வெள்ளிமணி

சுவாதி நட்சத்திரக்காரர்களின் சிறப்புத் திருக்கோயில்!

அரிய யோக சக்திகள் நிறைந்த பூமி சித்துக்காடு! சென்னை- பட்டாபிராமிற்கு அருகில் உள்ள....

தினமணி

அரிய யோக சக்திகள் நிறைந்த பூமி சித்துக்காடு! சென்னை- பட்டாபிராமிற்கு அருகில் உள்ள இந்த சித்துக்காட்டில் இருக்கும் ஒரு கிராமம் திருமணம்! இந்த கிராமத்தில் ஸ்ரீ பிரசூன குந்தாளாம்பிகை அம்பாள் சமேத தாத்திரீஸ்வரர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். "தாத்திரீ' என்றால் முழு நெல்லிக்கனியை குறிக்கும். அதனால் இவர், நெல்லியப்பர் என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். ஸ்ரீ பிரசூன குந்தளாம்பிகை அம்பாள் மூலவர் விக்ரகம், இங்குள்ள பூந்தோட்டத்தில் கிடைக்கப்பெற்றதால் அம்பாள் பூங்குழலி என்ற திருப்பெயரைப் பெற்றுள்ளார்.

சுமார் 800 வருடங்களுக்கு முன்பாக மதுரையை ஆண்ட ஸ்ரீ சுந்தர பாண்டிய மன்னன் காலத்தில் இத்திருக்கோயில் கட்ட ஆரம்பிக்கப்பட்டதாகவும் பின்னர் ஏற்பட்ட போர் ஒன்றில் மன்னன் மரண மடைந்தான் என்றும், மன்னன் பாதியில் விட்ட ஆலயப்பணியினை பெருநிலக்கிழாரான சின்னதம்பி முதலியார் தனது பொருளைக் கொண்டு இவ்வூர், சிவ- பெருமாள் கோயில்களைக் கட்டி

முடித்ததாகவும் இங்குள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. அவ்வம்சத்தினர் தொடர்ந்து இக்கோயில்களுக்கு பரம்பரை தர்மகர்த்தாவாக இருந்து வருகின்றனர்.

ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள்பிரகாரம் மற்றும் வெளிபிரகாரத்துடன் அமைந்துள்ள இக்கோயிலுக்கு வெளியே வலப்பக்கத்தில் நீர் வற்றிய நிலையில் மிகப்பெரிய

திருக்குளம் காணப்படுகிறது. இராஜகோபுரத்திற்கு நேர் எதிராக சந்நிதி விநாயகர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு தினப்படி பூஜைகள் நடைபெறுவதுடன் கார்த்திகைமாத சோமவார நாள்களில் மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.

ராஜ கோபுரத்தின் நுழைவாயிலின் வழியாக வரும்போது மேலே உள்ள விதானத்தில் சிவபெருமானின் அழகிய திருக்கோலங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். உள்பிரகாரத் தூண்களில் தசாவதார சிறப்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். மேலும் அம்பிகை மற்றும் சுவாமி சந்நிதிகளுக்கு நேர் மேலாக உள்ள விதானத்தில் அஷ்டதிக் பாலர்கள், மகாவிஷ்ணு, விநாயகர், முருகர், பைரவர், பிரம்மன் மற்றும் தேவேந்திரன் ஆகியோர் தங்களது வாகனங்களுடன் அமைந்து காணப்படுவது சிறப்பாகும்.

இத் திருத்தலத்தில் திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தபோது தடைகள் பல வந்தனவாம். தடைகள் ஸ்ரீ வீரபத்திரர் உபானை மூலம் பூர்த்தியானதால் இங்கு வீரபத்திரரின் திருமேனி அமைக்கப்பட்டுள்ளது.

கருவறையில் லிங்கத்திரு மேனியாக தாத்திரீஸ்வரர் எழுந்தருளி அருள் வழங்குகிறார். கருவறை திருச்சுற்றில் ஆகம முறைப்படி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை ஆகியோர் அமைந்து அருள்பாலிக்கின்றனர். அதோடு இந்த உள்பிரகாரத்தில் லட்சுமி தேவி, சரஸ்வதி, ஆதிசங்கரர், காரைக்கால் அம்மையார், கன்னியம்மன் மூர்த்தங்களும் இடம்பெற்றுள்ளது விசேஷமாகும்.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள 27 நட்சத்திரங்களுக்கான விசேஷ திருக்கோயில்களில் இத்தலம், சுவாதி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. சுவாதி நட்சத்திர நாளில் பூவுலகில் யோக சக்திகள் மிகுந்திருக்கும். சிரசாசனம், குக்குடாசனம், புஜங்காசனம் போன்ற யோக நிலைகளுக்கு சுவாதி நட்சத்திர தினம் மிகவும் ஏற்றதாகும்.

சுவாதி நட்சத்திரத்தன்று முழு நெல்லிக்கனி சாற்றினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பானது. அதேபோல் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து கண்ணாடி வளையல் சாற்றி, வளையல்களை கல்யாணமான சுமங்கலி மற்றும்

கன்னிப்பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், சிறிய காணிக்கை சேர்த்து தருவதன் மூலம், திருமணம் ஆக காலதாமதமாகும் ஆண், பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் குடும்ப ஒற்றுமைக்கு வேண்டி, அங்கபிரதட்சிணம் செய்வது சிறப்பாகும். பெரியோர்களின் விருப்பமின்றி திருமணம் செய்தவர்கள் அவர்களின் ஆசி பெறும் பொருட்டு இத்தலத்துக்கு வந்து

வழிபடுகின்றனர். மேலும் சுவாதி நட்சத்திரத்தன்று ஏற்றப்படும் ஒரு சிறிய அகல் விளக்கு தீபமும் பிரபஞ்ச அளவில் அபூர்வ ஜோதி சக்திகளை அளிக்க வல்லதாகும். எனவே சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தோர் அடிக்கடி சென்று வழிபடவேண்டிய தலம் இந்த திருமணம் திருத்தலம்!

இத்தலத்து இறைவனையும் இறைவியையும் குபேரன் வலதுகால் கட்டை விரலில் மட்டும் நின்று பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருந்து நாகலிங்க மலர்களால் பூஜித்து, நெல்லிச் சாற்றினால் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார். பித்ருக்கள், தம் சந்ததியினர் உதவவேண்டியவர்களுக்கு உதவி செய்யாமல் விடுவதால் அதனால் ஏற்படக்கூடிய தோஷத்தை அடைகின்றனர். அதனால் பித்ருக்களும் சுவாதி நட்சத்திர நாளில் ஸ்தூல, சூட்சும வடிவங்களில் இந்த சித்துக்காடு தலத்தில் தீப வழிபாடு செய்து பிராயசித்தம் அடைவதாக ஆலய வரலாறு தெரிவிக்கிறது.

அம்பிகை சந்நிதியை வலம் வருகையில் காணப்படும் உட்பிரகார தூணில் ஜடாமுடி சித்தர் அல்லது படுக்கைச் சித்தர் எனப்படும் உத்தம சித்தரின் முழு உருவத்தை நின்ற கோணத்தில் காணலாம். தாந்ரீக யோகத்தில் சிறந்தவராக இவர் கருதப்படுகிறார். திருக்கோயிலின் மகா நந்திகேஸ்வரருக்கு வலது பக்க தூணில் பிராண தீபிகா சித்தர் அமர்ந்த நிலையில் அருள்கிறார்.

இவ்வாலயத்திக்கு பின்புறமாக சற்று தொலைவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சிவ- விஷ்ணு ஆகிய இரண்டு தலங்களும் இங்கு அமைந்திருப்பது அரியும் சிவனும் ஒன்றே என்பதை வலியுறுத்துவதாக உள்ளது. சிவ, விஷ்ணு மூர்த்திகள் அருளும் சித்துக்காடு திருத்தலத்திற்கு சென்று இறைவனை வழிபட்டு நலம் பெறலாம்.

திருக்கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8.00 மணி முதல் காலை 10.30 மணி வரை, மீண்டும் மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை.

இத்திருத்தலத்திற்கு செல்ல: பூவிருந்தவல்லியிலிருந்து சித்துக்காடு வழியாக பட்டாபிராமிற்கு 54சி, 65பி, 66பி,153 எண் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் ஷேர் ஆட்டோ மூலமாகவும் ஆலயத்தைச் சென்றடையலாம்.

தொடர்புக்கு: 97907 35698.

- மோகனாமாறன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT