வெள்ளிமணி

இந்திரன் விமோசனம் பெற்ற திருத்தலம்!

பழுவேட்டரையர்களின் தலைநகராக விளங்கிய மேலப்பழுவூர் தஞ்சாவூரிலிருந்து 35 கி.மீ. வடக்கில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தினமணி

பழுவேட்டரையர்களின் தலைநகராக விளங்கிய மேலப்பழுவூர் தஞ்சாவூரிலிருந்து 35 கி.மீ. வடக்கில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் "மன்னு பெரும்பழுவூர்' என்று அழைக்கப்படும் பெருமையை உடையது. சாபம் நீங்குவதற்காக இந்திரன் மதுரையம்பதியில் தவம் செய்தபோது அசரீரி இந்த ஊருக்கு வரும்படி கூறியதால் இந்திரன் வந்து இத்தல இறைவனை வணங்கி சாப விமோசனம் பெற்றதாகக் கூறுகின்றனர். இத்தலம், ஜமதக்னி ரிஷி வழிபட்ட பெருமையுடையதென்றும், தாயைப் கொன்ற பரசுராமரின் பாவம் நீங்கிய வகையில் பரசுராமர் தீர்த்தம் பெற்ற தலமென்றும் கூறுகின்றனர். 

இக்கோயிலானது சாலையிலிருந்து கீழே பள்ளத்தில் இறங்கி செல்வது போன்ற நிலையில் உள்ளது. மூன்று நிலைகளுடன்கூடிய ராஜகோபுரம்; கோபுர வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். ராஜகோபுரத்தை அடுத்து கொடிமரம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் ஒரே கல்லால் ஆன நந்தியம்பெருமான் எழுந்தருளியுள்ளார். அருகே பலிபீடம் உள்ளது. 

கிழக்கு நோக்கிய மூலவர் சந்நிதியில் மூலவராக சுந்தரேஸ்வரர் லிங்க வடிவத்தில் எழுந்தருளியுள்ளார். மூலவருக்கு முன்பாக இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளனர். வலது புறம் இருக்கும் துவாரபாலகருக்கு அருகே விநாயகர் உள்ளார். மூலவரைச் சுற்றிவரும் வகையில் சிறிய வழி அமைந்துள்ளது. தஞ்சாவூர் பெரிய கோயிலிலும், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ளதைப் போன்றும் இக்கோயிலில் இந்த அமைப்பு உள்ளது. 

அம்மன் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. கருங்கற்களால் ஆன விமானத்தைக் கொண்டு இந்த சந்நிதி அமைந்துள்ளது. கோயிலின் திருச்சுற்றில் வலப்புறம் ஜமதக்னி ரிஷி, சூரியன், ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் திருவுருவங்கள் அமைந்துள்ளன. அகோரவீரபத்திரர், நவகன்னியரான பிராமி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரும் தனிசந்நிதியில் அமைந்துள்ளனர். அடுத்து தேவிகோட்டை கருமாரியம்மன் சந்நிதி உள்ளது.

அதற்கெதிராக சிங்கத் தூணின் பகுதி உள்ளது. அடுத்து கடன் நிவர்த்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி ஆகியோருக்கான தனித்தனி சந்நிதிகள் உள்ளன. அருகே சண்டிகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. 

கோயிலின் திருச்சுற்றில் இடப்புறம் நவக்கிரகங்கள் உள்ளன. அடுத்து விநாயகர், உமாமகேஸ்வரர், இரு நாகர்கள், ரிஷபாரூடர், மகாவிஷ்ணு, பைரவர் ஆகியோர் அமைந்து அருள் செய்கின்றனர். ஜேஷ்டாதேவி தனி சந்நிதியில் உள்ளதால் வளர் பிறை அஷ்டமி திதியில் வழிபட குழந்தைப் பேறும், நிறைந்த செல்வமும் உண்டாகும் என்பது நம்பிக்கை! கஜலட்சுமி- மகாவிஷ்ணு இங்கு திருமணக்கோலத்தில் காட்சியளிப்பதால் இங்கு வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கையும் உண்டு. 

இக்கோயிலுக்கு அருகே உள்ள கீழப்பழுவூரில் ஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஆலந்துறையார் கோயிலும், கீழையூரில் முற்காலச் சோழர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இரட்டைக்கோயிலும் உள்ளன. இந்த மூன்று கோயில்களும் இப்பகுதியில் காணவேண்டிய முக்கியமான திருத்தலங்களாகும்.
-  ஜ.பாக்கியவதி
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் விடிய விடிய பலத்த மழை: நீரில் பேருந்துகள் தத்தளிப்பு

பாலாற்றில் தோல் கழிவு நீா்: பொதுமக்கள், விவசாயிகள் புகாா்

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீரால் நோயாளிகள், பொதுமக்கள் அவதி

ஆலங்காயம் பேரூராட்சி மன்ற கூட்டம்

கொலை வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 3 போ் கைது

SCROLL FOR NEXT