முகப்பு
வெள்ளிமணி

நெறிப்படுத்தும் தவக்காலம்

கிறிஸ்துவர்கள் விபூதிபுதன் முதல் உயிர்ப்புப் பெருவிழா வரையிலான நாற்பது நாள்கள் நோன்பிருந்து, ஜெப, தவத்தில் செலவு செய்யும் இக்காலமே தவக்காலம் என அழைக்கப்படுகிறது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

கிறிஸ்துவர்கள் விபூதிபுதன் முதல் உயிர்ப்புப் பெருவிழா வரையிலான நாற்பது நாள்கள் நோன்பிருந்து, ஜெப, தவத்தில் செலவு செய்யும் இக்காலமே தவக்காலம் என அழைக்கப்படுகிறது.

தவக்காலத்தின் தொடக்கநாளான விபூதி புதனன்று நிலையாமையை நினைவுறுத்தும் விதமாக குருவானவர் அன்றைய திருப்பலியின்போது "நெற்றியில் சாம்பல் பூசி, மண்ணிலிருந்து வந்த மனிதனே, நீ மண்ணுக்கே திரும்புவாய்' என்று கூறுகிறார். எனவே நிலையில்லா இவ்வுலக வாழ்வில் முடிந்த அளவு நற்காரியங்களைச் செய்து நிலையான மறுவுலக வாழ்வுக்கு நம்மையே தயார் செய்ய வேண்டும்.

இறைவனுக்கு ஏற்ற நோன்பு எது என்று யோசித்தோமானால் அதற்கான விடை பைபிளிலேயே உள்ளது. இருவர் இறைவேண்டலுக்காக கோயிலுக்கு சென்றனர். ஒருவர் இறைவல்லுநர். இன்னொருவர் தாழ்வாக மதிக்கப்பட்ட வரிதண்டுபவர். இறைவல்லுநர் பீடத்துக்கு முன்னே சென்று, ""கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ, இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி சொல்கிறேன்.. வாரத்தில் இருமுறை நோன்பிருக்கிறேன். என் வருவாயில் பத்தில் ஒரு பங்கை உமக்குக் கொடுக்கிறேன்'' என்று தன்னைப்பற்றி உயர்த்தி இறைவனிடம் வேண்டினார்.

ஆனால், வரிதண்டுபவரோ வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூட துணியாமல் தன் மார்பில் அடித்துக் கொண்டு, ""கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்'' என்று தாழ்மையுடன் வேண்டினார்.

இயேசு தம் சீடரை நோக்கி, ""உண்மையாக உங்களுக்கும் கூறுகிறேன். இறைவல்லுநரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்றவனாகி வீடு திரும்பினார், எனெனில் தம்மைத்தாமே உயர்த்துபவர் தாழ்த்தப் பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துபவர் உயர்த்தப் பெறுவர்'' என்றார். (லுக்கா 18:10-14).

அதேசமயம், சுயவிளம்பரத்துக்காக நல்லவர்கள் போல் நடிப்பவர்களை இயேசு சாடுகிறார். "நீங்கள் நோன்பு இருக்கும்போது தலையில் எண்ணெய் தோய்த்து முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது. மாறாக மறைவாய் இருக்கும் உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு

அளிப்பார். (மத்தேயு 6:17,18).

"ஒருவன், சாக்கு உடையையும் சாம்பலையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும் பசித்தோருக்கு உங்கள் உணவை பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும் உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு? அப்போது இருள் நடுவே உன் ஒளி உதிக்கும். இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்'' (எசாயா 58:5,7,10).

அண்மையில் வருகின்ற இந்த தவக்காலத்தில் அயலாரைப்பற்றி சிந்திப்போம். மற்றவரின் துன்பமும் கவலையும் சிறுமையும் தொற்றிக் கொள்ளட்டும். எம் தோள்களிலும் மனத்திலும் உலகின் இன்னல்களை இழிநிலையை ஓரளவேனும் மாற்றிட முடிவெடுப்போம். அதன்மூலம் இறைவன்பால் உள்ளம் உயர்வோம்.

முழு கட்டுரையைப் படிக்க →