முகப்பு
வெள்ளிமணி

திருவரங்கச் செல்லாயித் திருவிழா!

108 திவ்ய தேசங்களில் முதன்மையானது திருவரங்கம். வருடத்தில் முன்னூற்று இருபதுக்கும் மேற்பட்ட நாள்களில் திருவிழா நடைபெறும் திருக்கோயில் இது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:51 PM
பகிர்:

108 திவ்ய தேசங்களில் முதன்மையானது திருவரங்கம். வருடத்தில் முன்னூற்று இருபதுக்கும் மேற்பட்ட நாள்களில் திருவிழா நடைபெறும் திருக்கோயில் இது. 
காவிரியும் கொள்ளிடமும் இருபுறம் ஓடினாலும் அயலவர்களுக்காக பல திருத்தலங்களுக்குச் சென்றவர் திருவரங்கத்துத் திருமகன். ஆண்டு முழுவதும் அற்புதத் திருவிழாக்கள் களைகட்டும் திருவரங்கத்தில் சித்திரை மாதம் "விருப்பன் திருநாள்' எனவும் "சித்திரைத் திருவிழா' எனவும் அழைக்கப்படும் இத் திருநாள் 05.05,2018 முதல் தொடங்கி 15.05.2018 வரை நடை
பெறுகிறது. 
இந்நாள்களில் எவ்விதமான இடையூறுகளும் ஏற்படாமலிருக்க எல்லைப் பிடாரியான திருவரங்கத்து செல்லாயி அம்மன் கட்டுத்தேரில் பனைஓலைப் பிடாரியாக வலம் வருவாள். நம்பெருமாள் வலம் வரும் வீதிகளில் எல்லாம் எவ்விதமான தடைகள் இருந்தாலும் அவற்றை அகற்றி தீயவற்றை அழித்து நல்லனவற்றை உருவாக்குவதோடு தீயவை மீண்டும் உள்புகாதவாறு எல்லை அனைத்திலும் காப்பு கட்டுவார்கள். 
திருவரங்கச் செல்லாயியும் மற்றவர்களும் திருவரங்கத்துக்கு காப்பாக இருப்பதற்காக கேரளத்திலிருந்து வந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது. இவர்களின் பீடம் திருவரங்கத்தின் எல்லையிலேயே ரயில்வே ஸ்டேசன் சாலையிலேயே அமைந்துள்ளது. அதற்கு எதிரில் இருந்த இடங்கள் எல்லாம் இவர்களுக்கு உரியவையாக இருந்தன. சகோதரனான திருவரங்கத்து அரங்கனை தரிசனம் செய்ய அகில இந்திய அளவில் பக்தர்கள் வருவதை முன்னிட்டு ரயில் பாதை மட்டுமில்லாமல் ரயில் நிலையம் அமைக்கவும் தன் நிலத்தை விட்டுக் கொடுத்தவர்கள் திருவரங்கத்துச் செல்லாயி சகோதரிகளாகும். இவர்கள் எழுவருக்கும் திருவரங்கம் அம்மன் , செல்லாயி அம்மன், காஞ்சியம்மன், மாணிக்க நாச்சியம்மன், அய்யாளம்மன், மண்ணாயி அம்மன், பத்ரகாளி அம்மன் என அழைக்கப்படுகின்றனர். கருவறையில் விநாயகர், அய்யனார் ஆக ஒன்பது தெய்வங்களாகக் காட்சி தந்து 
அருளுகின்றனர். 
விருப்பன் திருநாள் என்னும் சித்திரை பிரம்மோற்சவத் திருவிழா துவங்கும் முன்பாக, 25.04.2018- இல் சந்நிதியில் இருக்கும் 9 பேருக்கும் கையில் காப்புக் கட்டி 5 நாள்கள் விரதமிருந்து சக்தியைத் அதிகரிக்கும் தவத்தில் இருப்பார்கள். தொடர்ந்து 01.05.2018 -அன்று காப்பு அறுத்து எழுவரும் ஓர் உருவமாக உருவாகி எல்லைகளுக்கு அடையவளைஞ்சான் வீதிகள் வழியாகச் சன்று சட்டி உடைத்து அனைத்து தடைகளையும் அகற்றி எல்லை நிர்ணயம் செய்து அந்த எல்லைக்குள் தவறான நோக்கத்துடன் எவரும் உள் புகாதவாறு எல்லை கட்டுவார்கள். அவ்வாறு வந்தால் அவைகள் தடுத்து நிறுத்தி துரத்தவோ அல்லது அழிக்கவோ ஏற்பாடு செய்து வருவார்கள். 
மீண்டும், 03.05,2018 -அன்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தவும் சரிபார்க்கவும் கோயிலைச் சுற்றியுள்ள அடையவளைஞ்சான் வீதிகளில் எழுவரும் எல்லைப்பிடாரி என்ற பெயரோடு பனைஓலை உருவத்து உற்சவராக தேரில் ஏறி உலா வந்து சரிபார்ப்பர். அவர்களுக்கு அங்கு மாவிளக்கு, பொங்கல் போன்றவை சமர்ப்பிக்கப்படும்.
04.05.2018 - வெள்ளிக்கிழமை அன்று மாலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்து இறுதியாக, பிடாரியம்மனின் வீதிகள் வழியாக வலம் வந்து சந்நிதியில் உள் புகுவார்கள்.
05.05,2018- அன்று கோயிலில் விடையாற்றி நிகழும்போது உபய நாச்சிமார்களுடன் நம்பெருமாள் திருவீதி கண்டளுள்வார். அன்று முதல் விருப்பன் திருநாள் அல்லது பிரம்மோற்சவம் துவங்கும். 
ஒவ்வொரு கோயிலிலும் ஆண்டு முழுவதும் நிகழும் அனைத்து உற்சவங்களிலும் தலைமை பிரம்ம (முதல்) உற்சவம் நடைபெறும். திருவரங்கச் செல்வனான நம்பெருமாளின் முதல் உற்சவம் சக்தி மிகுந்த திருவரங்கச் செல்லாயி சகோதரிகள் சரிபார்த்து சொன்ன பிறகே நடைபெறுகின்றன என்பதே பலருக்கும் தெரிந்திராத உண்மை. இத்திருவிழா குறித்த மேல் விவரங்கள் வேண்டுவோர் கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். 

தொடர்புக்கு: 96985 54281. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.