முகப்பு
வெள்ளிமணி

காட்டுப் பகுதியில் ஸ்ரீ கதிரியப்பர்!

எந்த ஒரு கோரிக்கையையும் பயபக்தியோடு ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியிடம் வைத்தால் அதை நாளை என்றில்லாமல் அப்போதே அந்த நொடியில் நமக்குஅருள்பாலிக்கக்கூடியவர் ஸ்ரீ நரசிம்ம சுவாமியாவார்.

Updated On : 26 ஏப்ரல், 2018 at 1:03 PM
பகிர்:

எந்த ஒரு கோரிக்கையையும் பயபக்தியோடு ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியிடம் வைத்தால் அதை நாளை என்றில்லாமல் அப்போதே அந்த நொடியில் நமக்கு
அருள்பாலிக்கக்கூடியவர் ஸ்ரீ நரசிம்ம சுவாமியாவார். குழந்தை பிரகலாதனை ரட்சிக்க உடனடியாக, ஒரு நொடியில் எடுத்த அவதாரம் அது. 
பொன், பொருள், செல்வத்தையும் திருமணம், மக்கட்பேறு பாக்கியத்தையும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் நினைத்த மாத்திரத்தில் நமக்கு அளிக்கும் பரந்தாமன் அவர். 
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் காட்டுப்பகுதியில் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் திருமால்வாடி, ஸ்ரீ கதிரியப்பர்' என்ற பெயரில் ஸ்ரீநரசிம்மர் நான்கு கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
இந்த ஆலயம், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறியமுடிகிறது. இந்தக் கோயிலுக்குப் பின்புறம் ஒரு பெரிய மலை அமைந்துள்ளது. பெரும் காட்டுப்பகுதியான இந்த மலைமீது ஸ்ரீ ராம, லட்சுமணர் அம்சமாகப் பெரும் பாறைகள் உள்ளன. இங்கு, ராம, லட்சுமணருக்கு முதலில் பூஜை செய்த பின்பே, ஸ்ரீ நரசிம்ம சுவாமிக்குப் பூஜை செய்யப்படுகிறது. ஆலயத்தின் பின்புறம் துளசி மாடம் உள்ளது.
இந்த நரசிம்மருக்கு ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் திருமஞ்சனமும் அலங்கார பூஜைகளும் செய்யப்படுகின்றன. குறிப்பாக, புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்புத் திருமஞ்சனமும் அலங்காரமும் பூஜைகளும் அன்னதானமும் நடைபெறுகின்றன. இவ்வாலயத்தில் இந்த நரசிம்மர் முன்பு அவரவர் குடும்பத்து திருமணங்களை நடத்தி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இங்கு, நரசிம்மர் முன்பு திருமணம் செய்து கொண்டால் தம்பதிகளின் வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருக்கும் என்பது ஜதீகம். 
ஆறு வருடங்களுக்கு முன்பு இக்காட்டுப்பகுதியில் இக் கோயில் வளாகம் சீரமைக்கப்பட்டு சிறு கோபுரமும் குட்டிக்கோயிலும் கொடிமரமும் சுற்றுப்புறச் சுவர்களும் எழுப்பி, அருகே ஒரு கொட்டகை மண்டபமும் கட்டி கும்பாபிஷேகமும் செய்யப்பட்டுள்ளது. காட்டுவழிப்பாதை சீரமைக்கப்பட்டு சாலை வசதி (மண் ரோடு) உள்ளதால் பக்தர்கள் ஆலயத்துக்கு வந்து செல்ல வசதியாக இருக்கிறது. மேலும் கோயில் அருகிலேயே திருமண மண்டபம் கட்ட ஏற்பாடாகி வருகிறது. 
ஒரு சமயம், இந்த மலையில் "தங்கப்புஷ்பம்' என்ற அரிய வகை மலர்க்கொடிகள் இருந்ததாகவும் அந்த தங்கப்புஷ்பத்தைப் பறிக்க அப்போது பல வெள்ளைக்காரர்கள் முயன்றதாகவும் அது முடியாமல் போனதுடன் அவர்கள் கண்களின் பார்வை பறிபோனதாகவும் அவ்வூர் மக்களின் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகிறது.
பாலக்கோடு பைபாஸ் சாலையில் இருக்கும் திருமால்வாடி என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. பயணம் செய்தால் மலையடிவாரத்தை அடையலாம். அங்கிருந்து பெரிய
மணற்சாலையில் சென்று மாந்தோப்பை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் நரசிம்மர் கோயிலை அடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.