மலர்களால் ஆராதனை செய்யும் விழா
பாரத நாட்டில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி! தமிழ்நாட்டில்,
பாரத நாட்டில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி! தமிழ்நாட்டில், மலைமகள், கலைமகள், அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரையும் ஒவ்வொரு தேவியருக்கும் மூன்று நாள்கள் என மொத்தம் 9 நாள்கள் கொண்டாடுகின்றனர். பத்தாம் நாள் விஜயதசமி! தமிழகத்தில் இப்படி நாம் கொண்டாடி கொண்டிருக்க, கர்நாடகத்தில் இவ்விழாவை தசரா என்றும் வங்கதேசத்தில் துர்க்கா பூஜை என்றும் ஒரிசாவில் வீட்டுக்கு வந்த திருமகள் என்றும் ஆடிபாடி கொண்டாடுகின்றனர்.
இப்படி பலவாறாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையை தெலுங்கானா மாநிலத்தில் "பதுக்கத்தம்ம பண்டக' என்று மிகவும் பயபக்தியுடன் மிகவும் நேர்த்தியாக கொண்டாடுகின்றனர்.
நவராத்திரியின் முதல்நாள் மகாளய அமாவாசையன்று அம்பாளை நறுமணமுள்ள வண்ண வண்ண மலர்களைக் கொண்டு வடிவமைக்கின்றனர். மூங்கில் குச்சிகளால் ஒரு கூம்பு வடிவம் போல் அமைத்து, அதில் வரிசையாக மலர்களை அடுக்கி ஏழு கோபுரங்கள் செய்கின்றனர். அதை ஒரு தாம்பாளத்திலோ அல்லது மூங்கில் கூடை, பலகை போன்றவற்றில் நிறுத்தி அழகாக வடிவமைக்கின்றனர். கூம்பின் உச்சிப் பகுதியில் மஞ்சளினால் பிள்ளையார் பிடிப்பது போல் அம்பாளைப் பிடித்து வைத்து, அதற்கு குங்குமமிட்டு பூசணிப்பூவாலும் இதர மஞ்சள் வண்ணப் பூக்களாலும் அலங்கரிக்கின்றனர். நறுமணமுள்ள அந்தப் பூக்களின் வாசனை நம்மை கிறுகிறுக்க வைத்துவிடும்!
Advertisement
பெண்கள் இந்த அம்பாளை வைத்து எட்டு நாள்கள் பக்தியுடன் பூஜை செய்து எட்டாவது நாள், வாசலில் கொண்டு வந்து வைக்கின்றனர். பின்னர் பயபக்தியுடன் குத்துவிளக்கேற்றி வைத்து அம்மனை "பதுக்கம்மா' என்று அழைத்து வணங்குகின்றனர். பின்னர், அம்மனை சுற்றி வந்து கும்மி அடித்து ஆடிப்பாடி கொண்டாடுகின்றனர். அம்மனை இவ்விதம் வழிபடுவதற்கு ஒரு புராண நிகழ்வையும் இவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தட்சன் பெரிய யாகம் ஒன்றைச் செய்கிறான். அந்த யாகத்துக்கு சிவபெருமானை அழைக்கவில்லை. அதுகண்டு மனம் வெதும்பும் பார்வதி, தட்சனுக்கு புத்தி புகட்ட யாகத்துக்கு செல்ல விரும்புகிறாள். ஆனால் சிவபெருமான் பார்வதியை தடுக்கிறார். இருப்பினும் சிவபெருமான் சொல் கேளாமல் செல்கிறார் அன்னை. அங்கு தட்சனால் அவமானம் ஏற்படுகிறது. ஆத்திரமடைந்த பார்வதி, யாக குண்டத்தில் குதித்து தன்னை மாய்த்துக் கொள்கிறார். இந்த நிகழ்வை மையமாக வைத்தே நவராத்திரி விழாவை கொண்டாடுகிறார்கள்.
"யாக குண்டத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட பரமேஸ்வரி மீண்டும் உயிர்ப்பித்து வந்து, மனிதர்களாகிய தங்கள் அனைவரையும் காத்தருள்வார்கள்' என்ற நம்பிக்கையுடன் மணம் வீசும் மலர்களால் அம்பாளுக்கு விழா எடுத்து கொண்டாடுகிறார்கள் இம் மக்கள்!
வாசலில், மலர் அலங்காரத்தில் அழகாக அமர்ந்திருக்கும் மஞ்சள் வண்ண அம்பாளை பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி கொண்டு சென்று குளம் அல்லது நதியின் கரையில் வைத்துவிட்டு நாட்டுப்பாடல்களை ஒருமித்து பாடுவார்கள். பின்னர், அம்மனை மலர்க் கலசத்துடன் எடுத்து, தொழுதபடியே குளத்தில் மிதக்கவிடுவர். அதன் பிறகு அம்மனுக்கு படையல் செய்த உணவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி சாப்பிட்டு மகிழ்வார்கள்.
இந்த பூஜை செய்வதால், திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு நல்ல கணவன் அமைவான் என்றும்} சுமங்கலி பெண்கள் தங்கள் கணவன்மார்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பர் என்றும்}அம்மனின் அருள் தங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என்றும் } நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர். மேலும் பரம்பரை வம்சாவளி தொடரவும் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவும் வாழ்க்கையில் வளமை கூடவும் இந்த "பதுக்கம்மா பூஜை'யை கடைபிடிக்கின்றனர்.