மனமாற்றம் அடையும் காலம்
உலகெங்கும் உள்ள எல்லா மதங்களும் வலியுறுத்தும் பொதுவான பண்புகள் ஜெபம், தவம் மற்றும் தான தர்மம் ஆகியவை.
உலகெங்கும் உள்ள எல்லா மதங்களும் வலியுறுத்தும் பொதுவான பண்புகள் ஜெபம், தவம் மற்றும் தான தர்மம் ஆகியவை.
கிறிஸ்துவர்கள் உயிர்ப்புப் பெருநாளுக்கு முன்னதாக நாற்பது நாட்கள் சிறப்பான தவமுயற்சிகளில் ஈடுபடுகின்றனர். விபூதி புதனன்று ஆரம்பமாகும் இந்த நாற்பது நாட்களே தவக்காலம் என அழைக்கப்படுகிறது. விபூதி புதனன்று நடைபெறும் திருப்பலியில் பக்தர்களின் நெற்றியில் விபூதி அல்லது சாம்பல் பூசப்படுகிறது. அப்போது குருவானவர் "மண்ணிலிருந்து வந்த மனிதனே, நீ மண்ணுக்கே திரும்புவாய்' என்ற வார்த்தைகளைக் கூறி மனித வாழ்வின் நிலையாமையை நினைவுபடுத்துகிறார்.
இறைவன் விரும்பும் தவம் அல்லது நோன்பு எது? ""சாக்கு உடையையும், சாம்பலையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு?'' (எசாயா 58:6,7).
மேலும் நோன்பு இருப்பதை விளம்பரப்படுத்த நினைப்பவர்களுக்கு இயேசு கூறுவது ஒரு பாடமாக அமையட்டும். "நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப்போல் முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்று முகங்களை விகாரப்படுத்திக்கொள்பவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது. மாறாக மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்''(மத்தேயு 6:16-18).
அடுத்ததாக மனம் மாற வேண்டும். தங்களிடமுள்ள துர்க்குணங்களான போட்டி, பொறாமை, ஆணவம், சுயநலம், மன்னியாமை ஆகியவற்றிலிருந்து விடுபட்டு இறைவன்பால் மனதைச் செலுத்த வேண்டும். தன் சகோதரனையும், உறவினரையும் மன்னிக்காத ஒருவன் ஆயிரக்கணக்கான தர்ம காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும் இறைவனுக்கு முற்றிலும் உகந்தவனாக முடியாது. எனவே மனம் மாறுங்கள்; பகிர்ந்து வாழுங்கள்; அதன் மூலம் இறைவனை நோக்கி மனதை உயர்த்துங்கள்.
எனவே வருடந்தோறும் வந்துபோகும் தவக்காலத்தை ஒரு வாடிக்கையான நிகழ்வாக மாற்றாமல் அர்த்தமுள்ள மனமாற்றம் அடையும் காலமாக மாற்றுவோம். இறைவனுக்கு ஏற்புடையவர்களாக மாறுவோம்.