முகப்பு
வெள்ளிமணி

திருக்கார்த்திகையில் தீபங்கள் ஒளிரட்டும்!

கார்த்திகையில் பிரகாசிக்கும் தீபங்கள், காணும் கண்களுக்கு சுகமானவை. அளவற்ற நன்மைகளை நமக்கு அள்ளித் தருபவை! தீபங்கள் அற்புதமானவை. புனிதமானவை!

Updated On : 28 நவம்பர், 2014 at 5:36 PM
பகிர்:

கார்த்திகையில் பிரகாசிக்கும் தீபங்கள், காணும் கண்களுக்கு சுகமானவை. அளவற்ற நன்மைகளை நமக்கு அள்ளித் தருபவை! தீபங்கள் அற்புதமானவை. புனிதமானவை!

இருட்டிலே ஒரு தீபத்தை ஏற்றி வைத்தால், இருள் விலகி வெளிச்சம் வந்துவிடும். அதுவே ஒளி விளக்கு; அருள் விளக்கு!

ஒரு சமயம் சூரபத்மனின் அட்டகாசம் அளவில்லாமல் போய்க்கொண்டிருந்தது. தேவர்கள், ரிஷிகள், மனிதர்கள் என அனைவரும் அஞ்சி நடுங்கினர். ஒவ்வொருவரும் சூரபத்மனை ஒழிப்பதற்கு சரியான வழியை ஆராய்ந்தனர். முடிவில் இந்த பிரச்னையை தீர்க்க வேண்டி பரமேஸ்வரனிடம் சென்று சரணடைந்தனர்.

Advertisement

சிவபெருமான், "என் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிவரும் ஆறு தீப்பொறிகளிலிருந்து ஆறுமுகன் தோன்றுவான். அந்த ஆறுமுகனே சூரபத்மனை வதம் செய்வான். அதனால் நீங்கள் அனைவரும் கவலைப்படாமல் செல்லுங்கள்'' என்று அருளினார். சிவபெருமானின் வாக்கின்படி, பரமனின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் உருவாயின. அந்த ஆறு தீப்பொறிகளும் கங்கையில் விழுந்து குளிர்ச்சி அடைந்து, பின்னர் சரவணப்பொய்கை என்னும் ஆற்றில் வந்து சேர்ந்தன. அதன்பின் அங்கிருந்த ஆறு தாமரை மலர்களில் ஆறு ஆண் குழந்தைகளாக உருவெடுத்தன. இந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகைப் பெண்களால் காப்பாற்றி வளர்க்கப்பட்டனர்.

ஒருசமயம், கார்த்திகைப் பெண்களால் அன்போடும் அரவணைப்போடும் வளர்க்கப்பட்ட ஆறு குழந்தைகளையும் பார்வதி தேவியானவள் ஒரு குழந்தையாக்கி, குழந்தையை கயிலாயத்திற்கு கொண்டு போய்விட்டார். அப்போது குழந்தைகளை விட்டுப் பிரிய மனமில்லாத கார்த்திகைப் பெண்கள் மிகுந்த வேதனையுடன் பரமேஸ்வரனிடத்திலே சென்று, ""பிரபு...! நாங்கள் வளர்த்து வந்த இந்த குழந்தைகள் மீது எங்களுக்கு அளவில்லாத பாசமும் பரிவும் நிறைந்த அன்பும் ஏற்பட்டுவிட்டது. எங்களையெல்லாம் விட்டுவிட்டுப் பிரிந்து செல்லும் இக்குழந்தைகளை நாங்கள் மீண்டும் பார்க்க ஆசைப்பட்டால், எப்படி அவர்களைப் பார்ப்பது?'' என்று மனம் வருந்தி கேட்டனர். அதற்கு பரமேஸ்வரன்

""கார்த்திகைப் பெண்களே! உங்களுடைய மனவேதனை எனக்குப் புரிகிறது. நீங்கள் தவறாமல் "கார்த்திகை' விரதத்தை கிருத்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டித்து வாருங்கள். மேலும் கார்த்திகை மாதத்தில் "கிருத்திகை' நட்சத்திரத்தன்று நிறைய தீபங்கள் ஏற்றி முருகனை வழிபட்டீர்களானால் உங்கள் முன்பு முருகன் ஆறுமுகனாகத் தோன்றி காட்சி தருவான்'' என்று கூறினார்.

சிவபெருமானின் அறிவுரைப்படி கார்த்திகைப் பெண்கள் தவறாமல் தட்சிணாயனத்தில் "ஆடிக் கிருத்திகையிலும் உத்ராயணத்தில் தைக்கிருத்திகையிலும் உபவாசமிருந்து விரதத்தை அனுஷ்டித்தனர். அதேபோல, கார்த்திகை மாதத்தில் "கிருத்திகை' நட்சத்திரத்தன்று நிறைய தீபங்கள் ஏற்றி முருகனை மனமாற நினைத்து, ஆத்ம திருப்தியுடன் வழிபட்டனர். கார்த்திகைப் பெண்களின் ஆழமான பக்தியை மெச்சிய முருகப்பெருமான், அவர்களுக்கு ஆறுமுகத்துடன் காட்சி தந்து அவர்களுக்கு மோட்சத்தைத் தந்ததாக புராணம் கூறுகிறது.

கார்த்திகைப் பெண்களைப் போலவே, நாமும் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகையன்று விளக்குகளை நிறைய ஏற்றிவைத்து முருகனை வழிபட்டால் நமக்கு எல்லா நன்மைகளையும் முருகப்பெருமான் வழங்கி மோட்சத்தைக் கொடுப்பார் என்பது ஐதீகம்.

ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிவந்த நெருப்புப் பொறிகளில் உருவானவன் "கந்தன்! சுட்டெரிக்கும் சூரியனைப்போல் பிரகாசிக்கும் கந்தனின் பெயரைச் சொன்னால், வந்த வினையும் வருகின்ற வினையும் கலங்கி ஓடிவிடும்.

முருகப்பெருமானை, ""கந்தா..! முருகா..! கார்த்திகேயா..! என்று கூவி அழைத்து கார்த்திகை விளக்கை ஏற்றவேண்டும். அந்த கார்த்திகை விளக்கின் சுடரிலே கலந்திருக்கும் கார்த்திகேயன் நம் குறைகளை அன்போடு கேட்டு தீர்த்து வைப்பான்.

திருக்கார்த்திகை அன்று மாலை வேளையில் நீராடி, தூயஉடை உடுத்தி, நெற்றியில் திருநீறு அணிந்து, தீபங்களை ஏற்றி வைத்து மனமுறுக பிரார்த்திக்க வேண்டும். மனமுறுகி ஏற்றிய தீபத்தை அருள்முருகனாக வழிபடவேண்டும். முருகனுக்கு உகந்த சிவந்த மலர்களிலே அர்ச்சனை செய்ய வேண்டும். கந்த சஷ்டி கவசம், சண்முகக் கவசம் படிக்க வேண்டும். திருப்புகழைப் பாடித் தொழ வேண்டும். உப்பப்பம், வெல்லப்பம் நைவேத்தியம் செய்து கற்பூர தீபாராதனை காண்பித்து மனநிறைவோடு பூஜையை முடிக்க வேண்டும்.

முருகன் குழந்தைகளுக்கு குழந்தையானவன். இளைஞர்களுக்கு குமரன்; கலைஞர்களுக்கு ஆறுமுகன்; வீரர்களுக்கு சேனாதிபதி; வேத மந்திரம் கற்றவருக்கு ஞானபண்டிதன்; நல்ல தம்பதியருக்கு வள்ளி மணாளன்; பற்றற்ற ஞானிகளுக்கும் மகான்களுக்கும் அவன் ஆண்டியாக அருள்பாலிக்கிறான்!

நம்மிடமுள்ள இருள் என்னும் அஞ்ஞானத்தை விரட்டவும் நமது வேண்டுதல்கள் நிறைவேறவும் ஆறுமுகனாம் திருமுருகனை மனமார வேண்டித் துதிக்க வேண்டும்.

"முருகா சரணம்! கந்தா சரணம்! சண்முகா சரணம்!'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.