வெள்ளிமணி

இந்துமத அற்புதங்கள் 52: நீந்திக் கரையேறியத் திருவேடு

அனல்வாதம் முடிந்தது. புனல்வாதமும் செய்ய வேண்டுமென புறச்சமயத்தார் வற்புறுத்தினார்கள்

டாக்டா் சுதா சேஷய்யன்

அனல்வாதம் முடிந்தது. புனல்வாதமும் செய்ய வேண்டுமென புறச்சமயத்தார் வற்புறுத்தினார்கள். வைகை ஆற்றின் கரையெல்லாம் பெருங்கூட்டம் கூடி நிற்க, ஆற்றங்கரைக்கு வந்தார் திருஞானசம்பந்தர். கருத்துக்களை எழுதி ஏடுகளை ஆற்றில் விடுவது; எது ஆற்றோடு போகாமல் தங்கி நிற்கிறதோ, அதுவே உண்மை. இதுவே புனல்வாதம்.

வைகைப் பெருநதியில், சிவபெருமான் சிரித்து விளையாடும் மதுரையம்பதியின் திருக்கரையில் நின்று புதியதொரு பாசுரம் பாடினார் ஞானசம்பந்தர். அந்தப் பாசுரத்தை ஏட்டில் எழுதி ஆற்றில் இட்டார்கள். ஆற்றின் பொங்கு பிரவாகத்தில் ஆடாமல் அசையாமல் நின்றது அந்த ஏடு.

ஒரு சில நிமிடங்கள்தாம்!

பின்னர், என்ன தோன்றியதோ அந்த ஏட்டுக்கு - ஆற்று வெள்ளத்தை எதிர்த்து மாற்று திசையில் பயணிக்கத் தொடங்கியது. ஆற்றில் அழியாமல் தங்குவது மட்டுமல்ல, ஆற்றையும் எதிர்த்து வெல்ல முடிவு செய்துவிட்டது போலும்! எல்லோரும் ஏடு வேகவேகமாகப் போவதைப் பார்த்து நின்றார்கள்.

அப்போது இன்னொரு அதிசயம்!

எம்பி, எம்பி ஏடு போவதைப் பார்த்தனர் மக்கள். மதுரை மன்னனும் பார்த்தான். எட்டிப் பார்க்கப் பார்க்க, கூன் பாண்டியனாய் இருந்த அவன் நின்றசீர் நெடுமாறனாய் நிமிர்ந்தான். அவனின் கூனல் முதுகு காணாமல் போயிற்று. "வேந்தனும் ஓங்குக!' என்று ஞானசம்பந்தர் பாடியது மன்னன் உடலையும் நிமிர்த்தியது. (இந்த மன்னனே பராங்குச அரிகேசரி என்று அழைக்கப்பட்டவனுமாவான். இவனுடைய மனைவியே மங்கையர்க்கரசியார். முன்னதாக இவனுடைய வெதுப்பு நோய் தீர்க்கவே, திருநீற்றுப் பதிகம் பாடினார் ஞானசம்பந்தர்.)

ஏடு போய்க் கொண்டேயிருந்தது. ஏடு நிற்க வேண்டி இன்னுமொரு பதிகம் பாடினார் சம்பந்தர். ஏடு கரையோரம் அணைந்து நின்றது. கரையோடு குதிரையில் சென்ற அமைச்சர் குலச்சிறையார் ஏடு அணைந்ததைக் கண்டு அதனை எடுத்தார். ஏடு அணைத்த அந்த இடம்தான், மதுரைக்குப் பக்கத்திலுள்ள திருவேடகம்.

புனல்வாதத்தின்போது பாடிய வாழ்த்துப் பாசுரம்

"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதுஎல் லாம்அர நாமமே

சூழ்க வையக மும்துயர் தீர்கவே.''

ஏடு நிற்கப் பாடிய பதிகம்

வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன்

பொன்னியல் திருவடி புதுமலர் அவைகொடு

மன்னிய மறையவர் வழிபட அடியவர்

இன்னிசை பாடலர் ஏடகத்து ஒருவனே.

திருவேடகம் தலத்தினைச் சென்றடையும் வழி மதுரையிலிருந்து பேருந்தில் செல்லலாம்.

இறைவன் - ஏடகநாதர்,  இறைவி - உமாதேவி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT