வெள்ளிமணி

தீர்ப்பில் ஈர்ப்பு!

வழங்கப்படும் தீர்ப்பு வழக்கில் தோற்றோரையும் ஈர்த்து உண்மையை உணர்ந்து திருந்துவதற்குப் பொருந்துவதாக அமைய வேண்டும்.

மு. அ. அபுல் அமீன்

வழங்கப்படும் தீர்ப்பு வழக்கில் தோற்றோரையும் ஈர்த்து உண்மையை உணர்ந்து திருந்துவதற்குப் பொருந்துவதாக அமைய வேண்டும். அதனாலேயே வேதங்கள் நீதி நூலாவதைத் திருக்குர்ஆன், "நம்முடைய தூதர்களுக்கு வேதத்தைக் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடப்பதற்குத் தராசையும் கொடுத்தோம்'' (57-25) என்று கூறுகிறது.

தராசையும் கொடுத்தோம் என்ற மறை தொடர் தராசு போல் ஒரு பாற்கோடாது சமநிலையுடன் தீர்ப்புகள் அமைய வேண்டும். அவ்வாறு அமைய, ""நீதிபதிகள் மன இச்சையைப் பின்பற்றக் கூடாது; மக்களுக்கு அஞ்சக் கூடாது. அவர்களின் தீர்ப்பை அற்ப விலைக்கு விற்கக் கூடாது. விஷயங்களை விவாதங்களை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பழி வாங்கும் எண்ணமில்லாத சகிப்புத் தன்மை உடையவராயிருக்க வேண்டும். அல்லாஹ் ஏவியதை ஏற்று நடந்து விலக்கியதிலிருந்து விலகி இருக்க வேண்டும். கற்றறிந்தவராய் இருப்பதோடு கேள்வி ஞான பெருக்கமும் இருக்க வேண்டும். எடுக்கும் முடிவில் உறுதியானவராக இருக்க வேண்டும்'' என்று ஏந்தல் நபி எடுத்துரைத்தது புகாரியில் காணப்படுகிறது.

திருக்குர்ஆனின் 4-58 வது வசனமும், ""மனிதர்களுக்கிடையே நீங்கள் தீர்ப்பு கூறும் பொழுது பாரபட்சமின்றி நீதமாக தீர்ப்பளிக்குமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ் உங்களுக்கு உரைக்கும் இந்த உபதேசம் மெய்யாகவே மிக சிறந்தது. அல்லாஹ் மிக்க செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான்'' என்று கூறுகிறது.

சிந்தித்து நிந்தனையின்றி நீதி வழங்குவதை நியாயப்படுத்தும் நீதர் நபியின் நீதி போதனை புகாரியில் பதிவாகியுள்ளது.

"மக்களின் உரிமைகள் தொடர்பாக நீதிபதி பாரபட்சமின்றி ஐயத்திற்கிடமில்லாமல் அவதூறு ஏற்படாவண்ணம் சொந்த அறிவால் தீர்ப்பளிப்பது செல்லும்''

ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டில் முஹம்மது (ஸல்) அவர்கள் ஹழ்ரத் முஆது இப்னு ஜீபல் (ரலி) அவர்களை ஏமன் பகுதிக்கு நீதிபதியாக நியமித்தார்கள். அவரை வழியனுப்பும் பொழுது பெருமான் நபி அவர்கள் கேட்ட கேள்விகளும் பெற்ற பதில்களும் நீதி வழங்குகையில் நினைவில் கொள்ளத்தக்க நீதிகளாகும்.

"தீர்ப்பு வழங்க நீங்கள் ஆதாரத்தை எதிலிருந்து பெறுவீர்கள்?''

"அல்லாஹ்வின் அருமறையாம் அல்குர்ஆனே அடிப்படை ஆதாரம்''

"உங்களிடம் வரும் பிரச்னைக்குக் குர்ஆனில் நேரடி ஆதாரம் அமையாத பொழுது எவ்வாறு தீர்ப்பு வழங்குவீர்கள்?''

"இறை தூதரின் மறைவழி வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்து நிறைவான ஆதாரம் தேடுவேன்''

"அத்தேடலிலும் புத்தியில் தீர்ப்பு புலப்படவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?''

"என் அறிவைப் பயன்படுத்தி ஆழ்ந்து சிந்தித்து நியாயத் தராசு தாழ்ந்திடாது தீர்ப்பளிப்பேன்''

நபிகளார் அபிமான தோழரைப் பாராட்டி பணிக்கு அனுப்பினார்கள்.

இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் பஸ்ராவின் ஆளுநர் அபூமூஸல் அஷ்அரீ (ரலி) அவர்களுக்கு இக் கருத்தினை நினைவுறுத்தி எழுதிய மடலில், ""உங்களுக்கு ஐயம் ஏற்படும் பொழுது குர்ஆனிலிருந்தும் நபிகளாரின் நற்போதனைகள் பொற்புடை வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளிலிருந்தும் தெளிவு ஏற்படாவிட்டால் பிரச்னைக்கு முன்னுள்ள முன்னுதாரணங்களைத் தேடி அலசி ஆராய்ந்து அவற்றிற் கொப்ப அல்லாஹ்விற்குப் பொருத்தமானதும் நேர்மையானதும் தான் என்பதை

உறுதிபடுத்தி உரிய தீர்ப்பு வழங்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்கள்.

இவ்வாறு வழங்கப்படும் தீர்ப்புகளை மறுக்காது ஏற்பது வழக்காடியவர்களின் கடமை என்பதை வலியுறுத்துகிறது குர்ஆனின் 4-65 வது வசனம்.

"தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உங்களை நீதிபதியாக நியமித்து நீங்கள் உங்கள் இறைவன் மீது சத்தியமாக செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி ஏற்காதவர்கள் நம்பிக்கையாளர்களாக மாட்டார்கள்''

நீதிபதி கோபமாக இருக்கும் பொழுது தீர்ப்பளிக்க கூடாது'' (புகாரி) என்றுரைத்த ஏந்தல் நபி தீர்ப்பு தாமதமாவதையும் தடுத்தார்கள்.

தீர்ப்பின் தாமதம் தீர்ப்பின் மறுப்பென்று உரைக்கிறது த்ன்ள்ற்ண்ஸ்ரீங் ண்ள் க்ங்ப்ஹஹ்ங்க் த்ன்ள்ற்ண்ஸ்ரீங் ண்ள் க்ங்ய்ண்ங்க் என்ற ஆங்கில சொற்றொடர்.

"விசாரணையை வீணாய்க் கடத்திக் கொண்டிராது விரைவாய் விசாரித்து விளக்கம் பெற்று உடனுக்குடன் தீர்ப்பளிக்க வேண்டும்'' என்ற நபிமொழி படி நீதிபதி யஹ்யா பின் யஅமர் (ரஹ்) அவர்கள் சாலையிலும் நீதிபதி ஷஅபி (ரஹ்) அவரகள் வீட்டின் வாசலிலும் தீர்ப்பளித்ததை புகாரி தெரிவிக்கிறது.

தீர்ப்புகள் திருத்தப்படுவதை விட தீர்ப்புகள் திருப்பு முனையாய் அமைந்து சமூகத்தைத் திருத்தி சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாட்டில் நல்லாட்சிக்கு வழிகாட்ட வேண்டும். தீர்ப்புகள் தீர்ப்பு நாளின் (யுக முடிவு நாள்) அதிபதி அல்லாஹ்வின் அருளைப் பெறுவதாக அமைய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT