கடற்கரையில் எழுந்தருளும் பெருமாள்
பெண்களைத் திருமணம் செய்து கொடுப்பது பெற்றோரின் தலையாய கடமை. நேரமும், காலமும் நன்றாக அமைந்துவிட்டால், செலவில்லாமலேயே பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு போய் விடுவார்கள்.
பெண்களைத் திருமணம் செய்து கொடுப்பது பெற்றோரின் தலையாய கடமை. நேரமும், காலமும் நன்றாக அமைந்துவிட்டால், செலவில்லாமலேயே பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு போய் விடுவார்கள். சில பெண்களுக்கு எல்லா வசதிகள் இருந்தும் திருமணம் செய்வதில் தடை ஏற்பட்டு திருமணமே வயது மீறிப் போய் நடந்து முடியும். இப்பொழுதெல்லாம் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்குள் பெற்றோர்கள் படாதபாடு பட வேண்டியிருக்கிறது.
புராணத்திலே நடந்த நிகழ்ச்சி ஒன்று. அமிர்தத்தை அள்ளிப் பருக வேண்டுமென்ற ஆசையிலே தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்ற பாம்பைக் கொண்டு மந்திர கிரியால் கடலைக் கடைந்தனர். மந்திரகிரி சுழன்றுகொண்டே இருக்கும்போது கடல் அலைகள் மேலெழும்பி ஆர்ப்பரித்தன.
முதலில் ஆலகால விஷம் வெளியே வந்தது. கடுமையான உஷ்ணத்திலிருந்த அந்த விஷத்தை தேவர்களையும், பூமியில் மானிடர்களையும் காப்பாற்றி, லோக ஷேமத்திற்காக பரமேஸ்வரன் பருகினார்.
Advertisement
அடுத்து காமதேனு, குதிரை, ஐராவதம், கௌஸ்துபமணி, பாரிஜாத மரம் என்று பல அரிய வஸ்துகள் வெளிவந்தன. அப்போது பூமாலை கையில் ஏந்தியபடி மஹாலக்ஷ்மி தோன்றினாள். வந்தவள் தனக்கு ஒரு கணவனை தேர்ந்தெடுக்க முன் வந்தாள். மூலப் பரம்பொருளாகிய திருமாலை தனக்குரிய கணவராக தேர்ந்தெடுத்து, மாலையை திருமாலின் கழுத்திலிட்டு மணமுடித்துக் கொண்டாள். அப்போது தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
மஹாலக்ஷ்மி, மஹாவிஷ்ணுவை மணந்து அவரை கணவனாக ஏற்றுக்கொண்டதால் சமுத்திர ராஜன் (கடலுக்கு அரசன்) மஹாவிஷ்ணுவுக்கு மாமனாராகும் பேரைப் பெற்றான். மஹாவிஷ்ணு, தனது மனைவி மஹாலக்ஷ்மியை அழைத்துக்கொண்டு வைகுந்தத்திற்குப் போகத் தயாரானார். அப்போது சமுத்திரராஜனுக்கு மனதில் ஒரு வேதனை ஏற்பட்டது. தனது மகளை வைகுந்தத்திற்கு அழைத்துப் போய்விட்டால் தன்னுடைய மகளை எப்போது பார்க்க முடியும்? எங்கு, எப்படிப் பார்க்க பார்க்க முடியும் என்ற வேதனை அவரை வாட்டி எடுத்தது.
தன்னுடைய மனக் குறையை மஹாவிஷ்ணுவிடம் சமுத்திரராஜன் எடுத்துக் கூறி, மனம் வருந்தினார். மாமனாரின் மன வேதனையைக் கண்ட மஹாவிஷ்ணு அவரது வேதனையைப் போக்கும் விதமாக சமுத்திரராஜனுக்கு அருள்பாலித்தார். அதாவது இனி வரப்போகும் காலங்களில் தானும், திருமகளும் தவறாது ஒவ்வொரு ஆண்டும் புண்ணிய நாளான மாசி மாத, சுக்ல பட்ச, பௌர்ணமி திதியன்று, மாசி மகத்தன்று கடற்கரையில் தோன்றி காட்சி தருவதாகவும், அப்போது சமுத்திர ராஜன் அவருடைய மகளான மஹாலக்ஷ்மியை கண்டு ஆனந்தப்படலாம் என்றும் கூறி மறைந்தார்.
எனவே அன்றைய நாளில் கடற்கரையில் உள்ள விஷ்ணு ஆலயங்களில் மஹாவிஷ்ணுவையும், தாயாரையும் மலரால் அலங்கரித்து கடற்கரையில் எழுந்தருளச் செய்து சமுத்திர ராஜனுக்கு பகவானை தரிசிக்க ஏற்பாடு செய்து இன்று வரை நடந்து வருகிறது. இதுவே மாசி மகத் திருநாள். கடற்கரை இல்லாத ஊர்களில் நதியிருந்தால் நதிக்கரையோரம் பெருமாளையும் தாயாரையும் எழுந்தருளச் செய்யலாம். சமுத்திரமும், நதியும் இல்லாத ஊர்களில் குளம் இருந்தால் அங்கு ஏற்பாடு செய்யலாம். எதுவுமே இல்லையா? கிணற்றடியில் எழுந்தருளச் செய்யலாம். அல்லது வீட்டிலேயே ஒரு சொம்பு நீரை எடுத்து வைத்து பகவானுக்கு அலங்காரம், ஆராதனை, நேவித்யம் செய்து பெருமாளையும், தாயாரையும் பூஜித்து பலன் பெறலாம்.
எனவே மாசி மகத்தன்று பெருமாளையும், தாயாரையும் சமுத்திர ராஜனோடு நாமும் தரிசித்து நற்பலன் அடையலாம்.