வெள்ளிமணி

இறைவனுக்கு விலகிய நந்தி!

முனைவர். பி. ஜம்புலிங்கம்

காவிரியின் தென்கரையில் உள்ள 53 ஆவது தலம், ஞானசம்பந்த பெருமானால் பாடப்பெற்ற தலம் என்ற பெருமைகளை கொண்டது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டீஸ்வரம்! காமதேனுவின் புதல்வியான பட்டி பூசித்ததால் பட்டீஸ்வரம் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

இத்தலத்தில் ஆளுடையப்பிள்ளையார் வருகின்ற அழகான காட்சியைக் கண்டு ரசிப்பதற்காக இறைவன் நந்தியை சற்று விலகக் கூறியதால் இங்குள்ள நந்திகள் சந்நிதியிலிருந்து சற்றே விலகியிருப்பதைக் காணமுடியும். மேலும், இறைவன் வேண்ட ஞானசம்பந்தருக்காக நந்தி விலகிய மற்றொரு தலம் திருப்பூந்துருத்தியாகும்.

மாறன்பாடிக்கருகே பிள்ளையார் நடந்து சென்றருளியபோது பாதத்தாமரை நொந்ததனைக் கண்ட இறைவன் முத்துச்சிவிகையருளினார். ஆனால் பட்டீஸ்வரத்திலோ அடியாருடன் நடந்துவந்ததைக் கண்ட இறைவன் வெயிலின் வெப்பம் தணிக்க பந்தல் இட்டு அருளினார். இறைவனின் பெருங்கருணைக்கும் அவன் ஞானசம்பந்தப்பெருமான்மீது காட்டிய அன்பு அளப்பரியது.

இத்தகு பெருமையுடைய பட்டீஸ்வரர் கோயில் எனப்படும் தேனுபுரீஸ்வரர் கோயிலில்

இரு கிழக்கு கோபுரங்கள், தெற்கு கோபுரம், வடக்கு கோபுரம் அமைந்துள்ளன. வடக்கு கோபுரம் வழியாக வந்தால் துர்க்கையம்மன் சந்நிதியை காணமுடியும். கிழக்கு கோபுரம் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் விலகிய நிலையில் நந்தியைக் காணமுடியும். இடப்புறம் கோயிலின் குளமான "ஞானவாவி' தீர்த்தம் உள்ளது.

தேனுபுரீஸ்வரர் சந்நிதிக்குச் செல்ல, இரண்டாவது கிழக்கு கோபுரத்தினைக் கடக்கவேண்டும். இக்கோபுரத்தின் வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.

இக்கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது அழகான மண்டபம் காணப்படுகிறது. இம்மண்டபத்திற்கு அருகில் உள்ள திருச்சுற்றில் பைரவருக்கு தனி சந்நிதி உள்ளது. மண்டபத்தில் உள்ள நந்தியும் விலகிய நிலையில் உள்ளது.

சந்நிதியில் மதவாரணப்பிள்ளையார் காணப்படுகிறார். தேனுபுரீஸ்வரராக விளங்கும் மூலவர் கருவறையில் லிங்கத்திருமேனியாகக் காட்சியளிக்கிறார். நடராஜர் சந்நிதி, பள்ளியறை இம்மண்டபத்தில் அமைந்துள்ளன. பராசக்தி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் காட்சியுடன் கூடிய தபசு அம்மனையும் இங்கு காணலாம். மண்டபத்தில் உள்ள தூண்களில் அழகான சிற்பங்கள் உள்ளன.

இறைவனின் கருவறைக்கு இடப்புறம் அம்மனின் சந்நிதி காணப்படுகிறது. அம்மன் ஞானாம்பிகை என்றும் பல்வளைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றார். அம்மன் சந்நிதிக்கு முன்பாக உள்ள மண்டபம் அழகான தூண்களைக் கொண்டுள்ளது. அத்தூண்களில் அழகான சிற்ப வேலைப்பாடுகள் அமைந்திருப்பதை காணலாம்.

தனி சந்நிதியில் துர்க்கையம்மன் நின்ற கோலத்தில் புன்னகை சிந்தும் முகத்தோடு அருள் தருகிறார். இவரை, விஷ்ணு துர்க்கை என்றும் துர்க்காலட்சுமி என்றும் அழைக்கின்றனர்.

மகாமகப் புனித உலாவின்போது தேனுபுரீஸ்வரையும், ஞானாம்பிகையையும், துர்க்கையம்மனையும் தரிசிக்க பட்டீஸ்வரம் செல்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT