நபிகள் நாயம் முஹம்மது (ஸல்) அவர்கள் விதவைகளுக்கு மறுவாழ்வு தரவே விதவைகளைத் திருமணம் செய்து வழிகாட்டினார்கள். அந்தத் திருமணங்களும் அல்லாஹ்வின் ஆணைப்படியே நடந்தன. திருக்குர்ஆனின் 33ஆம் அத்யாயத்தில் 50 முதல் 52 வரை உள்ள வசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
கருணை நபி(ஸல்) காலத்தில் வாழ்ந்த அவர்களின் தோழர்கள் முதல் இன்று வரை இஸ்லாமியர்கள் விதவைகளை விருப்பமுடன் திருமணம் புரிந்து வாழ்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புரிந்த விதவை திருமணங்கள் மூலம் விளைந்த நன்மைகளும் நிறைய உண்டு.
யூதர்களின் பனூநுளைர் கோத்திர தலைவன் ஹுய்யு என்பவரின் மகள் அன்னை ஸஃபியா (ரலி) அவர்கள். அகழ் போரில் அவர்களின் கணவர் இறந்தார். விதவை ஸஃபியா கைதானார். விதவை ஸஃபியா (ரலி) அவர்களை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மணம் புரிந்தார்கள். இந்தத் திருமணத்திற்கு முன் இஸ்லாமிய எதிரிகள் இஸ்லாமியர்கள் மீது போர் தொடுத்த பொழுது இஸ்லாமிய எதிரிகளுக்கு உதவிய யூதர்கள் இந்தத் திருமணத்திற்குப் பின் இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்தப் போரிலும் ஈடுபடவில்லை.
மக்காவில் குறைஷி குல தலைவர்களின் போர் தளபதியாக விளங்கியவர் அபூசுப்யான். இவரின் வீட்டின் முன் போர்க்கொடி நடப்பட்டால் மக்காவில் அனைவரும் போரிட அந்தக் கொடியின் கீழ் அணி திரள்வர். இவர் தளபதியாக இருந்து உஹது, ஹம்ரவுல் அஸத், பத்ருல் உக்றா, அஹ்ஸôபு முதலிய போர்களை நடத்தினார். இவரின் மகள் உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்று அவரின் கணவர் உபைதுல்லாவுடன் அபிசீனியாவிற்குச் சென்றார். அங்கே சென்றதும் உபைதுல்லா கிறித்துவராகிவிட்டார். உம்மு ஹபீபா விதவையானார். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அபிசீனிய மன்னர் நஜ்ஜாஸியை அபிசீனியாவிற்கு அவர்களின் பிரதிநியாக நியமித்த பின் இந்த விதவையைத் திருமணம் செய்தார்கள். இத்திருமண விருந்தை நஜ்ஜாஸி அரசர் அரசு சார்பில் அளித்தார். இந்தத் திருமணத்திற்குப் பின் இஸ்லாமியர்களுக்கு எதிரான போர்களில் அபூசுப்யான் கலந்து கொள்ளவில்லை. பின்னர் அபூசுப்யானும் இஸ்லாத்தை
ஏற்றார்.
அன்னை ஜுவைரிய்யா(ரலி) அவர்களின் தந்தை ஹாரித் பிரபலமான வழிப்பறிக் கொள்ளைக் கூட்டத் தலைவர். இவரின் பனூமுஸ்தலக் கோத்திரத்தினர் போர்ப்பிரியர்கள். இவர்கள் உயிரைத் துச்சமென மதித்து வெஞ்சமர் புரியும் வீரர்கள். இவர்கள் இஸ்லாமியர்களை எதிர்த்து மிர்ஸில என்ற இடத்தில் நடத்திய போரில் நபித்தோழர் தாபித் துப்னு கைஸ் (ரலி) அவர்கள் ஜுவைரிய்யா(ரலி) அவர்களைக் கைது செய்து மதீனாவிற்கு அழைத்து வந்தார்கள். இவரை நபி(ஸல்) அவர்கள் திருமணம் செய்த பின் இந்தக் கோத்திரத்தார் முஸ்லிம்களுக்கு எதிரான எந்தப் போரிலும் ஈடுபடவில்லை.
நபிகளாரின் மனைவியரான இவர்கள் பெண்களிடையே இஸ்லாமிய பிரச்சாரம் செய்தனர். பெண்களின் பிரச்னைகள் தீர உதவினர்.
நபிகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும் நபிகளார் நவின்ற நன்மொழிகளையும் (ஹதீஸ்) எடுத்துரைத்தனர். அன்னை ஸஃபியா(ரலி) அவர்கள் பத்து ஹதீஸ்களையும் உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் 65 ஹதீஸ்களையும் அன்னை ஜுவைரிய்யா(ரலி) அவர்கள் ஏழு ஹதீஸ்களையும் அறிவித்தனர். அவை புகாரி, முஸ்லிம் மற்றும் இதர ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளன.
நாமும் நபிகளாரின் வழியில் நல்வாழ்வு வாழ்ந்து பெண்களின் அறிவும் ஆற்றலும் சமுதாயத்திற்குப் பயன்பட துணைபுரிவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.