வெள்ளிமணி

ஸ்ரீ ராமானுஜர் இயற்றிய நூல்கள்!

ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களில் மிகவும் முக்கியமானவர் ஸ்ரீ ராமானுஜர்! இவருடைய ஆயிரமாவது ஆண்டு வைபவம்  கடந்த ஓர் ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது.

தினமணி

ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களில் மிகவும் முக்கியமானவர் ஸ்ரீ ராமானுஜர்! இவருடைய ஆயிரமாவது ஆண்டு வைபவம்  கடந்த ஓர் ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த மஹான் செய்தருளிய மஹோபகாரங்களில் மிக முக்கியமானது அவர் நமக்கு விட்டு சென்ற ஆத்ம உஜ்ஜீவனத்திற்கான சமய நூல்கள். பெரியோர்களின் எண்ணங்கள் மற்றும் நிலைப்பாடுகளை நாம் அவர்கள் நமக்கு அளித்த நூல்கள் வாயிலாகவும் அவர்கள் வழி வந்த அறிஞர்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். அந்த வழியில் ஸ்ரீ ராமானுஜர் நமக்கு அனுகிரஹித்த சமய நூல்கள் ஒன்பதாகும்.

ஸ்ரீ ராமானுஜர், விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை அனைவரும் அறிந்து, பின்பற்றுவதற்கு  முயன்று, அதிலும் வெற்றி கண்டவர். விசிஷ்டாத்வைத சித்தாந்தமாவது, தத்வமாவது மூன்று; அறிவுடையவை, அறிவற்றவை இவை இரண்டையும் தனக்கு உடலாகவுடைய ஈஸ்வரன் அவன் அவைகளுக்கு ஆதாரமாக இருந்து, அவைகளை நடத்தி, அவைகளால்  ஏற்படும் மேன்மையைதான் அடைகிறான். அதாவது, அறிவுள்ள வஸ்துக்கள், ஜீவாத்மாக்கள், அறிவற்ற ஜடப்பொருள்கள் இவை இரண்டையும் அடக்கி ஆள்பவன்  ஈஸ்வரன் ஆவான்.

நாம் இவ்வுலகில் துன்பப்படுவதெல்லாம் அவன் கட்டளைகளை மீறி இதுகாறும் நடந்ததால் அவன் சீற்றத்துக்கு ஆளாகி அதனால் பிறப்பு, இறப்பு ஆகிய சம்ஸ்காரத்தில் உழல்கிறோம். அவனை பக்தி அல்லது சரணாகதி என்னும் உபயத்தால் மகிழ்வித்து, அதனால் அவன் கருணையின் காரணமாக மோட்சம் என்னும் ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்து, முடிவில்லாத பேரின்பம் அடையலாம். 

ஸ்ரீ ராமானுஜர் அருளிய ஒன்பது நூல்கள்: வேதார்த்த ஸங்கிரஹம், ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், கீதா பாஷ்யம், சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம், மற்றும் நித்ய க்ரந்தம்.

வேதார்த்த ஸங்கிரஹம்: வேதங்கள் நான்கு என்பர். அவைகளின் கிளைகள் எண்ணிலடங்கா. அவைகளில் பொதிந்து கிடக்கும் விஷயங்கள் எளிதில் அறிந்து கொள்ள முடிவதில்லை. சில இடங்களில் கூறியவை வேறு சில இடங்களில் கூறியவற்றிலிருந்து  மாறுபட்ட கருத்துக்களை கூறுவதாகத் தோன்றக்கூடும். ஆனால் வேதக்கருத்துக்கள்  உண்மையானவை. ஒன்றுக்கொன்று முரண்படாமல் அவைகளுக்கு பொருள் கூறவேண்டும். இவ்வகையில் ஸ்ரீ ராமானுஜர் சில முக்கியமான வேத வாக்கியங்களை எடுத்துக் கொண்டு அவர்களின் உண்மைக் கருத்துக்களை வெளிப்படுத்திய கிரந்தம், நூலே வேதார்த்த ஸங்கிரஹம். 
ஸ்ரீ பாஷ்யம்: இது வியாசபகவான் அருளிச்செய்த ப்ரஹ்ம சூத்ரங்களுக்கு விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை ஒட்டிய விரிவான விளக்க உரை. இது காஷ்மீரில் உள்ள சரஸ்வதி பீடத்தில் சரஸ்வதி தேவியாலே ஒப்புக்கொள்ளப்பட்ட உரை என்று  பெரியோர்கள் பணிப்பர். 

வேத வேதங்களில் பொதிந்து கிடக்கும் விஷயங்களை, வ்யாஸ பகவான் சிறிய சூத்ரங்களாக இயற்றினார். இவைகளே ப்ரஹ்ம சூத்திரங்கள் என்று வழங்கப்படுகின்றன. இவைகள் வேதத்தின் ப்ரஹ்ம காண்டத்தை ஒற்றியவை. அதாவது பரப்ரம்மத்தைப் பற்றியும், அதை அடையும் வழிகளைப்பற்றியும் அதனால் ஏற்படும் பலனைப்பற்றியும் அறிய உதவும்.

ப்ரஹ்ம சூத்திரங்கள் 545 என்று கணக்கிட்டிருக்கிறார்கள் பெரியோர்கள். அவைகளை  நான்கு அத்தியாயங்களாக வகுத்திருக்கிறார்கள். 

முதல் அத்தியாயத்தில் ப்ரஹ்மம்தான் ஜகத் காரண வஸ்து என்று அருளிசெய்யபட்டிடுக்கிறது. பரப்ரஹ்மமே உலகை ஸ்ருஷ்டித்து, அதை நிலை நிறுத்தி, முடிவில் தன்னிடமே லயம் அடையச்செய்கிறது என்பதை தெளிவு படுத்தும்.

இரண்டாம் அத்தியாயத்தில் முன் சொன்ன கருத்தான ஜகத் காரணத்வத்தை உறுதிப்படுத்தி, மற்றைய வேறு கொள்கைகளினால் வரும் ஆட்சேபங்களுக்கு சமாதானம் சொல்லப்படுகிறது.

மூன்றாம் அத்தியாயத்தில், அந்த ப்ரஹ்மத்தை அடையும் வழியான பக்தி விசாரிக்கப்படும். 

நான்காம் அத்தியாயத்தில், மேற்படி உபாயத்தை அனுஷ்டித்து ப்ரஹ்மத்தை அடைந்து பெறும் பலன் விசாரிக்கப்படுகிறது.

ஸ்ரீ ராமானுஜர், இந்த ப்ரஹ்ம சூத்ரங்களுக்கு விசிஷ்டாத்வைதத்தை ஒட்டி செய்த ஸ்ரீ பாஷ்யம் மிகச் சிறந்த நூலாக அறிஞர்களால் போற்றப்படுகிறது. 
வேதாந்த தீபம்: இதுவும் மேற்கூறிய ப்ரஹ்ம சூத்ரங்களுக்கு செய்யப்பட உரை நூல். ஆனால் இது ஸ்ரீ பாஷ்யத்தைவிட சிறிய நூல். 

வேதாந்த ஸாரம்: இதுவும் ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த தீபம் போன்று ப்ரஹ்ம சூத்ர உரைநூல். இது முதல் இரண்டைவிட மிகவும் சுருக்கமான நூல். வேதாந்த தீபம் மற்றும் வேதாந்த ஸாரம் இவை இரண்டும் கற்கும் சிஷ்யர்களுடைய ஞானம், கற்கும் காலம்  முதலியவைகளைக் கருத்தில் கொண்டு சற்றுச் சுருக்கமாக செய்யப்பட்டது. ஆனால் சூத்ரங்களின் பொருள்களில் எந்த மாற்றமும் இல்லை. இம்மூன்றிலும் சுவாமி ராமானுஜர்  வேதங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டியிருப்பது அவருடைய சித்தாந்தத்தை உறுதிப்படுத்துகிறது.

கீதா பாஷ்யம்: எம்பெருமான் கண்ணபிரான் அருளிச்செய்த ஸ்ரீமத் பகவத் கீதைக்கு  விசிஷ்டாத்வைதத்தை ஒட்டிய அற்புதமான உரை நூல். இந்த உரைக்கு சுவாமி தேசிகன்  "தாத்பர்ய சந்திரிகை' என்னும் உரை இயற்றியுள்ளார்.

சரணாகதி கத்யம்: இது உரைநடையில் அமைந்த ஸ்தோத்ரம். ஒரு பங்குனி உத்திரத் திருநாளில் திருவரங்கன், ரங்கநாயகி முன், சுவாமி தான் சரணாகதி செய்து அருளிச்செய்த  அற்புதமான நூல். சரணாகதியின் தத்துவத்தை மிகத் தெளிவாக உணர்த்தும் ஸ்தோத்ரம் இது. இது திருவரங்கனுக்கும் ஸ்ரீ ராமானுஜருக்கும் நடக்கும் உரையாடல் போன்று அமைந்துள்ளது.

ஸ்ரீரங்க கத்யம்: இதுவும் ஸ்வாமி திருவரங்கனிடம் சரணாகதி செய்வது போல்  அமைந்தது. இது ஒரு சிறிய ஸ்தோத்ரம். இதில் உள்ள பொருள் நம்மை சரணாகதி செய்ய உற்சாகப்படுத்துகிறது.

ஸ்ரீ வைகுண்ட கத்யம்: சரணாகதி செய்வதால் கிட்டும் ஸ்ரீ வைகுண்டத்தை விரிவாக  உரைக்கும் உரை நூல். ஸ்ரீ வைகுண்ட வர்ணனையை நாம் அறிந்தால், உடனேயே  இவ்வுலகத்தை துறந்து அங்கு சென்றடைய வேணும் என்ற உணர்வு தோன்றும்.

நித்யக்ரந்தம்: இந்த நூலில் ஸ்ரீ ராமானுஜர் நாம் நாள்தோறும் கடைபிடிக்கவேண்டிய  விஷயங்களை விவரமாக அருளிச்செய்கிறார். பகவானுக்கு செய்யும் பூஜைகள், சந்தியாவந்தனம் முதலான அனுஷ்டானங்கள், முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு காரியங்கள் முதலியவைகள் கூறப்பட்டுள்ளன. இவைகளை அவசியம் அனுஷ்டித்து அனைவரும் நற்கதி பெறவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு சுவாமி இயற்றிய  இன்றியமையாத நூல். சுவாமி தன்னுடைய 120 ஆவது திருநட்சத்திரத்திலும் (வயதிலும்) தானே இவைகளைக் கடை பிடித்தார் என்று இவருடைய சரித்திரத்தினின்றும் அறிகிறோம்.

சுவாமி, "ஸ்ரீ பாஷ்யகாரர்' என்று போற்றப்பெறும் ஸ்ரீ ராமானுஜர் அருளிச்செய்த நூல்களை பற்றி சுருக்கமாக அறிந்தோம். இதனை, உரிய ஆசார்யர்களிடம் அடி பணிந்து கவனத்துடனும் காலட்சேபம் செய்தால் இவைகளின் இனிமையை நன்கு சுவைக்கலாம்.
- ஆர்.கண்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT