வெள்ளிமணி

இந்துமத அற்புதங்கள் 52: மங்கை கையில் ஒரு மாம்பழம்

காரைக்கால் என்னும் நகரில் வாழ்ந்த புண்ணிய நங்கை புனிதவதியார். காரைக்கால் நகரின் தனதத்தன் என்பாரின்

டாக்டா் சுதா சேஷய்யன்

காரைக்கால் என்னும் நகரில் வாழ்ந்த புண்ணிய நங்கை புனிதவதியார். காரைக்கால் நகரின் தனதத்தன் என்பாரின் மகளான இவருக்கும், நாகப்பட்டினம் நகரின் தளபதி என்பாரின் மகனான பரமதத்தனுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின், காரைக்கால் நகரிலேயே வாழ்ந்தனர் பரமதத்தனும் புனிதவதியும்.

வணிகனான பரமதத்தனைப் பார்க்க வந்த வெளியூர்க்காரர்கள், இரண்டு மாம்பழங்கள் கொண்டு வந்தனர். அவற்றை வீட்டிற்குக் கொடுத்தனுப்பினான் பரமதத்தன்.

இதற்கிடையில், தன் இல்லத்தின் வாயிலில் வந்த அடியார்க்கு உணவிட விழைந்தார் புனிதவதியார். அடியாரை உள்ளழைத்து உபசரித்து உணவு படைத்தார். அவ்வாறு உணவிடும்போது, மாம்பழங்கள் இரண்டனுள் ஒன்றினை அரிந்து படைத்தும் விட்டார். உணவுண்ட அடியார் விடை பெற்றுச் சென்றார்.

மதிய உணவு வேளையில் வீட்டுக்கு வந்த பரமதத்தன், உணவருந்த உட்கார்ந்தான். இருந்த ஒற்றை மாம்பழத்தை அரிந்து கணவனுக்குப் படைத்தார் புனிதவதியார். உண்டு மகிழ்ந்த பரமதத்தனுக்கு, "இவ்வளவு சுவையா மாம்பழம்!' என்று வியப்பு; சுவை இழுக்க, இன்னொரு மாம்பழத்தையும் சுவைத்துவிடும் ஆசையில் "இன்னொன்றையும் கொண்டு வா!' என்று மனைவிக்குக் கட்டளையிட்டான்.

எங்கே போவாள் அவள்? அடியார்க்குக் கொடுத்தாயிற்றே! ஆண்டவனிடம் முறையிட்டாள். "இன்னொன்றைக் கேட்கிறாரே, எப்படிக் கொடுப்பது சிவனே!'

சிவபெருமான் திருவருளால், அவள் கையில் உடனே தோன்றியது ஒரு மாம்பழம்.

கொணர்ந்து கணவனுக்குப் படைத்தாள். அதைச் சுவைத்த அவனுக்கு இன்னும் வியப்பு. இந்த மாம்பழம் முதலாமவதுடன் சேர்த்தியா? இதன் சுவை இனிதாய், மிகவினிதாய், இன்னும் அதிகமாய், அதனின்று மாறுபட்டதாய், ஆனால் ஈடுஇணையற்றதாய்... அசந்து போன கணவன், மனைவியிடம் இந்த அதிசயத்தைக் கேட்டான்.

"எப்படி வந்தது இந்த மாம்பழம்?'

கணவன் கை பற்றி, கடவுள் திருமேனி முன் சென்று, நடந்தது உரைத்தார் புனிதவதியார்.

"உண்மையா? மாம்பழம் கூடத் தருவாரா சிவப்பரம்பொருள்? சாத்தியமா இது?''

பரமதத்தன் நெஞ்சில் நின்ற சந்தேகங்கள் - பாவை புனிதவதி மீண்டும் விண்ணப்பித்தார்.

"இறைவா! சிவபெருமானே! அரங்கம் ஆடும் அம்பலவாணா! மீண்டும் ஒரு மாம்பழம் தா! உன்னருள் பற்றி நான் எடுத்துச் சொன்னதை உண்மையென்று விளக்க வேண்டாமா! கொடுத்துவிடு ஒரு கனியை!'' என்று அப்பெண் வேண்ட, அவள் கையில் மீண்டும் கனிந்தது ஒரு மாங்கனி.

அந்தப் புனிதவதியாரே, காரைக்கால் அம்மையார் என்று புகழ் பெற்று, இறையனாராலேயே "அம்மை!' என்று அன்பொழுக அழைக்கப்பட்டவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT