முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறந்த ஏழாம் நாளில் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபு பெயரனுக்கு முஹம்மது என்ற பெயரைச் சூட்டினார். ""அவரின் மூதாதையர்களிலோ அல்லது அவரின் சமூகத்திலோ எவருக்கும் இல்லாத இப்புதிய பெயரைச் சூட்டியது ஏன்? என்று எல்லோரும் கேட்டனர்.
புவியிலும் வானிலும் புகழப்படும் நிகழ்வுகளை நிகழ்த்தும் இகத்தில் மிக மாற்றத்தை உண்டு பண்ணும் உயரிய குழந்தையாக திகழ வேண்டும் என்று தீர்மானித்து முஹம்மது என்ற திருப்பெயரைப் பெயரனுக்கு இட்டதாக இயம்பினார் அப்துல் முத்தலிப்.
அப்துல் முத்தலிப் ஆசைப்பட்டவாறே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வளரும் பயிர் முளையிலே என்பதற்கொப்ப இளமையிலேயே உண்மையாளராக, உற்றுழி உதவுபவராக, உற்றம் சுற்றம் பேணுபவராக, மற்றவர்களின் நன்மதிப்பிற்கு உரியவராக இருந்தார்கள்.
மக்காவை விட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் புறப்பட்ட பொழுது, மாநபி(ஸல்) அவர்கள், அவர்களிடம் தரப்பட்ட அமானித (பிறர் பாதுகாத்து வைத்திட தந்த) பொருட்களை மறுநாள் உரியவர்களிடம் கொடுக்கும் பொறுப்பை அலி(ரலி) அவர்களிடம் ஒப்படைத்துச் சென்றார்கள்.
நாற்பதாம் வயதில் நபித்துவம் (இறைத்தூது) பெற்று, நற்போதனை புரிந்து, ஏக இறை கொள்கையை 23 ஆண்டுகளில் வேகமாகப் பரப்பி, அவர்களின் வாழ்நாளிலேயே உலகின் பல நாடுகளில் இஸ்லாமிய அரசை நிறுவி வரலாறு படைத்தவர்கள் அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள். பாட்டனார் அப்துல் முத்தலிப் முஹம்மது என்று பெயரிடும் பொழுது எண்ணியது திண்ணியமானது. ஏற்புடைய எண்ணங்களை ஏக இறைவன் ஏற்று பரிணமிக்க செய்வான் என்பதும் நிரூபிக்கப்படுகிறது.
அயாஸ் என்பவர் அவரின் மகன் முஹம்மதை சுல்தான் மஹ்மூது கஸ்னவீயிடம் பணிக்கு அமர்த்தினார். ஒருநாள் சுல்தான் சுத்தம் செய்வதற்கு நீர்கொண்டு வருமாறு அயாஸýடைய மகனிடம் சொல்லுமாறு மற்றொருவருக்கு கட்டளையிட்டார். இதனை கவனித்த அயாஸ் அவரின் மகன் தவறேதும் புரிந்துவிட்டானோ? மகனிடம் நேரில் சொல்லாமல் சுல்தான் மற்றவர் மூலம் சொல்கிறாரோ என்று ஐயமுற்று கவலைப்பட்டார்.
அயாஸ் சோர்ந்து அமர்ந்திருப்பதைப் பார்த்த சுல்தான் முகம் வாடியிருப்பதன் காரணத்தைக் கேட்டார். அயாஸ் அவரின் மகன் அரசரிடம் மரியாதை குறைவாக நடந்துகொண்டானோ? அதனால் அரசர் அவனைப் பெயரைச் சுட்டி அழைக்கவில்லையோ என்று அச்சமுறுவதாகக் கூறினார்.
சுல்தான், ""நான் ஒளு என்னும் சுத்தமில்லாமல் முஹம்மது என்ற பெயரை உச்சரிக்க மாட்டேன். ஒளு இல்லாத பொழுது உன் மகனைப் பெயர் சொல்லி அழைக்க மாட்டேன்'' என்றார்.
முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பெயரை, சிறப்பு பெயர்களைப் புகழ்ந்துரைப்பது ஸலவாத் ஆகும். ஸலவாத் சொல்வதனால் சகல பாக்கியங்களையும் அகிலம் ஆளும் அல்லாஹ் அருள்வான். நாமும் நாளும் நந்நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் சொல்லி எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.