உத்திரத்தில் உதித்த உத்தமன்!
சைவ, வைணவ சமய வழிபாடுகளில் பங்குனி உத்திரத் திருநாள் ( இவ்வாண்டு ஏப்ரல் 13) முக்கியப் பங்கு வகிக்கிறது.
சைவ, வைணவ சமய வழிபாடுகளில் பங்குனி உத்திரத் திருநாள் ( இவ்வாண்டு ஏப்ரல் 13) முக்கியப் பங்கு வகிக்கிறது. பல்வேறு தெய்வீகத் திருமணங்கள் இந்நாளில் நடந்ததாகப் பல்வேறு புராணங்கள் இயம்புகின்றன.
ஹரிஹர அம்சமான ஐயப்பன் அவதரித்த திருநாளும் இதுவே. சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர், அவரது ""ஹரிஹர புத்ரம்சாஸ்தாரம் பஜேஹம்'' என்ற கிருதியில் ""பால் குணமாஸ பௌர்ணமி மாவதாரம்'' என்று பாடியுள்ளார். நாட்டு பாடல்களிலும் ""பங்குனியில் ஈராறில் உதித்தவனே'' என்ற வரிகள் காணப்படுகின்றன.
பங்குனியில் உதித்த தர்மசாஸ்தாவே ஐயப்பனாக அவதரித்ததின் நோக்கம், உத்தமமான செயல்களை நிறைவேற்றுவதற்குத்தான்.
தேவர்களின் இடர் நீங்க, பக்தர்களைக் காக்க, செய்யும் தவம் பலிக்க, சாப விமோசனம் பெற, தர்மம் தழைக்க, அஞ்சாமை, மரண பயம், நீங்க, இளமை, வீரம், சமத்துவம் ஓங்க, பிரம்மச்சரிய விரதத்தின் பெருமை அனைவரும் அறிந்துக்கொள்ள அவதாரம் செய்தான் ஐயப்பன்.
சாஸ்தாவின் சரித்திரத்தில் பல படிப்பினைகள் இருக்கின்றன. பெற்றோருக்கு, குரு ஸ்தானத்திற்கு மரியாதை அளித்தல்; சபரி மலைக்கு முறைப்படி விரதம் இருந்து யாத்திரையாகச் சென்று ஐயனை தரிசித்தல்; சபரி யாத்திரை என்பது முக்திநிலை வரை நம்மைக் கொண்டு போய் சேர்க்கும். "சரண' கோஷம் மூலம் சரணாகதி தத்துவத்தையும், பகைவனிடமும் பாசம் காட்டும் பாங்கினையும் நமக்கு உணர்த்தியவன் ஐயப்பன்.
பங்குனி உத்திரத்தன்று சபரி மலையிலிருந்து சிறிய உற்சவ மூர்த்தி, யானை மீது பவனியாகக் கொண்டு வரப்பட்டு, கீழே கணபதி சந்நிதானத்திற்கு அருகில் உள்ள பம்பை ஆற்றில் ஆராட்டு விழா நடைபெறுகிறது. ஐயனே கீழே இறங்கி வருவதாக ஐதீகம். அந்த சமயத்தில் மேலே நடை அடைக்கப்பட்டிருக்கும். பங்குனி உத்திர தினத்தன்று சபரிமலையில் சகஸ்ரகலசாபிஷேகம், லட்சார்ச்சனை, ருத்திராபிஷேகம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பக்தர்கள் கண்டு தரிசித்து பயன்பெறலாம்.