வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! - 21

பொருநையின் நீர்ப்பாசனத்திற்கும் பொருநைக் கரை மக்களின் பயன்பாட்டுக்கும் இன்று மிகப் பெரிய அளவில் பங்காற்றும் பாபநாசம் அணைத் திட்டம், தொடக்கத்தில் நிறையத் தடங்கல்களைக் கண்டுள்ளது.

டாக்டா் சுதா சேஷய்யன்

பொருநையின் நீர்ப்பாசனத்திற்கும் பொருநைக் கரை மக்களின் பயன்பாட்டுக்கும் இன்று மிகப் பெரிய அளவில் பங்காற்றும் பாபநாசம் அணைத் திட்டம், தொடக்கத்தில் நிறையத் தடங்கல்களைக் கண்டுள்ளது. நெல்லைப் பகுதியை ஆண்டுவந்த பாண்டியர்களும் நாயக்கர்களும் ஜமீன்தார்களும் ஆங்காங்கே வாழ்ந்து வந்த தனவந்தர்களும், பொருநை மற்றும் துணையாறுகளின் நீரைச் சேகரித்துப் பயன்படுத்தும் வகையில் அணைகளையும் தடுப்புகளையும் கட்டியிருந்தனர். பிரிட்டிஷார் இந்தப் பகுதியின் ஆளுகையைக் கையில் எடுப்பதற்கு முன்னரும், ஸ்ரீ வைகுண்டம் அணைத் திட்டத்தை அவர்கள் செயல்படுத்துவதற்கு முன்னரும், முக்கியமான சிறிய அணைக்கட்டுகள் என்னும் வகையில், ஏழு அணைகளைத் திருநெல்வேலி ஜில்லா கெஸட் பதிவுகள் குறிப்பிடுகின்றன. 

கோடை மேலழகியான் அணை, நதியுண்ணி அணை,  கன்னடியன் அணை, அரியநாயகிபுரம் அணை, சுத்தமல்லி அணை, பழுவூர் அணை, மருதூர் அணை ஆகியவற்றோடு ஸ்ரீவைகுண்டம் அணையும் சேர, இவை எட்டாயின. இருந்தாலும் நீர்ப் பாசனத் தேவைகளை இவை முறையாகப் பூர்த்தி செய்யவில்லை என்பதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சிலர் கவனித்தனர். பொருநையின் உபரி நீர், பயன்படுத்தப்படாமலே கடலில் கலந்தது. தவிரவும், போதிய மழை இல்லாமல், நெல்லைச் சீமை முழுவதுமே அவ்வப்போது தவித்தது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தாமிரவருணியின் தலைப் பகுதிகளிலேயே நீரைச் சேகரித்துப் பயன்படுத்தும் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்காக அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். கர்னல் ஏ.டி.கால்டன் என்பவர் இதனை முதன்முதலில் தொடங்கினாலும், நாம் ஏற்கெனவே சந்தித்திருக்கும் கேப்டன் ஹார்ஸ்லி, 1854-55-இல் பாபநாசத்திற்குப் பயணித்து, மக்களை நேரில் சந்தித்து, அணுஅணுவாகப் பார்வையிட்டு, சொரி முத்தையனார் கோயிலுக்கு அருகில் அணை அமைக்கும் திட்டத்தை வரையிட்டார். 

பாணதீர்த்தம் வரையிலும் அணையை விரிவுபடுத்தலாம் என்றும், பெரிய ஏரி ஒன்றைக் கட்டலாம் என்றும் கூறிய இவர், தூத்துக்குடி, புன்னைக்காயல், குலசேகரப்பட்டணம் ஆகிய கடலோரப் பகுதிகளோடு அம்பாசமுத்திரத்தை இணைப்பதான படகுப் போக்குவரத்துத் திட்டம் ஒன்றையும் தீட்டினார். அரசாங்கம் ஆர்வம் காட்டாததால், இவருடைய கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டன.  லெஃப்டினன்ட் ராபர்ட்ஸ், பொறியாளர் பேக்ஸ்டன் என்று தொடர்ந்து வந்தவர்களின் ஆலோசனைகளும் ஆழத்தில் புதைந்தன. 

1872-இல், அப்போதைய நெல்லைக் கலெக்டர் ரிச்சர்ட் பக்கிள், அரசாங்கத்தின் வருவாய்க் குழுவுக்குப் பாபநாசம் திட்டம் குறித்த விரிவான ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார்; கூடுதலாக, தன் பங்குக்கு, கடனா ஆற்றுப் பகுதியிலும் இவ்வாறே அணைக்கட்டுகள் அமைக்கப்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். பக்கிள் கொடுத்த அழுத்தத்தால், நார்ஃபோக் என்னும் பொறியாளரை அரசு அனுப்பியது. சுவாரசியமில்லாத எதிர்மறை அறிக்கையை நார்ஃபோக் தர, 1851- இல் தொடங்கி அவ்வப்போது பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட பஞ்சங்கள் பிரச்னையை அதிகமாக்க, கட்டுமானப் பொறியாளரான மேஜர் மல்லின்ஸ், 1875-இல் தன்னுடைய அறிக்கையைக் கொடுத்தார். மலைகளுக்கிடையில் பொருநையாள் பாயும் இடத்திலேயே அணையை அமைத்தால், நீர்ச் சேகரிப்பு அதிகமாகும் என்றும், பாசன வரன்முறை விரிவடையும் என்றும் ஆலோசனை சொன்னார். வறண்டு கிடக்கும் விவசாயிகளின் வாழ்வு வேர் பிடித்தால், அவர்களும் மகிழ்வார்கள்; அரசுக்கும் நில வருவாய் கூடுதலாகக் கிடைக்கும் என்று தூண்டிவிட்டார். இருந்தபோதினும், அவ்வப்போது புதுப்புது அலுவலர்களையும் பொறியாளர்களையும் ஆய்வுக்காக அனுப்பி, திட்டத்தைத் தாமதப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் தேடியதைத் தவிர, அணைத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளவில்லை. 

1894-இல், கலெக்டர் மெக்லியாட் மீண்டுமொரு கோரிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்தார். ஆனால், பொறியாளர்கள் அனைவரும் எதிர்க்குரல்களையே கோப்புகளில் பதிவிட்டனர். 1911-இல் கலெக்டரான ஆஷ் அவர்களும் (ஆமாமாம், வாஞ்சிநாதன் புகழ் கலெக்டர் ஆஷ்தான்), மழை அளவுகளையும் ஆற்று வரத்தையும் துல்லியமாகப் பதிவிட்டுப் பாபநாசம் திட்டத்தைத் தீவிரமாக வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, தலைமைப் பொறியாளர் மேஜர் எச்.ஜி. ஹோவர்ட், நீர்ப்பாசனத் திட்டமாக மட்டுமல்லாமல், புனல் மின் திட்டத்தையும் இங்கு செயல்படுத்தலாம் என்பதை விளக்கினார். நேரில் சென்று குறிப்பிட்ட இடங்களை மறு ஆய்வு செய்து செயல் திட்டத்தை வகுக்கும்படி, லெஃப்டினண்ட் கர்னல் எம்.சி.பிளாட் என்பாரை ஹோவர்ட் அனுப்பினார். 

பஞ்சத்திலும் வெள்ளத்திலும் மாறி மாறி அடிபட்டு, இடையில் நோய்களாலும் அவதிப்பட்ட உள்ளூர்வாசிகள்,  நீண்ட கோரிக்கை ஒன்றை, 1937, செப்டம்பர் 19 -ஆம் தேதி அன்று அரசுக்கு அனுப்பினர். தாமிரவருணிக் கரைகளின் வேளாண் நிலங்களைக் காப்பாற்றித் தருமாறு கண்ணீரோடு வேண்டினர். சேரன்மாதேவியின் பெருந்தனக்காரரான ஆர். சுப்பிரமணிய ஐயர், வேளாண் மக்களின் சார்பாக அரசுக்கு அவசரத் தந்தி அனுப்பினார். 1934 -ஆகஸ்டிலேயே, மதராஸ் மாகாண மேல் சபையில், டேவிட்சன் என்னும் உறுப்பினர், பாபநாசம் அணைத்திட்டம் குறித்துக் கேள்விகளை எழுப்பினார். 1938, மார்ச் 19ஆம் தேதி, அப்போதைய பொதுப் பணித் துறை (மராமத்துத் துறை) மந்திரியை நேரில் சந்தித்து, திட்டத்தை விரைவில் செயல்படுத்துமாறு சட்ட சபை உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தினர். 

இத்தனைப் போராட்டங்களுக்குப் பின்னர், 1938, மார்ச் 29- ஆம் நாள், பாபநாசம் நீர்த்தேக்கத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. பிளாட் கொடுத்த செயல்திட்டம் ஒத்துக்கொள்ளப்பட்டு, காரியாறு பகுதியில் மேலணையையும், சேர்வலாறு சேரும் பகுதியில் கீழணையையும் கட்டுவதாக முடிவெடுக்கப்பட்டது. 

- தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT