வெள்ளிமணி

சிவபெருமானால் விதிக்கப்பட்ட அறங்கள்

சிவபெருமானால் விதிக்கப்பட்ட 16 வகை அறங்களைப் பின்பற்றி வாழ்பவர் பெறற்கரிய பெரும்பேறு பெறுவர் என்கிறார்

இடைமருதூர் கி.மஞ்சுளா

சிவபெருமானால் விதிக்கப்பட்ட 16 வகை அறங்களைப் பின்பற்றி வாழ்பவர் பெறற்கரிய பெரும்பேறு பெறுவர் என்கிறார் அருள்நந்தி சிவாச்சாரியார். இதற்கு ஆதாரமாகத் திகழ்கிறது இவர் அருளிய மெய்கண்ட நூலான சிவஞான சித்தியார் (சுபக்கம், 113) பாடல்.

1. எல்லோரிடத்திலும் அன்புடன் இருத்தல்

2. கருணை உணர்வுடன் இருத்தல்

3. உயர்ந்தவரோடு பொருந்தி அதன்படி நடத்தல்

4. தத்தம் குலத்துக்குரிய கிரியைகளைப் பின்பற்றுதல்

5. தக்கவர்களை உபசரித்தல்

6. எல்லோரிடமும் நட்புடன் பழகுதல்

7. சாத்வீக குணத்தைக் கொண்டிருத்தல்

8. ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்தல்

9. தக்கவர்களுக்கு மனநிறைவுடன் தானம் செய்தல்

10. தன்னைவிட மூத்தவர்களை வணங்குதல்

11. பணிவோடு இருத்தல்

12. உண்மை பேசுதல்

13. பிறர்மனை விழையாதிருத்தல், வரைவின் மகளிரை விரும்பாதிருத்தல்

14. தீய வழியில் பொறி புலன்களைச் செலுத்தாதிருத்தல்

15. தகுந்தவை - தகாதவை இவற்றைப் பகுத்து அறிதல்

16. குலதெய்வத்தை வழிபடுதல்

சிவஞான சித்தியார் பாடல் வருமாறு:

"ஒழுக்கம், அன்பு, அருள், ஆசாரம்,

உபசாரம், உறவு, சீலம்

வழுக்கிலாத் தவம், தானங்கள்,

வந்தித்தல், வணங்கல், வாய்மை,

அழுக்கிலாத் துறவு, அடக்கம்,

அறிவொடு, அர்ச்சித்தல் ஆதி

இழுக்கிலா அறங்கள் ஆனால்

இரங்குவான் பணி அறங்கள்''

அதாவது, உயிர்கள் உலகியலில் வாழும்போது கடைப்பிடிக்க வேண்டிய நல்வினைகள் எவையெவை என்பதை இறைவன் கருணைகூர்ந்து கட்டளை இட்டு அருளியுள்ளான். இந்த நல்வினைகளே அறச்செயல்கள் எனப்படும். அவை:

1. ஒழுக்கம் - உயர்ந்த பண்புடையவரோடு பொருந்த நடப்பதாகிய உலகத்தோடு ஒட்ட ஒழுகல்.

2. அன்பு - யாவரிடத்தும் அன்புடைமை.

3. அருள் - கருணை உடைமை

4. ஆசாரம் - வேதாகமங்களில் விதித்தவாறு கடைப்பிடித்தல் உடைமை.

5. உபசாரம் - தக்கோர் இடத்துச் செய்யும் உபசரிப்பு உடைமை.

6. உறவு - யாவரிடத்தும் நண்புடைமை.

7. சீலம் - நற்குணம் உடைமை.

8. வழுக்கிலாத் தவம் - ஐம்பொறி அடக்கல், விரதம் காத்தல் முதலிய குற்றம் இல்லாத தவம் உடைமை.

9. தானங்கள் - தக்கோர் மாட்டு உவகையோடு செய்யும் தானங்கள் உடைமை.

10. வந்தித்தல் - தன்னைவிட மூத்தவர்கள் மாட்டு வழிபாடு உடைமை.

11. வணங்கள் - யாவரிடத்தும் பணிவுடைமை

12. வாய்மை - மெய்மை உடைமை.

13. அழுக்கு இலாத்துறவு - பிறர்மனை விழையாமை, வரைவின் மகளிர் விழையாமை முதலிய குற்றமற்ற ஆண் தகைமை உடைமை.

14. அடக்கம் - தீய நெறியில் செல்லாமல் அடக்கம் உடைமை.

15. அறிவு - தக்கன இவை, தகாதன இவை எனப் பகுத்து அறிதல் உடைமை.

16. அர்ச்சித்தல் - குலதெய்வத்தைப் பூசனை செய்தல் உடைமை.

இவை அல்லாதன தீவினைகள் எனப்படும். மேலும், சிவபெருமானை வழிபடுவது ஒன்றே சிறந்த அறம் என்பதை பாடல் 117 விளக்குகிறது.

இப்பாடலின்(117) மூலம், "சிவபெருமான் திருவடியை வழிபடுவது ஒன்றே மிகச்சிறந்த அறமாகும். அதாவது, வழிபாட்டின் முழுப் பயனையும் பெறச் செய்யும் புண்ணியச் செயலாகும். ஆகவே, சிவபெருமான் திருவடியை மறந்து செய்கிற புண்ணியச் செயல்கள் அனைத்தும் வீண் செயல்களாகும்' என்கிறார் அருணந்தி

சிவம். எனவே, சிவபெருமானால் விதிக்கப்பட்ட இப்புண்ணிய அறங்களைக் கைக்கொண்டு சிவனருள் பெற விழைவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுண்ணறிவுக்குப் புலப்படாது!

காரையாறு காணிக்குடியிருப்பில் சிறுத்தை தாக்கி இளைஞா் காயம்

கும்ப ராசிக்குப் பணவரவு: தினப்பலன்கள்!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமை பறிமுதல்

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் 250 போ் கைது

SCROLL FOR NEXT