முகப்பு
வெள்ளிமணி

போராட்டத்தில் இருந்து கரைசேர்க்கும் இயேசு

கிராமங்களில் சிறுவர்களை நீச்சல் பழக்குவிக்கும் சம்பவம் நினைவுக்கு வருகிறது. முதலில் நீச்சல் தெரிந்த சிலர் கிணற்றினுள் நீந்திக்கொண்டிருப்பர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:50 PM
பகிர்:

கிராமங்களில் சிறுவர்களை நீச்சல் பழக்குவிக்கும் சம்பவம் நினைவுக்கு வருகிறது. முதலில் நீச்சல் தெரிந்த சிலர் கிணற்றினுள் நீந்திக்கொண்டிருப்பர். நீச்சல் தெரியாத சிறுவனை உள்ளே நீந்த விடுவர். பின்பு அச்சிறுவன் தன்னால் இயன்றமட்டும் நீரில் நீந்துவதற்கு முயற்சிப்பான். யாரும் அச்சிறுவனை தொட மாட்டார்கள்! தள்ளியே நிற்பர். அச்சிறுவன் மூழ்கும் நிலை வரும்போது அவனை மூழ்க விடாமல் காப்பாற்றி கரைசேர்ப்பார்கள்.
இவ்வாறே பல முறை இந்த நிகழ்வானது நடக்கும். தன்னைக் காப்பாற்ற நண்பர்கள் உள்ளனர் என்ற தைரியத்துடன் ஒரேநாளில் அச்சிறுவன் எளிதாக நீந்த கற்றுக்கொள்வான். இது கிராமங்களில் இப்போதும் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வாகும்.
அது போல வாழ்க்கை என்கிற போராட்டத்தில் நீந்தத் தெரியாமல் நிற்கும் போது தேவன் நமக்கு உதவி செய்வார். என்னால் இயன்ற வரை முயற்சி செய்து பார்த்துவிட்டேன். என்னை நெருக்கி வரும் பிரச்னைகளுக்கு தீர்வைக் காண முடியவில்லையே என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம். தேவனாகிய இயேசு நம் அருகில் இருக்கும்போது போராட்டங்களை எளிதில் வெல்லலாம்.
என்றுமே நாம் நம்முடைய முயற்சியில் சோர்ந்து போகவே கூடாது. வெற்றியைக் கொடுக்கிறவர் கர்த்தர். ஆனால் நாம் எந்த அளவுக்கு முயற்சி செய்கிறோமோ அந்த அளவுக்கு வாழ்வில் வெற்றியை பெற இயலும். எல்லாவற்றையும் இயேசு பார்த்துக்கொள்வார் நான் எந்த வேலையும் செய்யமாட்டேன் எந்த முயற்சியும் செய்யமாட்டேன் என்று இருந்தால்,  ஒருநாளும் நாம் வெற்றியை சுதந்தரிக்க முடியாது.
சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு  உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும் (நீதிமொழிகள் 14:23) என்றும், உன் சுயபுத்தியின்மேல் சாயாமல்... உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீதி.3: 5,6 என்றும் பரிசுத்த வேதாகமத்தில் பார்க்கிறோம்.
யோவான் 21 ஆம் அதிகாரத்தில் பேதுருவைக் குறித்து பார்க்கும்போது, பேதுரு ஒரு நாள் இயேசு சொன்னதைச் செய்யாமல் மீன்பிடிக்கச் சென்றனதால் இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் ஒரு மீனும் கிடைக்கவில்லை. ஆனாலும் இறைவன் இயேசு பேதுருவின் முயற்சியைப் பார்த்து அவனைத் தேடி வந்தார்.
அவர் பேதுருவைப் பார்த்து நீங்கள் படகுக்கு வலப்பக்கமாக வலையை போடுங்கள் என்றார். ஆண்டவருடைய சத்தத்துக்கு கீழ்படிந்து வலையைப் போடுகிறார். இரட்டிப்பான ஆசீர்வாதத்தைப் பெற்று மகிழ்கிறார்.
"ஆம் பிரியமானவர்களே! எப்பொழுது நாம் என்னால் முடியாது என்ற நிலைமைக்கு வருகிறோமோ அந்த நேரம்தான் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் கிரியை செய்கிற நேரம்'. கர்த்தருடைய கரத்தில் பெலனற்றவர்களாய், தோல்வியுற்றவர்களாய் நம்மை ஒப்புவிக்கும்போது அவர் நமக்கு அற்புதங்களை செய்வார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.