திருவஞ்சைக்களம் என்னும் திருத்தலத்தில் இருந்து சேர நன்னாட்டை ஆண்டு வந்தார் சேரமான் பெருமாள் நாயனார். அவருடன் நட்புக் கொண்டிருந்த சுந்தரர், சேரமான் பெருமாளின் அழைப்புக்கிணங்கி, அஞ்சைக்களத்துக்கு வருகை புரிந்திருந்தார். அங்கிருந்து மீண்டும் திருவாரூருக்குப் புறப்படும் வேளையில், நிரம்பப் பொன்னும் பொருளும், நவமணிகளும், மணிப்பூண்களும் காணிக்கையாக்கி, சுந்தரருக்கு விடை கொடுத்தார் சேரமான் பெருமாள். சுந்தரரும் ஏவலாளர்கள் புடை சூழத் திருவாரூருக்குப் புறப்பட்டார்.
அஞ்சைக்களத்தில் புறப்பட்டுத் திருவாரூர் நோக்கிப் பயணிக்கையில், திருமுருகன்பூண்டி அருகே சென்று கொண்டிருந்தனர் சுந்தரரும் அவர்தம் பரிசனங்களும். திடீரென்று எங்கிருந்தோ பாய்ந்து வந்தது கொள்ளைக் கூட்டம். ஏவலாளர்களைக் கீழே வீழ்த்தி எல்லாப் பொருளையும் கவர்ந்து சென்றனர் திருடர்.
பொன்னும் பொருளும் தொலைய, அவற்றை மீட்டுக் கொடுக்க வேண்டித் திருமுருகன்பூண்டி சிவபெருமானிடம் முறையிட்டுப் பாடினார் சுந்தரர். இறைவன் அருளால் பொன்னும் பொருளும் மீண்டும் பெற்றார்.
திருமுருகன்பூண்டியில் வேடர் பறித்த பொருளை மீட்க சுந்தரர் வேண்டிப் பாடிய பதிகம்:
"கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவ லாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு
ஆற லைக்கும்இடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
எத்துக்கு இங்கிருந் தீர்எம்பிரானீரே.''
திருமுருகன்பூண்டி தலத்தினைச் சென்றடையும் வழி:
அவிநாசியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. பேருந்து வசதியுண்டு.
இறைவன் - முருகநாதேஸ்வரர், முருகநாதசுவாமி.
இறைவி - ஆலிங்கபூஷணஸ்தனாம்பிகை,
ஆவுடை நாயகி, மங்களாம்பிகை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.