அண்ணாமலையார் அரவணைத்த அருளாளர்!
காசிக்கு அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்த அந்த சிறுவன், ஒருநாள் தன் தாயாருக்கு கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்கு உதவி செய்து வந்த தருணத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக அவன் பயன்படுத்தி வந்த கயிறு
காசிக்கு அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்த அந்த சிறுவன், ஒருநாள் தன் தாயாருக்கு கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்கு உதவி செய்து வந்த தருணத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக அவன் பயன்படுத்தி வந்த கயிறு அங்கு இருந்த ஒரு பறவையின் மீது வேகமாகப்பட்டு அதன் காரணமாக அது இறக்க நேரிட்டது. இதனால் மனஅளவில் மிகவும் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் இறந்த பறவையைக் கையில் வைத்துக் கொண்டு கங்கைக் கரையில் அழுதவண்ணம் இருந்தான். அருகில் உள்ளவர்கள் எவ்வளவு சமாதானம் சொல்லியும் எடுபடவில்லை. இந்த பச்சாதாப உணர்வே அவனிடம் ஒரு பெரிய மன மாற்றத்தை ஏற்படுத்தி ஓர் ஆன்மீகத் தேடலுக்கான பாதைக்குவித்திட்டது.
காசியில் ஓடும் கங்கைக் கரையில் உலாவுவதும், அங்கு குடிலில் வாழும் யோகிகள், துறவிகள் மற்றும் சந்நியாசிகளுடன் நட்புடன் பழகுவதும் என காலம் கழித்துவந்தான். இளமைப் பருவம் இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில் ஒருநாள் காசிவிஸ்வநாதர் சந்நிதியில் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது ஒரு பேரொளியில்தான் கட்டுண்டதை உணர்ந்தான். அன்றிலிருந்து அவனுடைய ஆன்மீக நாட்டம் மேலும் வளர ஆரம்பித்தது. அந்த இளைஞனே பிற்காலத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆட்கொண்ட ஸ்ரீ யோகி ராம்சுரத் குமார் என்னும் அருளாளர் ஆவார்.
இல்லற வாழ்வில் ஈடுபட்டாலும் ஆன்மீகப் பசியின் தாக்கத்தால் தகுந்த குருவைத் தேடி அவர் தென்னகத்திற்கு வந்தார். பாண்டிச்சேரியில் ஸ்ரீ அரவிந்தரிடமிருந்து ஞானநிலையையும், ரமணரிடம் தவ நெறியையும், மங்களூருக்கு அருகில் கஞ்சன்காடு கிராமத்தில் இருந்த "பாப்பா ராமதாஸ்' என்ற குருவிடமிருந்து ராமநாம உபதேசத்தையும் பெற்றார். பாண்டிச்சேரி அன்னையின் அருளும், ஆசியும் கிடைத்ததாகவும் கூறப்படுவதுண்டு. காஞ்சி மஹாசுவாமிகளின் பேரன்பிற்கும் அருளாசிக்கும் பாத்திரமானார்.
பல தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு, பின் சொந்த ஊர் திரும்பி, குரு ராமதாஸரிடமிருந்து அவர் பெற்ற "ஜெய்ராம் ஜெய்ஜெய்ராம்' எனும் மந்திரத்தை இடையறாது ஜெபித்ததின் காரணமாக ஆன்மிகத்தில் உச்சகட்டத்தை எட்டினார். தான் நிரந்தரமாக இருக்க வேண்டிய இடம் அண்ணாமலையின் அடித்தளமே என உணர்ந்து, திருவண்ணாமலைக்கு 1959 ஆம் ஆண்டு திரும்பி வந்தார். இறுதிகாலம் வரை வேறு இடம் செல்லவில்லை. திருவண்ணாமலை செங்கம் சாலையில் அவருடைய ஆஸ்ரமமும், அவருடைய அழகிய உருவச்சிலையுடன் கூடிய சமாதியையும், அதன்மேல் பாணலிங்கம் பிரதிஷ்டையாகி உள்ளதையும் தரிசிக்கலாம்.
பச்சைநிறத் தலைப்பாகையுடன் அதே நிறத்தில் சால்வையும் போர்த்திக்கொண்டு கையில் ஒரு விசிறியுடன், உணவிற்காக ஒரு கொட்டாங்கச்சியையும் வைத்துக் கொண்டு மிகவும் எளிமையான கோலத்தில் இருப்பிடம் ஏதுமின்றி திருவண்ணாமலை வீதியில் திரிந்த அவர் நாளடைவில் அவ்வூர் மக்களின் அன்புக்குப் பாத்திரமாய் "யோகிராம் சுரத்குமார்' என்றும் "விசிறிசாமியார்' என்றும் அவர்களால் போற்றி அழைக்கப்பட்டார். தனக்கு வாய்க்கப்பட்ட இறையருளை தன்னை நாடிவரும் மக்களின் உடல் பிணிக்கும் மனஉளைச்சலுக்கும் மருந்தாகப் பயன் படுத்தினார். கலியுகத்தில் இறைவனை அடைய எளிய வழி ராம நாம ஜபமே என்று கூறி அதன் மகிமையை உணர்த்தினார். மக்கள் நலனுக்கு மட்டுமே பல அற்புதங்களை நிகழ்த்தினார். தன்னை நாடி பிரார்த்தனை செய்ய வரும் அன்பர்களிடம் ""எனது தந்தையிடம் (அண்ணாமலையார்) சொல்கிறேன், இந்த பிச்சைக்காரன் என்ன செய்ய முடியும்'' என்பாராம்.
இந்த அருளாளர் அவதரித்தது 1918 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தில். அவ்வகையில் இவ்வாண்டு 100 ஆவது ஜெயந்தி விழா தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அவரது ஜெயந்தி விழா அவரது ஆஸ்ரம வளாகத்திலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செஞ்சியில் உள்ள சிறுகடம்பூர் பகுதியில் அன்னை ஓம் பவதாரிணி நகரில் செயல்பட்டு வரும் சித்தாஸ்ரமத்தில் உள்ள ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் சிவன் கோயில் அருகில் புதியதாக பகவான் யோகிராம் சுரத்குமாருக்கு ஒரு மணிமண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் பகவானின் முழு உருவச்சிலை பிரதிஷ்டையாக உள்ளது. கும்பாபிஷேக வைபவம் நவம்பர் 17 ஆம் தேதி, வெள்ளியன்று(சுவாதி) நடைபெறுகிறது. இத்துடன் 100 ஆவது ஜெயந்தி விழாவும் நவம்பர் 11 முதல் தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, சிறப்பு ஹோமங்கள், பூஜைகள், பாராயணங்கள்,
சமயச் சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு - 94431 39459/ 93626 08374.