இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் குடும்பச் செலவிற்கு நாளொன்றுக்கு இரண்டு திர்ஹங்கள் மட்டுமே கலீபா ஊதியமாக பெற்று எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
வேனிற் காலத்திற்கு ஓர் உடையும் குளிர் காலத்திற்கோர் உடையும் என்று இரண்டு ஆடைகளே அரேபியாவின் ஏழைகளுக்கு உள்ளது போன்று கலீபாவிற்கும் அவரின் குடும்பத்தினருக்கும் இருந்தன.
கலீபா கோடையில் அணிந்த ஆடை கிழிந்து கிழிசலை இனியும் தைக்க இயலாது என்ற நிலை ஏற்படும் வரை மாற்றுடை வாங்க மாட்டார். ஒருமுறை அவ்வாடையில் பன்னிரண்டு தையல்களிட்ட கலீபாவின் மகள் ஹஃப்ஸô (ரலி) அவர்கள் தந்தையிடம் குறை கூறினார். ""மக்களின் வரி பணத்திலிருந்து இதைவிட உயர்ந்த ஆடையை வாங்க முடியாது. மகளே! உன் தந்தையை இழப்பிற்கும் இழிவிற்கும் ஆளாக்கி விடாதே!'' என்று எச்சரித்தார்.
ரபீஉ இப்னு ஜியாத் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கலீபாவிடம், ""சுவையோடு உண்ணவும், மெல்லிய ஆடை அணியவும், உயர்ந்த வாகனங்களில் செல்லவும் மக்களினும் அதிக தகுதி உங்களுக்கு உண்டு'' என்று உரைத்ததும் அருகிலிருந்த கைத்தடியை எடுத்து அவரின் மீது எறித்து, ""இத்தகைய அறிவுரை உங்களையும் என்னையும் இறைவன் பொருத்தத்தைப் பெற முடியாமல் தடுத்துவிடும். பயணம் செல்லும் கூட்டம் அவர்களின் பொருள்களைச் சுமந்து செல்லவும் அவர்களின் தேவைக்கேற்ற ஏவலை எடுத்து செய்யவும் அமர்த்திய பணியாள் அக்கூட்டத்தினரை விட தன்னை உயர்வாய் கருதுவது சரியா?'' என்று கேட்டு சரியல்ல என்ற பதிலை அவரிடமிருந்து பெற்று, ""என் நிலையும் அப்பணியாளின் நிலையே'' என்று பதிலுரைத்தார்.
ஒரு சமயம் கலீபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் மதீனாவில் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்ச காலத்தில் கலீபாவின் உடையில் பதினாறு தையல் ஒட்டுகளைக் கண்டதாக ஹழ்ரத் ஸôஇப் இப்னு யஜ்ஸீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒருமுறை கலீபா அவர்களின் இரு புயங்களுக்கிடையே மூன்று தையலிடப்பட்ட ஆடையோடு கலீபாவைக் கண்டதாக ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
ஒரு வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பள்ளிக்குத் தாமதமாக வந்த கலீபா உமர் (ரலி) அவர்கள், அவர்களின் ஒரே உடையைத் துவைத்து உலர தாமதமாகி விட்டதால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்தார்கள்.
கலீபா உமர் (ரலி) அவர்கள் ஹஜ் பயணத்தில் கூடாரம் கொண்டு செல்ல மாட்டார்கள். மரங்களின் மேல் போர்வையை விரித்து அதன் நிழலில் தங்கினார்கள்.
ஒருநாள் கலீபா உமர் (ரலி) அவர்களின் சிறுவயது மகன் கிழிந்த ஆடையைக் காட்டி பள்ளித் தோழர்கள் எள்ளி நகையாடியதைச் சொல்லி அழுதார். துள்ளி மகிழும் பிள்ளையின் அழுகையால் உள்ளம் உருகிய உமர் (ரலி) அவர்கள் மகனுக்கு மாற்றாடை வாங்க அடுத்த மாத ஊதியத்தில் சிறிது முன்பணம் தந்து அடுத்த மாத ஊதியத்தில் கழித்திட கடிதம் எழுதினார்.
பொருள் காப்பாளர் அம்ரிப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அடுத்த மாதம் வரை கலீபா உயிருடன் இருப்பதாக உறுதி மொழி எழுதித் தந்தால் முன்பணம் தருவதாய் பதில் எழுதினார். நிலையாமையை நினைவுறுத்திய பொருள் காப்பாளருக்கு அருள்புரியுமாறு அல்லாஹ்விடம் வேண்டிய கலீபா உமர் (ரலி) அவர்கள் மகனுக்கும் மனதில் பதியும் வண்ணம் பக்குவமாய் தக்க நல்லுரை நல்கினார்.
கலீபா உமர் (ரலி) அவர்களின் வழியில் காட்சிக்கு எளியனாய் மாட்சியுடன் ஆட்சி புரிந்தால் மக்கள் மகிழ்வோடும் மன நிறைவோடும் வாழ்வர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.