் சந்நிதி கொண்டுள்ள பழமையான ஆலயம் மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் அமைந்துள்ளதை நம்ப முடிகிறதா?

ஆம். காஞ்சி மாவட்டத்தில் செய்யாறு கொடநகர் (செய்யார் - பஜார் அருகில்) பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சீதாலட்சுமண சம்பாதியுடன் விஜய கோதண்ட ராமர் திருக்கோயில். இங்கு மூலவர் ராமபிரானை சேவித்தவண்ணம் சம்பாதியை நின்ற கோலத்தில் உள்ள அழகினைத் தரிசிக்கலாம். ராமபிரானுடன் சேர்ந்து கோயில் கொள்ளும் பெரும் பேற்றை அல்லவா சம்பாதி கிடைக்கப் பெற்றிருக்கிறான்!

சம்பாதி வம்சத்தினர் என்று சொல்லப்படும் ஸம்பாதி கந்தாடை நரஸிம்மாச்சாரியார் சுவாமிகளால் செய்யாறு, சம்பாதி குளக்கரையில் இத்திருக்கோயில் அழகிய ஸôரஸ்ரீகர விமானத்துடன் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலுக்கு அக்காலத்திலும், இக்காலத்திலும் வைணவ மடாதிபதிகள் முக்கியமாக அகோபிலமட ஜீயர்கள், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் விஜயம் செய்து மங்களாசாசனம் செய்து வருகிறார்கள்.

தினசரி ஆராதனைகள், ஸ்ரீராமநவமி வைபவங்கள் குறைவின்றி நடைபெறுகிறது. குளக்கரையின் மேற்கில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கின்றார். மேலும் இத்திருக்கோயில் காஞ்சி திவ்ய தேசமான (பரமேஸ்வர விண்ணகரம்) வைகுண்ட பெருமாள் திருக்கோயிலின் அபிமானத்தலமாகவும் விளங்குகிறது. ஏப்ரல் 8ஆம் தேதி ஸ்ரீராமநவமி மகோத்ஸவம் சிறப்புத் திருமஞ்சனத்துடன் நடைபெற உள்ளது. அவ்வமயம் இவ்வாலயத்திற்குச் சென்று சம்பாதி ராமபிரானைத் தரிசித்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவோமாக!

அமைவிடம்: செய்யாறு அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள கொட நகரில் உள்ளது இந்த ராமர் ஆலயம்.

தொடர்புக்கு: 98404 83337.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.