வெள்ளிமணி

புட்லூர் கோயில் வளைகாப்பு விழா!

தினமணி

கோடை காலம்.. காட்டுப்பாதை ஒன்றில் கணவனும் மனைவியும் நடந்து சென்றனர். அந்தப் பெண்ணோ நிறைமாத கர்ப்பணி! அவர்கள் அருகில் உள்ள ஊரைத்தேடிச் செல்கிறார்களா.. அல்லது வேறு எங்காவது செல்கிறார்களா..? என்று தெரியவில்லை. தாகத்தால் நாவறண்டு தவித்தாள் கர்ப்பிணி. கணவனுக்கோ என்ன செய்வது என்று புரியாத நிலை.
 "இப்போது தண்ணீர் வேண்டும். தண்ணீர் அருந்தாமல் அவளால் ஒரு அடி எடுத்து வைப்பதும் இயலாத காரியம். இனி, அவளால் நடக்கமுடியாது என்பது புரிந்துவிட்டது. தவித்தான் கணவன். வேறு வழியில்லை, அவளை தனியே விட்டுத்தான் செல்ல வேண்டும். ஒரு மரநிழலில் மனைவியை அமர வைத்துவிட்டு தண்ணீர் கொண்டு வர சென்றான்.
 கர்ப்பிணி காத்திருந்தாள்.. ஒரு வாய் தண்ணீர் கிடைத்தாலும் போதும் என்ற நிலை! என்ன செய்வாள்? தாகத்தின் தீவிரம் அவளை வாட்டியது. தொண்டை உலர்ந்தது. நேரம் நகர்ந்தது. சென்ற கணவன் திரும்பி வரவில்லை. இந்த நிலை நீடித்தால் மரணம் வந்துவிடும் என்று புரிந்தது. வயிற்றுக்குள் குழந்தை புரண்டது. கடவுளை நெஞ்சுருக வேண்டிக்கொண்டாள். தாகத்தின் தீவிரத்தால் மயங்கி மல்லாந்து சரிந்தாள்; உயிர் பிரிந்தது. காலங்கள் சென்றன. மல்லாந்து படுத்த நிலையைலேயே புற்றுருவாக மாறிப்போனாள்அந்த தெய்வப்பெண்.
 இந்த சம்பவம் நடைபெற்று பல நூற்றாண்டுகள் கடந்த நிலையில் அந்த வனம் வயல் காடாக மாறிவிட்டது. விவசாயி ஒருவன் தன் நிலத்தை உழுது கொண்டிருந்தபோது கலப்பையில் ஏதோ தட்டுப்பட்டது. என்ன என்று பார்த்தபோது அங்கு பூமியிலிருந்து ரத்தம் பெருகி வருவதைக் கண்டான். ரத்தத்தைக் கண்டதும் மயங்கிச் சரிந்தான். செய்தி வேள்விப்பட்டு ஊர் மக்கள் ஓடி வந்தனர்.
 அப்போது அங்கிருந்த ஒரு பெண் மீது அம்மன் அருள் தோன்றி, தான் அங்காளபரமேஸ்வரி என்றும் தனக்கு ஓர் ஆலயம் அமைத்து வழிபட்டுவந்தால் தாம் காத்து அருள்வதாகவும் கூறியதாக செவிவழித் தகவல் தெரிவிக்கிறது. அவ்வாறே, ஆலயமும் அமைக்கப்பெற்று மக்களை காத்துவருகிறாள் பூங்காவனத்தில் வீற்றிருக்கும் அங்காளபரமேஸ்வரியான பூங்காவனத்தம்மன். அந்த உழவனின் பரம்பரையே இன்றும் இவ்வாலயத்துக்கு பூசாரிகளாக இருந்து வருகின்றனர்.
 சென்னை- திருவள்ளூர் தொடர்வண்டி மார்க்கத்தில் புட்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு அங்காளபரமேஸ்வரி ஆலயம். சிறிய கோபுரம் நம்மை வரவேற்கிறது. ஆலயத்தில் நுழைந்ததும் நாம் காண்பது மஹா மண்டபம். இந்த மண்டபத்தை தாண்டி உள்ளே சென்றால் கருவறையை காணலாம். கருவறையை சுற்றி வந்து அம்மனைத் தரிசிக்கும் படியாக சிறிய கம்பிகளால் சாளரம் போன்ற தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் வழியே புற்றுருவான அம்மனை தரிசித்தபடியே கருவறைக்கு நேராக வருகிறோம். அங்கு, எலுமிச்சம்பழம் பிரசாதமாக தரப்படுகிறது. பெண்கள் தங்கள் சேலை முந்தானையில் எலுமிச்சம் பழத்தை பிடித்துக்கொள்ள வேண்டும் என்பது பொது விதி.
 மேலும் அம்மனுக்கு பூவும் வளையலும் சாற்றுவது விசேஷம் என்பார்கள். திருமணம், பிள்ளைப்பேறு வேண்டுவோர் எலுமிச்சம்பழம் எடுத்துக்கொண்டு ஈரத்துணியுடன் ஆலயத்தை வலம் வருகின்றனர். பின்னர், அப்பழத்தை பூசாரியிடம் தருகின்றனர். பூசாரி, அப்பழத்தை அம்மனின் பாதத்தில் வைத்து உத்தரவு கொடுக்கும்படியாக வேண்டுவார். வேண்டுதல் செய்யும் பெண்கள் அம்மனின் பாதத்தின் கீழ் முந்தானையை விரித்துப் பிடித்தபடி உட்கார்ந்து கொள்வர். அவர்கள் வேண்டிக்கொண்ட காரியம் விரைவில் நடைபெறும் என்றால் அந்த எலுமிச்சம்பழம் தானே மடியில் வந்து விழும். சிலர் நீண்டநேரம் கூட காத்திருப்பார்கள்.
 பொதுவாக, இது குழந்தைபாக்கியத்திற்கு உகந்த தலமாகக் கருதப்படுகிறது. காரணம் மூலஸ்தானத்தில் அருளும் அருள்மிகு அங்காளம்மன் நிறைமாத கர்ப்பிணியாக இங்கு கோயில் கொண்டுள்ளதால் இவ்வூரில் ஏற்படும் நோய்நொடி பிணி பீடைகளைக் களைவதுடன் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியத்தை அருளும் அன்னையாக விளங்குகிறாள். இக்கோயில் தினமும் காலை முதல் மாலை வரை திறந்திருக்கும்! செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.
 இக்கோயிலுக்கு வலப்பக்கத்தில் மற்றொரு புற்றும் காணப்படுகிறது. அருகிலேயே வேப்பமரங்கள் உள்ளன. இம் மரங்கள் திருமண பாக்கியம் வேண்டுபவர்களால் கட்டப்படும் மாங்கல்ய சரடுகளால் நிரம்பியிருக்கின்றது. அதேபோன்று குழந்தை வரம் வேண்டி கட்டப்படும் தொட்டில்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகம்.
 புத்திரபாக்கியம் வேண்டி வரும் பெண்கள், அம்மனின் அருளால் கருவுற்றதும் இக்கோயிலுக்கு வந்து வளைகாப்பு நடத்துவதாக வேண்டிக்கொள்கின்றனர். அதன்படியே இங்கு வந்து அம்மனின் அருளாசியுடன் சீமந்த வைபவத்தினை உற்றார் உறவினர் புடைசூழ நடத்துகின்றனர். இச்சீமந்த வைபவம் இவ்வாலயத்திற்கே உரிய தனிச்சிறப்பாகும்.
 - மோகனாமாறன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT