ஒரு மனிதன் பெறும் பேறுகளுள் அரியபேறு உரிய குணங்களுக்கு உரியவரைத் தலைவராகப் பெறுதல். எண்ணிய எண்ணியாங்கு எய்தி எய்தியதைத் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் சேர்த்து வைத்து உன் நாட்டிலும் வெளிநாடுகளிலும் முதலீடு செய்து கோடீஸ்வரர்களாக மாட
மாளிகையில் ஆடம்பரமாக வாழாது எல்லா மக்களும் மகிழ்வு பெற பலனைப் பங்கிட்டு தருபவரே பாங்கனான தலைவர்.
அறத்தினின்று வழுவாத எளிய தோற்றத்தில் எவரும் எளிதில் அணுகி எப்பிரச்னையையும் எடுத்து சொல்லி தீர்வு பெற்று திரும்பி செல்லும் மக்கள் விரும்பும் தலைவராய், மகுடம் சூடா, மலர் மஞ்சத்தில் அமரா, மாபெரும் நாடுகளை ஆட்சி செய்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தலைமைக்குக் கட்டுபடுவதைக் கவினுற கூறுகிறது குர்ஆனின் 48-9 ஆவது வசனம், ""நம்பிக்கையுடையோரே! அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டு அவருக்குதவி புரிந்து அவரைக் கண்ணியப்படுத்தி வைத்து காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை துதி செய்யுங்கள்'' அல்லாஹ் அகிலத்தின் தலைவன். அவனைப் பார்க்க முடியாது. அவனின் தூதரே உலகில் வாழும் மக்கள் காணும் தலைவர். அவருக்குதவி புரிந்து அவரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அவரை மதிக்க வேண்டும். அதோடு மக்களுக்கும் தூதருக்கும் அதிபதியான அல்லாஹ்வைத் துதிக்க வேண்டும்.
கட்டுப்படும் கட்டளைகளை, ""நம்பிக்கை உடையோரே! அல்லாஹ்விற்கும் அவனுடய தூதருக்கும் முன்பாக பேச முந்தாதீர்'' (49-1) ""நபிகள் பேசும்பொழுது அவர்களின் குரலைவிட உங்கள் குரலை உயர்த்தாதீர். பிறரோடு உரக்க பேசுவது போல நபிகளின் முன் கூச்சலிட்டு பேசாதீர்'' (49-2) குர்ஆனின் வசனங்கள் வரையறுக்கின்றன. தலைவர் சொல்வதற்குமுன் முந்தி பேசுவதோ தலைவரின் குரலைவிட கூடுதல் ஒலியுடன் ஓலமிடுவதோ கூடாது.
இக்குர்ஆனின் கூற்றை வள்ளல் நபி (ஸல்) அவர்கள் ""எனக்குக் கட்டுப்படுபவர் அல்லாஹ்விற்குக் கட்டுப்படுபவர். அதுபோல தலைவருக்குக் கட்டுப்படுபவர் எனக்குக் கட்டுப்படுபவர். எனக்கு மாறு செய்பவர் அல்லாஹ்விற்கு மாறு செய்பவர்போல தலைவருக்கு மாறு செய்பவர் எனக்கு மாறு செய்தவராவார்'' என்று வலியுறுத்தியதை அறிவிப்பவர் - அபுஹீரைரா (ரலி) நூல்- புகாரி, முஸ்லீம், நஸஈதகுதியுடைய தலைவருக்குக் கட்டுப்
படுமாறு கட்டளையிடுகிறது கவின்மிகு குர்ஆனின் 4-59 ஆவது வசனம். இதனையொட்டி ""தலைவர் தங்களுக்குப் பிடித்தவராய் இருப்பினும் பிடிக்காதவராய் இருப்பினும் பாவசெயல்களைப் புரியுமாறு ஆணையிடாதவரை அத்தலைவரின் கட்டளைகளைச் செவியேற்று செயலாற்றுவது கடமை'' என்று கண்ணிய நபி (ஸல்) அவர்கள் உணர்த்தியதை உரைக்கிறார் இப்னு உமர் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸஈ
அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழிநடத்தும் அடிமை உங்களுக்குத் தலைவராக ஆக்கப்படினும் அத்தலைவருக்குக் கட்டுப்பட கருணை நபி (ஸல்) அவர்கள் பணித்ததைப் பகர்கிறார் உம்மு ஹுசைன் (ரலி) நூல்- முஸ்லிம். மீண்டும் இக்கருத்தை வள்ளல் நபி (ஸல்) அவர்கள் ""ஒரு அடிமை தலைவராக நியமிக்கப்பட்டாலும் அத்தலைவர் அல்லாஹ்வின் திருமறைப்படி பிறப்பிக்கும் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்'' என்று வலியுறுத்தியதை நவில்கிறார் அனஸ் (ரலி) நூல்- புகாரி.
நீங்கள் எல்லோரும் ஒரு தலைமையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இருக்கும் காலத்தில் உங்களிடம் எவரேனும் உங்களின் ஒற்றுமையை உடைக்க, உங்களின் கூட்டத்தைப் பிரிக்க முயன்றால் அத்தருக்கர்களுக்கு மரண தண்டணை வழங்க வள்ளல் நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதை உரைக்கிறார் அர்பஜதுப்னு ஷீனரஹ் (ரலி) நூல்- முஸ்லிம். ஒரு தலைவரின் தலைமையில் ஒன்று பட்டிருப்போரையும் ஹபிரிப்பவருக்குப் பெருந்தண்டனை தருவது தப்பில்லை.
தலைவரை முன்னால் புகழ்ந்து பின்னால் இகழ்வதை இனிய நபி (ஸல்) அவர்கள் தடுத்ததை இயம்புகிறார் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்- புகாரி. நேற்றுவரை புகழ்ந்த தலைவரை இன்று கட்சி மாறும் இகழும் இழிநிலையை அன்றே தடுத்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.
அல்லாஹ்விற்கு அஞ்சி செயல்படும் அதிகாரியை அவமதிக்கிறவரை அல்லாஹ்வும் இழிவு படுத்துவான் என்ற ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் அருள்மொழியை அபூபக்கர் (ரலி) அறிவிப்பது திர்மிதீயில் உள்ளது.
தக்க தலைமைக்குக் கட்டுப்படாது மிக்க வெகுண்டு வேண்டாதன செய்வோரை ஆண்டவனே தண்டிப்பான் என்பதுணர்ந்து தலைமைக்குக் கட்டுப்பட்டு தகைமையுடன் பகைமை நீக்கி பாங்குற வாழ வேண்டும். பாரில் போரின்றி அமைதி நிலவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.