மணவாளனை வரவேற்கும் பத்து கன்னிகைகள்!
ஒலிவ மலையில் இயேசு அமர்ந்திருக்கையில் இயேசுவின் இரண்டாம் வருகை குறித்து சீடர்கள் இயேசுவிடம் கேட்டனர். அதற்கு அவர் ஓர் உவமை மூலமாகவிளக்கினார்.
ஒலிவ மலையில் இயேசு அமர்ந்திருக்கையில் இயேசுவின் இரண்டாம் வருகை குறித்து சீடர்கள் இயேசுவிடம் கேட்டனர். அதற்கு அவர் ஓர் உவமை மூலமாக
விளக்கினார்.
"" பரலோக ராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர் கொண்டு போகப் புறப்பட்ட பத்து கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். (மத்தேயு 25:1) அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும் ஐந்து பேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக் கொண்டு போனார்கள். எண்ணெயையோ கூடக்கொண்டு போகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடு கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள். மணவாளன் வரத் தாமதித்தபோது அவர்கள் எல்லோரும் நித்திரை மயக்கமடைந்து
தூங்கிவிட்டார்கள்.
நடுராத்திரியிலே "இதோ.. மணவாளன் வருகிறார். அவருக்கு எதிர்கொண்டு போகப் புறப்படுங்கள்' என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது அந்த கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.
புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி ""உங்கள் எண்ணெயில்
எங்களுக்கு கொஞ்சங்கொஞ்சம் கொடுங்கள். எங்கள் தீவட்டிகள் அணைந்து போகிறதே'' என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக, ""அப்படியல்ல, எங்களுக்குப் போதாமலிராதபடி நீங்கள் விற்கிறவர்களிடத்தில் போய் உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள்'' என்றார்கள்.
அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. கல்யாண வீடு மகிழ்வுடன் கொண்டாடப்பட்டது. விருந்தும் ஆட்டமும் பாட்டும் மணவாளனுடன் சென்றவர்கள் மிக சிறப்பாக வரவேற்றமைக்காக அன்பளிப்பும் பரிசும் கொடுக்கப்பட்டது.
புத்தியில்லாத ஐந்து கன்னிகைகள் எண்ணெய் கடைக்குச் சென்று தூங்கிக்கொண்டிருந்த கடைக்காரனை எழுப்பி எண்ணெய்யை வாங்கி தீவட்டிகளில் ஊற்றி எரிய வைத்து மணவாளனை வரவேற்க ஓடினார்கள். ஆனால் காலம் கடந்து விட்டது. மணவாளன் வீடு அடைக்கப்பட்டது. அவர்களுக்கு ஏமாற்றமும் வருத்தமும் கிடைத்தது. விருந்தும் கிடைக்காமல் போனது. இந்த உவமை கதையில் எப்போதும் புத்தியுள்ளவர்களாக விழித்திருக்க வேண்டும். இயேசுவின் இரண்டாம் வருகை எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை கூறினார். இது நமக்கு ஒரு நல்ல பாடம்.
கடவுளின் பிள்ளைகளாகிய நாம் இவ்வுலக வாழ்வில் புத்தியுள்ளவராக இயேசுவை வரவேற்போம். இயேசுவின் போதனைகளை கைக்கொண்டு நேர்மையான பக்தியுள்ள வாழ்வு கொண்டு நல்லவர்களாக வாழ்தல் வேண்டும். இது வருகையின் காலம், ஆயத்த காலம்.
இவ்வுலக வாழ்வை மகிழ்வுள்ள மேன்மையான புத்தியுள்ள வாழ்வாக மாற்றி கொள்ள இயேசு அழைக்கிறார். வாருங்கள், புத்தியுள்ள ஐந்து கன்னிகைப் போல்
வாழ்வோம்!