பெருங்கருணையில் உதித்த பெரும் ஞானி!
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள பெருங்கருணை என்னும் சிற்றூரில் அவதரித்தவர் வைணவ
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள பெருங்கருணை என்னும் சிற்றூரில் அவதரித்தவர் வைணவ சீலரான ஸ்ரீ செல்வ நம்பிகள். இளம் வயதிலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றுத்தேர்ந்து, பெருந்தன்மை, தியாகபுத்தி போன்ற குணங்களுடன் திகழ்ந்து வந்த இவரை பாண்டிய மன்னன் விக்கிரம பாண்டியன் தனது நாட்டின் ராஜ புரோகிதராக நியமித்ததுடன் பெருங்கருணையில் சுதா மூர்த்தியாய் எழுந்தருளியிருந்த ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு கோயிலும் அமைத்துக் கொடுத்து செல்வநம்பிகள் பொறுப்பில் ஒப்படைத்தான்.
ஒருசமயம் விக்கிரம பாண்டியனுக்குப் பின் முடிசூட்டிக்கொண்ட வல்லப பாண்டியனுக்கு தெய்வங்களிலே சகல புருஷார்த்தங்களும் நிரம்பப் பெற்று பேரருளின் எல்லை நிலமாகிய மோட்சப் பிராப்தியை வழங்கவல்ல பர தெய்வம் யார் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனை தீர்த்துவைப்பதற்கு செல்வ நம்பிகளின் ஆலோசனைப்படி பண்டிதர்கள் கூடிய விவாத மேடையைக் கூட்டினான்.
செல்வநம்பிகளே இந்த சந்தேகத்தைத் தீர்த்துவைக்கும் நிலையில் இருந்தாலும், அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்துவந்த ஸ்ரீ விஷ்ணுசித்தர் என்பவரை மனதில் கொண்டு அவரை விவாத மேடையில் அனுப்புவதற்காக வடபத்ரசாயிடம் பிரார்த்தனை செய்தார். செல்வ நம்பிகள் எண்ணப்படியும் பெருமாளின் அனுக்கிரகத்தாலும் ஸ்ரீ விஷ்ணு சித்தர் மதுரை பாண்டிய அரசனின் விவாத அரங்கில் பங்கேற்று ஸ்ரீமந் நாராயணனே அந்த பரதெய்வம் என்று நிரூபணம் செய்தார். இந்நிகழ்விற்குப் பிறகுதான் ஸ்ரீ விஷ்ணு சித்தர் பெரியாழ்வார் எனப் போற்றி அழைக்கப்பட்டார்.
உயர்ந்த ஞானியாகிய ஸ்ரீ செல்வ நம்பிகள் அவதரித்த பெருங்கருணையில் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அவரது சந்நிதி மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இந்த சந்நிதியை புனரமைத்தும் மற்றும் பெருமாள் ஆலயத்தில் மேற்கொள்ளவிருக்கும் பணியையும் கருத்தில் கொண்டு ஸ்ரீ சுந்தரவரதராஜபெருமாள் சேவா சங்கம் என்றும் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இச் சந்நிதியில் ஸ்ரீ செல்வ நம்பிகள் திரு அவதாரத் திருவிழா ஆகஸ்ட் 21 முதல் 23 வரை திருவிளக்கு பூஜை, திருமஞ்சனம், திருவாய்மொழி சேவை போன்ற நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகின்றது. இந் நிகழ்வில் பக்தர்கள் பங்கு கொண்டு பலன் பெறலாம்.
தொடர்புக்கு : டி. விஜயசாரதி : 9176260507.