முகப்பு
வெள்ளிமணி

அரனுக்கு அன்னாபிஷேகம்!

அபிஷேகப்பிரியர் சிவன்! அலங்காரப் பிரியர் விஷ்ணு! இந்த முதுமொழிக்கு ஏற்ப சிவாலயங்களில் நடைபெறும் பூஜைகளில் அபிஷேகமே முதல் இடம் பெறுகிறது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:08 AM
பகிர்:

அபிஷேகப்பிரியர் சிவன்! அலங்காரப் பிரியர் விஷ்ணு! இந்த முதுமொழிக்கு ஏற்ப சிவாலயங்களில் நடைபெறும் பூஜைகளில் அபிஷேகமே முதல் இடம் பெறுகிறது. நீராடலில் மகிழ்பவன் ஈசன். பஞ்ச பூதங்களும் ஈசனுள் ஒன்றியுள்ளன. ஐந்து முகங்களுடன் விளங்கும் ஈசனுக்கு நல்லெண்ணெய், பஞ்சகவ்யம், பஞ்சாமிருதம் போன்ற பதினோரு பொருள்களால் அபிஷேகம் செய்வது மரபு. இதனை, "ஆவிலைஞ்சு உகந்தாடும் அவன் கழல், அஞ்சுகொலாம் அவர் ஆடினதாமே, ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்'' என்றெல்லாம் தேவாரம் சிறப்பிக்கின்றது.

அபிஷேகம் செய்வதன் மூலம் சிறந்த பலன் கிடைப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

உதாரணமாக கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநீலக்குடி மனோக்ஞநாத சுவாமிக்கு தைலாபிஷேகம் விசேஷமாகும்.

இங்கு அம்பாளே சுவாமிக்கு எண்ணெய் அபிஷேகம் செய்வதாக ஐதீகம். திருவையாறு அருகில் திருநெய்த்தானம் தேவாரத்தலத்தில் பசுநெய் அபிஷேகம் சிறப்பானது. இத்தல இறைவனுக்கு நெய்யாடியப்பர் என்று பெயர். ""நெய்யாடிய பெருமானிடம் நெய்தானமெனீரே'' என்பார் சம்பந்தர்.

தினசரி அபிஷேகம் தவிர சில சிறப்பு தினங்களில் சில திரவியங்களால் சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம், ஆனித்திருமஞ்சனம் என கூறப்படும் பலவற்றுள் குறிப்பிடத்தக்கது,ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் ஆகும்.

அறுவடையாகி புதுநெல் வந்தவுடன் அதை தெய்வத்துக்கு அளித்துவிட்டுச் சாப்பிட வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.

எனினும் வேதங்கள் கூறும் தாத்பரியமாவது, "ஹவிஷே'' (அன்னரூபியாயிருப்பவர்) என்றும் ""போஜனாய'' (எல்லாருக்கும் உணவளிப்பவர்) என்றும் சிவ சகஸ்ரநாம ஸ்தோத்திரம் சிவபெருமானை விளித்துக்கூறும்.

"உணவும் அவனே! உண்பவனும் அவனே! என்று இறைவனைப் போற்றுகிறது வேதம். மேலும் அன்னம் நமது உயிர். இதை உட்கொள்வது நமது உடல் என்று வேதம் விளக்குகிறது.

பக்தன், அன்னத்தை அளித்த ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்வதில் திருப்தி காண்கிறான். இவ்வாறு அன்னாபிஷேகம் செய்தால், விளை நிலங்களில் நல்ல விளைச்சல் உண்டாகும் என்றும் பசி, பட்டினி வராது என்றும் மோட்ச சாம்ராஜ்ய பதவி நல்கும் எனவும் பலன்கள் கூறப்பட்டுள்ளன.

ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப்பொலிவுடன் திகழ்கிறான்.

எனவே, திங்கள் முடி சூடியவருக்கு மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதான் சிறப்பு என்று தமது முன்னோர்கள் ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

மேலும், ஐப்பசி மாதத்தில்தான் நிலவு பூமிக்கு அருகில் வந்து தனது முழு ஒளியையும் வீசுகிறது என்கிறது வானவியல் சாஸ்திரங்கள்! நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி.

ஐப்பசி மாதம், நெற்பயிரை அறுவடை செய்யும் காலமாகும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அக்காலத்தில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்வதை ஐப்பசி மாதத்தில் நடைமுறை படுத்தினார்கள்.

அன்னாபிஷேக அன்னத்தின் ஒரு பகுதியை நீர் நிலைகளில் கரைத்து நீரில் வாழும் ஜந்துக்களுக்கு உணவாக அளிப்பர். அன்னத்தின் பெரும் பகுதியை பக்தர்களுக்கு பிரசாதமாகவும் அளிப்பது வழக்கமாகும்.

ஆன்மிக ரீதியாக மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் ஆதாரத்துடன் திகழும் அன்னாபிஷேகம், சிறிய கோயில் முதல் தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற தலங்கள் வரை அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

ஐப்பசி பௌர்ணமி (06.11.2014) நாளன்று அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று அன்னாபிஷேகத்தில் அரனை தரிசித்து அருள் பெறுவோமாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.