திருவண்ணாமலை திருத்தலத்தில் வாழ்ந்தவர் அருணகிரிநாதர். அவரிடம் சவால் விட்டார் ஒருவர். அருணகிரிநாதர் சீர்பாத வகுப்பும் கடைக்கணியல் வகுப்பும் பாடினார். முருகன் வரவில்லை. தன் தாய் பராசக்தியின் மடி மீது அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார் முருகப் பெருமான்.
அருணகிரியார் மயில் வகுப்பு பாடினார். அது கேட்ட மயில் சென்று முருகனின் முன்னிலையில் ஆடியது. அன்னை மடியில் ஆடிக் கொண்டிருந்த பெருமான், மயிலுக்கு இணையாக இறங்கி ஆடினார். அவ்வாறு ஆடிக் கொண்டே வந்து, தன் மீது முருகன் வந்து அமர்ந்தவுடன் அங்கிருந்து பறந்து பாய்ந்து வந்து திருவண்ணாமலையில் நின்றது மயில்.
திருவண்ணாமலைப் பகுதியை ஆண்டு வந்த பிரபுட தேவராய மன்னன், முருக தரிசனம் கண்டு, அப் பேரொளியால் தன் கண்ணொளி மழுங்கப் பெற்றான். அவனின் பார்வை மங்கியதையும் விபூதி கொடுத்துத் தீர்த்தார் அருணகிரிநாதர்.
அருணகிரிநாதர் பாடிய மயில் விருத்தம்
அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையிலேறு வாராட
அருகு பூத வேதாளம் அவையாட
மதுர வாணி தானாட மலரின் வேத னாராட
மருவு வானுளோராட மதியாட
வனச மாமி யாராட நெடிய மாமனாராட
மயிலு மாடி நீயாடி வரவேணும்
உதய தாம மார்பான ப்ரபுடதேவ மகராஜன்
உளமு மாட வாழ்தேவர் பெருமாளே.
மயில் மீதேறி வந்து காட்சி தந்த முருகப் பெருமானே, திருவண்ணாமலை திருக்கோயிலில் "கம்பத்து இளையனார் கோயில்'' என்னும் திருச்சந்நிதியில் காட்சி தருகிறார். அருணகிரிநாதர் கி.பி.1450 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர்.
திருவண்ணாமலை இத்தலத்தினைச் சென்றடையும் வழி:
தமிழ்நாட்டின் பல ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு. பஞ்சபூதத் தலங்களில் ஜோதி தலமாகும். நினைக்கவே முத்தி தரும் திருவண்ணாமலை என்னும் பெருமை பெற்ற தலம்.
இறைவன் - அண்ணாமலையார், அருணாசலேஸ்வரர்,
இறைவி - உண்ணாமுலையம்மன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.