ஆரோக்யம் தரும் லூர்து அன்னை
அன்னை நோக்கி இறைஞ்சும் பக்தர்களின் குறை தீர்க்கும் அன்னை மரியாள், அடைக்கல மாதா, பனிமய மாதா, வேளாங்கண்ணி மாதா....
அன்னை நோக்கி இறைஞ்சும் பக்தர்களின் குறை தீர்க்கும் அன்னை மரியாள், அடைக்கல மாதா, பனிமய மாதா, வேளாங்கண்ணி மாதா, வியாகுல மாதா,காணிக்கை மாதா, அமலோற்பவ மாதா என்னும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறாள். அவற்றுள் ஒன்றுதான் லூர்துமாதா.
பிரான்சு தேசத்தில், 1858ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று பெர்னதெத் என்னும் பன்னிரண்டு வயது சிறுமியானவள் தன் வயதையொத்த சிறுமிகளோடு லூர்து என்னுமிடத்தில் ஆற்றின் அருகே விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று ஓர் ஒளி தோன்றியது.
அந்த ஒளியின் நடுவே ஓர் அழகிய மாது கையில் செபமாலை ஏந்திவராகக் காட்சி தந்தார். செபமாலை சொல்லும்படி பெர்னதெத்துக்கு அழைப்பு விடுத்தாள். அதோடு 16 நாட்களுக்கு தொடர்ந்து அந்த இடத்துக்கு வரும்படியும், பாவிகள் மனந்திரும்ப செபிக்கும்படியும், அங்கிருந்த குருவிடம் சொல்லி ஒரு கோயில் கட்டும்படியும் கேட்டுக்கொண்டார். மேலும் அங்கிருந்த ஒரு ஊற்றிலிருந்த வந்த தண்ணீரைக் குடிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டாள்.
சிறுமியானவள் அன்னையை நோக்கி, ""அம்மா, உன் பெயர் என்ன?‘' என்று கேட்ட போது, "நாமே அமல உற்பவம்' அதாவது மாசு மருவின்றி பிறந்த அன்னை என்று கூறினாள். உலகிலேயே அதிக திருப்பயணிகள் செல்லும் திருத்தலமாக இன்று லூர்துநகர் காட்சியளிக்கிறது. அங்கு சென்றோர் யாருமே அன்னையின் ஆசியைப் பெறாமல் திரும்புவதில்லை.
நோயாளியின் பாதுகாவலாகத் திகழும் லூர்து அன்னை, அங்கே பொங்கிப் பெருகி வரும் அற்புத ஊற்றுத் தண்ணீரை நம்பிக்கையுடன் குடிக்கும் எண்ணற்ற நோயாளிகளுக்கு உடல் நலமும், உள்ள நலமும் கொடுத்து வருகிறாள். எண்ணற்ற புதுமைகள் தினந்தோறும் நடந்து வருகின்றன.
தமிழகமெங்கும் லூர்து அன்னையின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் ஏராளமான கோயில்கள் உள்ளன. அவற்றுள் சென்னை பெரம்பூர் ஆலயமும், மதுரை புதூர் ஆலயமும் பிரசித்த பெற்றவை. அநேக தேவாலயங்களில், கோயில் வளாகத்துக்குள்ளேயே சிறுமி பெர்னதெத்துக்கு அன்னை காட்சியளிக்கும் வண்ணம் திகழும் கெபிகள் அமைக்கப்பட்டிருக்கும். மெழுகுவர்த்திகளைப் பொருத்தி வைத்து அன்னையின் அருள் வேண்டி இறைஞ்சும் எண்ணற்ற பக்தர்களை இங்கு காணலாம். நம்பிக்கையுடன் தன்னை நாடி வரும் பக்தர்களை இறை அன்னை என்றுமே கைவிடுவதில்லை.